Today Bible Verse

St. Edmond History in Tamil

     இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்து, கிறிஸ்தவச் சபையின் வாழ்க்கையில் பங்கெடுத்து, அத்தியட்சகராகப் பணியாற்றியவர் பரி. எட்மண்ட், அவர் அக்காலத்திலிருந்த ஆட்சி முறைகளால் பல இன்னல்களுக்குட்பட்டார். தம் செலவிற்காக அரசன், குருக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கட்டாயமாகப் பணம் வசூல் செய்தான். அவனைக் கண்டிக்கவோ அல்லது தடுத்துச் சொல்லவோ மனமில்லாத நிலைமையில், அவர் தம் நாட்டைவிட்டுப் பிரான்சுக்கு சென்றார். அநேக ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வாறான நிலைமையில் பிரான்சு நாட்டைப் புகலிடமாகக் கொண்ட ஸ்டீபன் லாங்டனைப்போல, இவரும் தம் தாய்நாட்டைவிட்டு அங்குச் சென்று தம் பிற்காலப்பணியைச் செய்து மரித்தார்.

     பரி. எட்மண்ட் பர்க்ஷரியஸ் பிறந்தார். அவருடைய தந்தை ரெனால்ட் ரிச் ஒரு வணிகர். அவருடைய தாயின் பெயர் மபில்லா இவர்களுக்குப் பரி. எட்மண்டைச் சேர்த்து நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இவரைத் தவிர ஒரு ஆண், இருவர் பெண்கள். அவருடைய குடும்பம் செல்வம் படைத்த குடும்பமன்று. ரெனால்ட்ரிச் தம்முடைய வருமானத்திலிருந்து தொழிலை நடத்துவதற்கு ஒரு பகுதியை ஒதுக்கிவைத்துவிட்டுத் தம்முடைய குடும்பச் செலவிற்கும், பிள்ளைகளின் படிப்பிற்கும் மீதியானதைப் பயன்படுத்தி வந்தார்.

     பிரபல வியாபாரியாகவோ, அல்லது ஒரு ஐசுவரியவானாகவோ வாழ வேண்டுமென்ற எண்ணம் அவருக்குக் கிடையாது. அவருடைய மனைவியாகிய மபில்லா அன்பும், அருளும் நிறைந்த ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவளாவாள். கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் வளரவும், அவருடைய அன்பைப் பூரணமாக உணரவும் ஆர்வம் கொண்ட ஒரு கிறிஸ்துவின் அடியாள் அவள். அவள் உபவாசித்து, நடுநிசியில் நடக்கும் ஆலய வழிப்பாட்டிற்குச் சென்று, கிறிஸ்தவ வாழ்க்கையில் தன்னுடைய பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக விளங்கினார்.

     சிறுவனாய் இருக்கும்போதே பரி. எட்மண்ட் பக்தியுணர்ச்சி உள்ளவராகக் காணப்பட்டார். பக்தி நெறியில் வளர்வதற்கு அவருடைய தாய் தம்முடைய போதனையினாலும், சாதனையினாலும் வழி நடத்தினாள். ஞாயிற்றுக்கிழமைகளிலும், திருநாட்களிலும், காலை ஆகாரம் அருந்துமுன் அவர் முழங்காலினின்று, தம்முடைய தாய் குறித்துக்கொடுத்த தாவீதின் சங்கீதங்களைப் படித்து மனப்பாடம் செய்வார். தாயின் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுடன் ஆத்தும வளர்ச்சியில் உச்சநிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேதத்தை ஊன்றிப் படித்து, ஜெபத்திலும், தியானத்திலும் அநேக நேரம் செலவழிக்க ஆரம்பித்தார். வாலிபனாகயிருக்கும் பொழுதே சமயத் தொண்டராகத் தம் வாழ்நாட்களைத் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்தார்.

