பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதி காடும், குன்றும் மேடும் பள்ளங்களும் நிறைந்த நாடு, பதினாறாம் நூற்றாண்டில் இப்பகுதியில் பூயே என்னுமிடத்தில் பக்தன் வின்சென்ட் டி பால் தோன்றினார். இவர் தம்முடைய வாழ்க்கையின் முற்பகுதியில் பலவித இன்னல்களுக்குட்பட்டு, துன்பங்களை அனுபவித்தார். கடவுளின் பேரிலுள்ள பற்றுதலினால் அவைகளை அவர் இன்பமாக ஏற்றுக்கொண்டு, பிற்காலத்தில் எளிய மக்களுக்குச் சேவை செய்ய முற்பட்டார். அவர்களுக்குப் போதிய உணவும் உடையும் கொடுக்கும் நோக்கத்துடன் “லாசருவின் பிதாக்கள்” என்ற ஒரு குழுவையும் வறுமையில் உழன்று கிடக்கும் பெண்களுக்குப் பொருளுதவி செய்து, அவர்களைப் பராமரிப்பதற்கென்று. “தர்மம் செய்யும் சகோதரிகள்” என்ற ஒரு குழுவையும் தோற்றுவித்தார். அக்காலத்தில் நடந்த உள்நாட்டுக் கலகங்களின் காரணமாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்குப் பொருளுதவி செய்து, அவர்களுடைய துயரைக் குறைக்க ஆவன செய்தார்.
வின்சென்டின் இளம்பருவமும், பயிற்சிகாலமும்
இவருடைய பெற்றோர் விவசாயம் செய்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். தங்களுக்குச் சொந்தமான சொற்ப நிலப்பகுதியைப் பயன்படுத்தி சாகுபடி செய்து வந்தார்கள். இவருடைய தந்தையின் பெயர் வில்லியம் என்பதாகும். பெட்றாண்டா என்பது இவருடைய தாயின் பெயர். இவர்களுக்கு வின்சென்டைச் சேர்த்து ஆறு பிள்ளைகள் பிறந்தனர். நால்வர் ஆண்கள், இருவர் பெண்கள். 1576 ஆம் ஆண்டில் மூன்றாவது பிள்ளையாக வின்சென்ட் பிறந்தார்.
இவருடைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பக்திநெறியில் வளர்த்து வந்தனர். வின்சென்ட் சிறுவராயிருக்கும்பொழுதே சகல நற்குணங்களும் பொருந்தியவராயும், கடவுளின்பேரில் பக்தியுள்ளவராயும் காணப்பட்டார். பிறர்படும் துன்பத்தைக் காணச் சகியாதவராய், அவர்களுக்கு அனுதாபம் காட்டுவதுடன், அவர்கள் நலனுக்காகத் தனக்குள்ளவைகளைத் தியாகம் செய்தும் உதவி புரிந்து வந்தார்.
இளமையில் தம்முடைய தந்தையின் ஆடுகளை மேய்ப்பது அவருக்குப் பொழுதுபோக்காக இருந்தது. அவருடைய புத்திக் கூர்மையை அவருடைய தந்தை அறிந்து, கல்வி கற்பது அவருக்கு நலம் பயக்குமென்று கருதி, அக்ஸ் என்னுமிடத்திலிருந்த பிரான்சிஸ்கன் துறவிகளிடம் அவரை அனுப்பினார். அவர்களுடன் தங்கி, உணவருந்தி, கல்வி பயிலுவதற்கு அவருடைய தந்தை பணம் அனுப்பி வந்தார்.
நான்கு வருடங்கள் சென்றபின், கல்வியறிவில் அவருடைய முன்னேற்றத்தையும், நற்குணங்களையும் கண்ட காமெட் என்ற ஒரு தனவந்தர், தம்முடைய பிள்ளைகளுக்கு ஆசிரியராக அவரை அமர்த்த விரும்பி, அவர் அதற்கு இணங்கினால், அப்பணி செய்வதுடன், தன் படிப்பை தொடர்ந்து பயில்வதற்கு உதவி செய்வதாக வாக்களித்தார். தன் கல்வியில் முன்னேற இதை ஒரு வாய்ப்பாகக் கருதிய வின்சென்ட் அதற்கிணங்கி, கான்வென்ட்டின் பிள்ளைகளுக்கு ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். ஒரு வினாடியும் வீணாக்க விரும்பாத வின்சென்ட் அக்காலத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கிரேக்கு, லத்தீன் மொழிகளைக் கற்றார்.
