பரி. டயோனிசியஸ் கி.பி. 195 ஆம் ஆண்டில் யூதகுலத்திலல்லாத குடும்பத்தில் பிறந்தார். இவர் யாவரும் விரும்பத்தக்க சகல நற்குணங்களும், வேத அறிவும் உள்ள கவிஞர். பரி. வேதாகமத்தில் பொதிந்துக்கிடக்கும் பொக்கிஷங்களை இவர் பொறுக்கி எடுத்து, அவைகளின் நுட்பங்களை ஆராய்ந்து அவைகளின் சிறப்பை உலகறியச் செய்த பேரறிஞர். பிற்காலத்தில் தோன்றிய பக்தர்கள் இவர் எழுதி வைத்துப்போன திருமறை போதகங்களை வெகுவாய் பாராட்டி வந்தார்கள். “திருச்சபையின் ஆசிரியர்” என்று பரி. அதநேஷியஸ் இவரை அழைத்தது மிகவும் பொருத்தமாகும்.
இவர் ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்ததால் உல்லாசமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் உலகப்பிரகாரமாக வாழ்ந்து பெரிய பதவியை அடைய அவர் விரும்பவில்லை. அவைகளில் டயோனசியசின் மனம் நாட்டம் கொள்ளவில்லை. பரி. பவுலின் நிருபங்களை வாசித்து அவர் மனம் மாறினார். பரி. ஆர்ஜினுடைய போதனைகள் அவருடைய மனதைக் கவர்ந்தன. அலெக்ஸாண்டிரியாவின் அத்தியட்சகரான டிமிட்ரியஸ் என்பவரால் ஞானஸ்நானம் பெற்றார். பின்பு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து, ஜெபத்திலும், தியானத்திலும் தம் நாட்களை செலவிட்டார். அவருடைய தூய வாழ்க்கையையும், வேத அறிவையும், ஊக்கத்தையும் கண்டு, வேதாகமப் பள்ளியில் ஆசிரியராக நியமித்தார்கள். அவருடைய நற்குணங்களைக்கொண்டும், வேத அறிவைக் கொண்டும் அப்பள்ளிக்கு அவர் ஒரு சிறந்த ஆபரணமாக விளங்கினார்.
அக்காலத்தில் ஹெராக்கிளாஸ் வேதாகமப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் அலெக்சாண்டிரியாவின் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டபோது பரி. டயோனிசியஸ் அப்பதவிக்கு வந்தார். அதில் பதினாறு வருடங்கள் உத்தமமாய் உழைத்து, ஹெராக்கிளாசுக்குப்பின் அலெக்சாண்டிரியாவின் அத்தியட்சகரானார்.
மூன்றாம் நூற்றாண்டில் பல வருடங்களில் அலைகள்போல் துன்புறுத்தலின் காலங்கள் வந்தன. ஐரோப்பிய நாடுகளிலும், அலெக்சான்டிரியாவிலும், கிறிஸ்தவர்களின்பேரில் பிறமதத்தினர் வெறிகொண்டு, அவர்களைத் துன்புறுத்திக் கொலை செய்தார்கள். முதலாவது டெசியன் துன்புறுத்தல் என்று சொல்லப்பட்டக் காலத்தில், கிறிஸ்தவர்கள், ஆண்களும், பெண்களும் வார்களால் அடிக்கப்பட்டும், காய்ச்சின இரும்புக் கம்பிகளால் குத்தப்பட்டும், வாள்களால் வெட்டப்பட்டும், சுட்டெரிக்கப்பட்டும், இரத்த சாட்சியாக மரித்தார்கள். பரி. டயோனிசியஸ் ஆச்சரியமான பிரகாரமாய் கடவுளால் பாதுகாக்கப்பட்டு, மத வெறியர்களின் கைக்குத் தப்பினார். சிலர் இப் பக்தனைக் கோழை என்றும், தம்முடைய உயிரைக் காத்துக்கொள்ளும்படி ஓடிப்போனார் என்றும் ஏளனம் செய்தார்கள். உண்மையான வரலாற்றை அறிந்தவர்கள், இப்பக்தன் நம் ஆண்டவருக்காகத் தம் உயிரைக் கொடுக்க எப்பொழுதும் ஆயத்தமாயிருந்தார் என்பதை அறிவார்கள்.
கி.பி. 251 ஆம் ஆண்டு சபினஸ் என்னும் அதிகாரி, கிறிஸ்தவர்களைக் கொல்லும்படி அவர்களின் இருப்பிடம் தேடி, அவர்களைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். பரி. டயோனிசியஸ் அப்பொழுது தம் வீட்டிலிருந்தார். இதை அறியாமல், அவர் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாரென்று சில சேவகர் சொல்லக்கேட்டு, சுற்றுப்புறங்களில் அவரைத் தேடி மறுபடியும் அவர் வீட்டிற்கு வந்தார்கள். அவரின் பேரில் பற்றுதலுள்ள சில கிறிஸ்தவ மக்கள் அதையறிந்த, பலாத்காரமாய் அவரையும் அவருடனிருந்த பணியாட்களையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். அவர்கள் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தபொழுது போர்ச்சேவகர்கள் அவர்களை பிடித்து பட்டணத்திற்குக் கொண்டு வந்தார்கள். வழியில் திருமணம் முடிந்து திரும்பி வந்த மக்கள் அவர்களுக்கு எதிராக வந்தார்கள். அக்கூட்டத்தைக்கண்டு சேவர்கள் பயந்து பரி. டயோனிசியசையும் அவருடைய பணியாட்களையும் விட்டு ஓடிப்போனார்கள். அவருடைய உயிருக்கு ஆபத்து வராமல் கடவுள் அச்சமயம் அவர்களை ஆச்சரியவிதமாய்க் காப்பாற்றினார்.