     பள்ளிக்கூடத்தில் தம் பாடங்களில் தேர்ச்சிப் பெற்ற பரி. எட்மண்ட் கல்லூரிப் படிப்பிற்காக ஆக்ஸ்போர்டு சென்றார். அங்கு பல்கலைக்கழகத்தில் கருத்தூன்றிப் படித்து, பரந்த அறிவும், திருமறையில் புலமையும் பெற்று, சொல்வன்மைப் படைத்தவராகத் திகழ்ந்தார். பக்தியும், ஜெப வாஞ்சையும் உள்ளவராக யாவராலும் அழைக்கப்பட்டார். அவரும் அவர் சகோதரரான ராபர்ட்டும் தங்கள் படிப்பைப் பாரிஸ் சர்வகலாசாலையில் தொடர்ந்து முடிக்க வேண்டுமென்று விரும்பி அவர்கள் பிரியுமுன், இருவருக்கும் ஒவ்வொரு உரோம உடையைக் கொடுத்து, அவைகளை வாரத்திற்கு இருமுறை உடுத்தி, உபவாசம் செய்ய வேண்டுமென்று கற்பித்து அனுப்பினாள். அவைகளை அணிந்துகொண்டு உபவாசத்தின் மூலமாய், உலக உல்லாசங்களை வெறுக்கும்படி அவர்கள் ஞாபகப்படுத்தப்படுவார்கள் என்பது அவளுடைய கருத்து.

     பரி. எட்மண்ட் பாரிஸ் கலாசாலையில் படித்துக் கொண்டிருக்கும்போது, தனிமையான இடம் தேடி, அங்கு சென்று தியானித்து, ஜெபிப்பது அவருடைய வழக்கமாயிருந்தது. தம்மைப் போலவே பக்தி நெறியில் வளர்க்கப்பட்டு, கடவுளைத் தேடி அவரைப் பற்றிய அறிவில் முன்னேற வேண்டுமென்று விரும்புபவர்களை அவர் தம்முடைய நண்பர்களாகத் தெரிந்துக்கொண்டார். உபவாசத்தினால் தம்முடைய புலன்களை அடக்கித் தரையிற் படுத்துறங்கி. இரவில் வெகு நேரத்தை ஜெபத்தில் செலவிட்டு வந்தார். நமதாண்டவரின் சிலுவைப்பாடுகளைக் குறித்துத் தியானிப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.

     அங்கிருக்கும்பொழுது, அவருடைய தாய் நோய்வாய்ப்பட்டு. உடல் நிலை கவலைக்கிடமாயிருப்பதாகக் கேள்விப்பட்டு அவர் தம் சொந்த நாட்டிற்குத் திரும்பினார். உயிர் நீக்கும் தருவாயில், தாய் தன்னுடைய ஆசியை அவருக்குமட்டும் அளித்தாள். தம்முடைய சகோதரனையும் இரு சகோதரிகளையும், அவள் ஆசீர்வதிக்காமல் இருப்பதைக் கண்டு அவர்களையும் ஆசீர்வதிக்கும்படி கேட்டார். எட்மண்ட் அதற்கு அவள் “என் ஆசீர்வாதங்களை உனக்குக் கொடுத்திருக்கிறேன் மகனே, உன் மூலமாகப் பரலோகத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்களில் அவர்கள் பங்கு பெறுவார்கள்” என்று சொல்லி அவ்வம்மையார் மரித்தாள். பரி. எட்மண்ட் தம்முடைய சகோதரிகளின் காரியங்களை ஒழுங்குபடுத்திவிட்டு மீண்டும் பாரீசுக்கு திரும்பினார்.

     பின்பு அவர் நுண்கலையிலும், கணிதத்திலும், கவனம் செலுத்திக் கற்று, பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெற்றார். அதன் பின்பு அவர் ஆறு வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியராகத் திறமையுடனும், ஆர்வத்துடனும் மாணவர்களுக்குப் பாடங்களை கற்றுக் கொடுத்தார். அவருடைய விரிவுரைகளைக் கல்லூரி மாணவர்கள் கேட்டுப் பயன்பெற்றார்கள். ஊக்கமும், விடா முயற்சியுமுள்ளவராதலால், அவர் எடுத்துக் கொண்ட காரியங்களையெல்லாம் திறமையுடன் செய்தார்.

     ஓர் இரவு தன் தாயாரைக் கனவில் கண்டார். திரித்துவத்தைக் குறித்துத் தியானிக்கும்படி அவர்கள் சைகை காட்டியதாக அவர் அறிந்தார். அந்நாள் முதல் பரி. எட்மண்ட் வேத சாஸ்திரம் கற்க ஆரம்பித்தார். பேராசிரியராகப் பணியாற்றுவதை விட்டுவிட்டுச் சமயப் பணியையே வாழ்கைத் தொண்டாகக் கொண்டார். வேத அறிவிலும், ஞானத்திலும், பக்தியிலும் சீக்கிரத்தில் வளர்ந்தார். குருவாக அவர் அபிஷேகம் பண்ணப்பட்டபொழுது அவருடைய போதனைகளும், பிரசங்கங்களும் வெகுவாகப் பாராட்டப்பட்டன. அவருடைய போதனைகளைக் கேட்டு அவரைச் சேர்ந்து அவருடன் வாழ்ந்த அநேகர் பிற்காலத்தில் புகழ் வாய்ந்த குருக்களாகவும், பக்தர்களாகவும் விளங்கினர்.