தமது இருபதாம் வயதில் வின்சென்ட் ரூலூஸ் கலாசாலையில் சேர்ந்தார். அங்கு ஏழாண்டுகள் வேத சாஸ்திரம் கற்றுப் பட்டம் பெற்றார். 1598 ஆம் ஆண்டு டீக்கன் பட்டமும், அதன்பின் இரண்டு வருடங்கள் சென்றபின் குரு பட்டமும் பெற்றார். சிறுவயதிலிருந்தே சகல நற்குணங்களும் பொருந்தினவராகத் திகழ்ந்த இப்பக்தன், தன்னலமற்ற வாழ்க்கையைக் கடைப்பிடித்து, கடவுளின் சேவைக்காகத் தம் வாழ்க்கை முழுவதையும் ஒப்படைத்தார்.
வெளிநாட்டுப் பயணமும், இன்னல்களும்
1604 ஆம் ஆண்டில் வின்சென்டின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நிறைவேறலாயின. அவருடைய நண்பரொருவர் மார்சேய்ல்ஸில் வாழ்ந்து வந்தார். வின்சென்டிற்கு அவர் ஐந்நூறு கிரெளன்கள் விட்டுவிட்டு மரித்தார். அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளும்படி வின்சென்ட் மார்சேய்ல்ஸூக்குச் சென்றார். அதைப் பெற்றுக்கொண்டு திரும்புகையில், அவர் பயணம் செய்த கப்பலைக் கடற்கொள்ளைக்காரர்கள் தாக்கினார்கள். அவர்களில் ஒருவன் எய்த அம்பினால் வின்சென்ட் காயம்பட்டார். கொள்ளைக்காரர்கள் கப்பலைக் கைப்பற்றி, அதன் தலைவனையும் நான்கு அல்லது ஐந்து பிரயாணிகளையும் கொலை செய்து, கடலிலெறிந்தார்கள். மற்றவர்களை சங்கிலிகளினால் கட்டி, பார்பரி என்னுமிடத்தில் கரையேறினவுடனே அடிமைகளாக விற்று விட்டார்கள்.
கடவுள் படைப்புக்கு உட்பட்ட மக்களுள் சிலரை அடிமைகளாக வருத்துவதிலும் கொடுமை வேறொன்றுமில்லை. அக்கொடுமையை அக்காலத்தில் அனுபவித்தவர்களுள் வின்சென்ட் ஒருவராவார். ஒரு மீன் பிடிப்பவன் அவரைத் தனக்கு அடிமையாக வாங்கிக் கொண்டான். அவரை அவன் வெகுநாள் தன்னிடம் வைத்துக் கொள்ளவில்லை. சிறிது காலத்தில் ஒரு மருத்துவனிடம் அவரை விற்று விட்டான். மருத்துவரால் அநேக மக்கள் இன்ப வாழ்வு பெறுகிறார்கள். மருத்துவரால் அநேக மக்கள் இன்ப வாழ்வு பெறுகிறார்கள். வின்சென்டின் அனுபவம் அது அன்று. 1605 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 1606 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிய அவனிடம் அடிமையாக உழைத்த வின்சென்ட் கொடுமையை தவிர நன்மையொன்றையும் அனுபவிக்கவில்லை. அம்மருத்துவன் மரித்தபொழுது அவர் அவனுடைய சொத்தாக அவனுடைய மருமகனுடைய வசம் சேர்ந்தார். இவனிடம் பல கஷ்டங்களை அனுபவித்து, உடல்நலம் கெட்ட பின்பு, அவன் அவரை ஒரு கிறிஸ்தவ விவசாயிக்கு விற்றான்.
வின்சென்ட் அடிமையாக உழைத்த காலத்தில் அவர் திறனுடனும், பணிவுடனும் தம் வேலைகளைச் செய்து வந்தார். கடவுளின் பேரிலுள்ள அவருடைய பற்றுதலையும், பொறுமையையும் அங்குள்ள மக்கள் கண்டு அவரைப் புகழ்ந்தார்கள். ஆனால், அவருடைய முதலாளி அவருக்குச் சற்றேனும் இரக்கம் காட்டவில்லை. அவன் பெயரளவில் கிறிஸ்தவனேயன்றி, உள்ளத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவனல்ல. அவனுக்கு மூன்று மனைவிகளிருந்தார்கள். அவர்களுள் ஒருவள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவள்.