வலேரியன் துன்புறுத்துதல் என்று சொல்லப்பட்ட கி.பி. 257 ஆம் வருட துன்புறுத்தல் காலத்திலும் பரி. டயோனிசியஸ் அநேகக் கஷ்டங்களை அனுபவித்தார். குரு மார்க்கிமஸ் என்பவருடனும், டீக்கன்கள் பான்ட்ஸ், எபூபியஸ் சேருமினன் என்பவர்களுடனும் அவர் பிடிக்கப்பட்டு, எமிலியான்ஸ் என்னப்பட்ட அதிகாரியின் முன்பாகக் கொண்டு போகப்பட்டார். அவர்களனைவரும், கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். “நாங்கள் மனிதருக்கல்ல, கடவுளுக்கே கீழ்ப்படிவோம்” என்று பரி. டயோனிசியஸ் அவ்வதிகாரியின் முன்பு கூறினார். அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், குற்றவாளிகள் என்று தீர்க்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார்கள்.
அப்பொழுது அவர் நோய்வாய்ப்பட்டு, பெலவீன நிலையிலிருந்தபோதிலும் செப்ரோ என்ற ஊரில் இவர்கள் தனியான வாழ்க்கை நடத்த வேண்டியதாயிற்று. சில காலத்திற்குள் கிறிஸ்தவ மக்களில் அநேகர் அலெக்சாண்டிரியாவிலிருந்து துரத்தப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். சபையாகக் கிறிஸ்தவ வழிபாட்டிற்குக் கூடிவரும் பொழுது, அக்கிராம மக்கள் அவர்கள் மீது கல்லெறிந்தார்கள். எனினும் சொற்பக் காலத்திற்குள் கிறிஸ்தவர்களின் ஒழுக்கமான நடத்தையும், அங்குள்ள மக்களின் மனதைக் கவர்ந்தது. அநேகர் கிறிஸ்துவின் மெய்யடியாரானார்கள்.
எமிலியான்ஸ், தன்னால் நாடு கடத்தப்பட்ட மக்களின் நல் வாழ்வைக்காண சகியாமல், வெகு தூரத்திலிருந்த கலத்தோ என்னுமிடத்திற்கு அவர்களை அனுப்பினான். எமிலியான்ஸின் அரசியல் நீடித்திருக்கவில்லை. கலகங்களினாலும், கொள்ளைகளினாலும், நோய்களினாலும் மக்கள் பல இன்னல்களுக்குட்பட்டார்கள். பரி. டயோனிசியஸ் அலெக்சாண்டிரியாவுக்குத் திரும்பினார்.
கிறிஸ்தவச் சபை அக்காலத்தில் சீரான நிலையிலில்லை. கிறிஸ்தவக் கொள்கைகளைக் குறித்து, பலவிதமான போதனைகள் இருந்தன. ஆகவே சபைகளில் பிரிவினைகள் உண்டாயின. அச்சமயம் அவர்களின் நடுவில் பரி. டயோனிசியஸ் வந்தது கடவுளின் நடத்துதல் என்று கிறிஸ்தவர்கள் கருதினார்கள். வேதப் புரட்சியினரில் சிலர் தங்களுடைய குருட்டாட்ட வழிகளை விட்டு விட்டு சபைக்குத் திரும்பினார்கள். அவர்களுக்கு இரண்டாம் முறை ஞானஸ்நானம் கொடுத்துதான் சபைக்குள் சேர்த்துக்கொள்ள வேணுமென்று சிலர் பரி. டயோனிசியசிடம் வாதாடினார்கள். எப்பொழுதும் அமைதியும், சாந்தமுள்ளவராய் காரியங்களை நடத்துபவராயிருந்தமையால், இவருடைய வார்த்தைகளுக்கு மக்கள் செவிகொடுத்தார்கள். கட்சிகளை உண்டுபண்ணி கிள்ர்ச்சி செய்த மக்களின் முயற்சிகள் பயனடையாமற் போயின.
பரி. டயோனிசியஸ் இரண்டு புத்தகங்கள் எழுதினார். ஒன்று வாக்குத்தத்தங்களின் பேரில் மற்றொன்று உவமானங்களுக்கு எதிர்ப்பு இப்புத்தகங்களைப் பெரும்பாலான முரட்டு குணமுடையவர்கள் வாசித்து, மனந்திரும்பினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பரி. ஆரிஜனுக்கு விரோதமாக ஒரு கட்சி பலப்பட்டு வந்தது. பரி. டயோனிசியஸ் எப்பொழுதும் பரி. ஆரிஜனுக்கு பக்தியுள்ளவராக அவரைத் தம் குருவாகப் பாராட்டிவந்தார். எனவே ‘துன்புறுத்தல்’ என்ற தலைப்பில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். பரி. ஆரிஜன் இறந்தபின் சிசேரியா அத்தியட்சகருக்கும் பரி. ஆரிஜனைக்குறித்து புகழ்ந்து எழுதினார்.
கி.பி. 265 இல் அந்தியோகியாவில் மகாநாடு கூடிற்று. வயது முதிர்ந்து, பெலவீன நிலைமையில் அவர் இருந்தமையால் அம்மகாநாட்டிற்கு வந்து அதில் கலந்து கொள்ள அவரால் இயலாமல் போயிற்று. அதின்பின் சில காலத்தில் அவர் மரித்து நமதாண்டவரின் திருவடி சேர்ந்தார்.
பிறப்பு: அலெக்சாண்டிரியா, எகிப்து
இறப்பு: கி.பி. 264, மார்ச் 22, எகிப்து
Comments (0)