     1219 ஆம் ஆண்டில் அவர் ஆக்ஸ்போர்டுக்குத் திரும்பி 1226 ஆம் ஆண்டு வரையில் ஆக்ஸ்போர்டுஷயர், சிலஸ்டர் முதலான பாகங்களில் பிரசங்கம் செய்து வந்தார். பல்வேறு பணிகளில் அவர் தொண்டாற்றும்படி அழைக்கப்பட்டார். ஆனால் பிரசங்கியாகப் பணியாற்றி மக்களுக்குச் சுவிசேஷத்தைத் தெரிவிப்பதையே அவர் விரும்பினார். சாலிஸ்பரி கதீட்ரலின் பொருளாளராகச் சிலகாலம் பணியாற்றினார். பலஸ்தீனா நாட்டில் முகமதியரால் கிறிஸ்தவ மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைத் தவிப்பதற்கான யுத்தத்தில் பங்கு பெறுவதற்கு பிரசாரம் செய்யும்படி அத்தியட்சகரிடமிருந்து உத்தரவு வந்தது. சிலகாலம் அவர் ஈடுபட்டிருந்தார். எந்த வேலையிலும் திறமையோடும், பொறுப்புணர்ச்சியோடும் அவர் உழைத்து வந்தார்.

     பரி. எட்மண்ட் பொதுமக்களின் மனதைக் கவர்ந்து, அவர்களின் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும்படிப் பிரசங்கம் செய்யும் வரம் பெற்றிருந்தார். அக்காலத்தில் வில்லியம் லாங்க்ஸ்பியர் என்ற சாலிஸ்பரியின் பிரபு தம் ஆத்தும நல்வாழ்க்கையை அசட்டை செய்து வந்த பிரபுக்களில் ஒருவராவர். அவர் பரி. எட்மண்டின் பிரசங்கத்தைக்கேட்டு, மனமாறுதலடைந்து கிறிஸ்துவுக்குத் தம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்தார். இவருடைய நல்வாழ்க்கையைக்கண்டு அநேக மக்கள் கிறிஸ்துவண்டை இழுக்கப்பட்டார்கள். ஜெபத்தின் மூலமாய் மக்களுள் கடவுள் வல்லமையாய் கிரியை செய்யும்படி ஜெபக்குழு ஒன்றை அமைத்தார்.

     அப்பொழுது கந்தர்புரி அத்தியட்சகரின் இடம் காலியாயிற்று ரோமாபுரியிலுள்ள போப் அதில் பரி. எட்மண்டை நியமிக்க விரும்பி இங்கிலாந்து அரசனான மூன்றாம் ஹென்றியின் அனுமதிபெற்று இவரை அந்த பொறுப்பிற்கு நியமித்தார். 1234 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பரி. எட்மண்ட் கந்தர்புரி அத்தியட்சகராக அபிஷேகம் பண்ணப்பட்டார். இப்பதவியை ஏற்றபின்பு, மக்களிடத்தில் காட்டும் அன்பிலும், பக்தியிலும் அவர் அதிகமாக வளர்ந்தார். அமைதியாகவும், தாழ்மையுடனும் தம் அலுவல்களைச்செய்து ஏழை, எளியவர்களின் நல்வாழ்வுக்காக அவர் உழைத்தார். சிலர் அவரைப் பண்டைகால அத்தியட்சகரென்று ஏளனம் செய்தார்கள். தமக்குக் கீழ்ப்பட்ட நீதிமன்றங்களிலுள்ள ஊழல்களை ஒழிக்கவும் அவர் முற்பட்டார். இக்காரியங்களை அவர் செய்வதைச் சிலர் விரும்பாமல், அவரை எச்சரித்துத் தடுத்தார்கள். அதற்கு அவர், “கடவுளால் ஏவப்பட்டு ஏழைமக்களின் நன்மைக்காக நான் செய்யும்போது என் கைகளைத் துண்டித்து, என் கண்களை பிடுங்கி துன்புறுத்தினாலும் அதை நான் பாக்கியமாகக் கருதுவேன்” என்று கூறினார்.