சூரிய வெப்பத்தில் வின்சென்ட் நின்று நிலத்தைவெட்டி பண்படுத்தி உழைப்பதை கண்டு அவள் அவர்மீது அனுதாபம் காட்டுவாள். அவருடன் அவள் பழகி, அவருடைய நற்குணங்களைப் பாராட்டி அளவளாவுவாள். அவர் கடவுளின் அடியார் என்று அறிந்து ஒரு நாள் கடவுள் துதி பாடும்படி அவரை வேண்டினாள். அப்பொழுது, தம்முடைய கண்களில் நீர்மல்க, அவர், “பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, சீயோனை நோக்கி அழுதோம்” என்ற சங்கீதத்தையொட்டிய பாடல் ஒன்றைப் பாடினார். இந்நிலையில் தம் ஊர் செல்ல வேண்டுமென்ற அவருடைய விருப்பம் அதிகமாயிற்று.
பக்தனான வின்சென்ட் அந்நிய நாட்டில் அடிமையாக உழைத்து, தம் நாட்டிற்குத் திரும்பிவரும் நாட்களை நோக்கியவராக வாழ்ந்து வந்தார். தாய் நாட்டிற்குத் திரும்பி கிறிஸ்தவப் பணி செய்ய விரும்பினார். அவ்வாறு செய்வதாகக் கனவு கண்டார். அக்கனவுகள் நனவாகக் கூடிய காலம் நெருங்கிற்று.
வின்சென்டுடைய முதலாளி அவர் செய்து வந்த வேலையை பாராட்டி படிப்படியாக அவருக்கு அவருடைய வேலையில் சலுகைகள் பல காட்டி வந்தான். அவருடைய நற்குணங்களைக் குறித்து அவருடைய மனைவியும் எப்பொழுதும் புகழ்ந்து பேசி வந்தாள். இவைகள் அவரது மனநிலையை மாற்றின. இவை மூர்க்க குணம் படைத்தவராயிருந்தவரை ஒரு குணசீலராக்கியது. ரோமாபுரிக்குப் போக வின்சென்ட் விருப்பமுள்ளவராக இருப்பதை அவரிடமிருந்து அறிந்து, தாமும் அவருடன் ரோமாபுரிக்குப் போகத் திட்டமிட்டார். பின்பு தம் மனைவி மக்களிடம் விடை பெற்றுக்கொண்டு, வின்சென்டுடன் தம் நாட்டை விட்டுப் புறப்பட்டார்.
இருவரும் கப்பலேறி மத்திய தரைக்கடலைக் கடந்து, மார்சேய்ல்ஸ் துறைமுகத்திற்கருகில் உள்ள ஆகிஸ்மார்டிங் என்னுமிடம் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து புறப்பட்டு, நூற்றுக்கணக்கான இரத்தச் சாட்சிகள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி மரித்த புண்ணிய நகரான ரோமாபுரியை அடைந்தார்கள். வின்சென்டின் பழைய முதலாளி ரோமாபுரியிலேயே தங்க முடிவு செய்து, ‘கடவுளின் யோவான்’ என்ற பக்தன் நிறுவிய மருத்துவ நிலையத்தில் பணியாளாக அமர்ந்தார்.
வின்சென்ட் ரோமாபுரியில் சில நாட்கள் தங்கினார். பின்பு அவ்விடமிருந்து புறப்பட்டு பாரீஸ் நகருக்குச் சென்றார். அதன் அருகில் செயின்ட் ஜெர்மேயின் என்னுமிடத்தில் ஒரு இல்லத்தில் பகுதியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அதில் வசிக்கலானார்.
பிரான்ஸ் நாட்டில் வின்சென்டின் பிற்கால வாழ்க்கை
அங்கிருந்தபொழுது கார்டினல் பதவி வகித்து வந்த பெரூல் என்பவருக்கு வின்சென்டுடன் பழக வாய்ப்புக் கிடைத்தது. வின்சென்ட் ஒரு பேரறிஞர் என்றும், தூய வாழ்கையைக் கடைபிடித்த பக்தனென்றும் பெரூல் எளிதில் அறிந்துக்கொண்டார். பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள கிளிச்சி என்ற கிராமத்தில் அவரைச் சபை குருவாக நியமித்தார். அத்துடன் ஜார்ஜ்கினி பிரபுவின் பிள்ளைகளுக்கு அவர் ஆசிரியராக கல்வியில் அவர்களுக்கு உதவி செய்யவும் ஒழுங்கு செய்தார். சபை குருவாக மக்களின் அன்பையும், ஆசிரியராகவும் சமயப் போதகராகவும் பிரபுவின் நன்மதிப்பையும் பெற்றார்.