     பரி. எட்மண்டின் நீதி தவறாத நடத்தையும், சபைகளின் நிர்வாகத்தில் காணப்பட்ட ஊழல்களை ஒழிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் சில மக்களுக்குக் கோபத்தை உண்டாக்கிற்று, அவருக்குப் பகைவர் ஏற்பட்டனர். அவர் அதை அறிந்தும் அதனால் கலக்கம் அடையவில்லை. மனத்தளர்ச்சியும் அடையவில்லை, இன்னல்கள் தம் ‘ஆத்துமாவை பலப்படுத்தும் உணவு’ என்று அவர் கூறிவந்தார். துன்பங்களை மகிழ்வுடன் பொறுத்தார்.

     இந்நிலையில் அரசினராலும் அவருக்கு இன்னல்கள் உண்டாயின. பொருளாதாரத் துறையில் மூன்றாம் ஹென்றி என்ற அரசன் நிபுணர்களைக் கலந்து ஆட்சி செய்ய தவறினான். அரசாட்சியை நடத்த அவனுக்குப் பணம் தேவையாயிருந்தது. எனவே பல்வேறு வகைகளில் பொது மக்களிடமிருந்தும் சமயப் பணியில் ஈடுபட்டவர்களிடமிருந்தும் பணம் வசூல் செய்ய ஆரம்பித்தான். ஆலயங்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி, அவைகளின் கண்காணிப்புக்காக உழைத்துவந்த குருக்களின் பதவிகளைக் காலியாக வைத்தும், அருகதையற்றவர்களை நியமித்தும் சபையின் நல்வாழ்வைக்கெடுத்து வந்தான். தம்முடைய மனச்சாட்சிக்கு விரோதமாகவும், தம்முடைய சம்மதமின்றியும் காரியங்கள் நடப்பதைக் கண்ட பரி. எட்மண்ட், தம் பதவியைவிட்டு விலகி வேறு இடம் செல்வது நல்லதென்று உணர்ந்து, தம் நாட்டைவிட்டுப் பிரான்சுக்குச் சென்றார்.

     அவருடைய புலமையையும் அவருடைய தூய வாழ்க்கையையும் அறிந்து பாரிஸ் மாநகரத்து மக்கள் அவரை மகிழ்வுடன் வரவேற்றார்கள். ஜான் அரசன் காலத்தில், இங்கிலாந்தைவிட்டுப் பிரான்சில் புகலிடம் புகுந்த ஸ்டீபன் லாங்டனைப்போல், பரி. எட்மண்டும் சிஸ்டரியன் அபே என்னும் மடத்திற்குச் சென்று, அதனைச் சுற்றியுள்ள ஆலயங்களில் பிரசங்கம் செய்து ஊழியம் செய்தார். அங்கிருக்கும்பொழுது உடல்நலம் பாதிக்கப்படவே, மருத்துவரின் ஆலோசனைப்படி செசி என்னுமிடத்திற்குச் சென்று அங்கு தம்முடைய பிற்கால நாட்களைக் கழித்தார்.

     செசியிலிருக்கும்பொழுது அவர் உடல் நலம் குன்றிப் போயிற்று. “ஆண்டவரே, உம்மிலே நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். உம்முடைய சித்தத்தின்படி செய்வதே எனக்கு மகிழ்ச்சி. உமக்கு நன்மையானது எதுவோ அதைச் செய்யும்” என்று அவர் ஜெபிப்பார். அவர் முழங்காலினின்று ஜெபிக்கும்போது அவருடைய முகம் மலர்ச்சி அடைந்து பிரகாசமாகத் தோன்றும். சிறு வயதிலிருந்தே, இயேசுவின் நாமத்தை உச்சரித்துப்போற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அவருக்கு உண்டு. அவருடைய கடைசி நேரத்திலும் அதையே சொல்லிக் கொண்டிருந்து. 1242 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினாறாம்தேதி ஆண்டவரின் திருப்பாதம் சேர்ந்தார்.

இறப்பு: கி.பி. 1242, நவம்பர் 16

Posted in Missionary Biography on November 04 at 12:02 PM

Comments (0)

No login
gif