கிளிச்சியில் ஊழியம் செய்ய ஆரம்பித்த சிறிது காலத்தில், 1616 ஆம் ஆண்டு கானஸ் என்ற கிராமத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த ஒரு குடியானவனைப் பார்க்கும்படி அவர் சென்றார். அவனிடம் அளவளாவி, பாவிகளின் பேரிலுள்ள கிறிஸ்துவின் அன்பைக் குறித்து போதித்தபொழுது, அவன் தன் பாவங்களை அறிக்கையிட்டு, மனம் மாறினான் கடவுளின் அருளால் அவன் சுகமும் பெற்றான்.
மக்களின் பாவ நிலையைக் குறித்து அவர் எச்சரித்து உணர்த்தும் முறையும், அவருடைய தூய்மையான வாழ்க்கையும் மக்களின் மனதைக் கவர்ந்தன. ஜார்ஜ்கினி பிரபுவின் மனைவியின் அழைப்பின்பேரில் 1617 ஆம் ஆண்டு பரி. பவுல் குணப்பட்ட திருநாளன்று போல்வில்லி ஆலயத்தில் பிரசங்கம் செய்தார். மக்கள் திரண்டு வந்து அவருடைய பிரசங்கத்தைக் கேட்டார்கள். அது முதல் எங்கு சென்றாலும் அவரைக் காணவும், அவர் பிரசங்கங்களைக் கேட்கவும் மக்கள் திரள் திரளாக வர ஆரம்பித்தார்கள்.
வின்சென்டின் சிறப்பை அறிந்த பெரூல் மற்ற சபைகளிலுள்ள மக்களும் அவர் மூலமாய் கிறிஸ்தவ வாழ்க்கையின் நலன்களை அனுபவிக்கக் கூடுமென்று கருதி, பிரெசீ என்ற கிராமத்தில் சிலகாலம் சமயப்பணி செய்யும்படி அவரை அழைத்தார். அங்கு கிறிஸ்துவை விட்டு விலகிப்போன ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதில் தம் கவனத்தைச் செலுத்தினார். இப்பணியில் உதவி செய்து தம்முடன் ஒத்துழைக்கும்படி, தம்மைப்போல் தனி அழைப்பு பெற்ற ஐந்து குருமாரை அழைத்தார். அவர்களும், வின்சென்டும் ஒரு குழுவாக சாட்டில்லான் என்னும் நாட்டிற்குச் சென்று சீர்கெட்ட வாழ்க்கை நடத்தி வந்த மக்களை நல்வழிக்குக் கொண்டுவர முற்பட்டார்கள். சிறிது காலத்தில் அம்மாவட்டத்தில் அவர்களுடைய முயற்சியினால் அனேக மக்களின் வாழ்க்கையில் மாறுதல் காணப்பட்டது.
வின்சென்டின் முயற்சியால் அனேக மக்கள் கிறிஸ்துவின் அடியார்களாக மாறியதை ஜார்ஜ்கினி பிரபுவின் மனைவி கண்டு மகிழ்வுற்றார்கள். நிரந்தரமாக அவர்கள் நடுவில் அவர் ஊழியம் செய்வதற்கென்று அச்சீமாட்டி அவருக்கு பதினாயிரம் விவரிகள் கொடுத்தார்கள். அத்துடன், அவரைத் தம்முடைய ஆத்தும நலனைக் கவனித்து, அவர்களை வழி நடத்துவதற்கு தலைவராகவும் கொண்டார்கள்.
இவைகளைத் தவிர உள்நாட்டுக் கலகங்களின் காரணமாகத் துன்பங்களை அனுபவித்து வந்த மக்களுக்கும், ஆதரவற்று பராமரிப்பில்லாமலிருக்கும் மக்களுக்கும் உதவியளித்து, சீர்கெட்ட மக்களின் உள்ளத்தைச் சீர்படுத்துவதற்கும் ஒரு குழு ஏற்படுத்த திட்டமிட்டார். இம்முயற்சியில் ஜார்ஜ்கினி சீமாட்டி அவருக்கு உற்சாகமூட்டி, அதை உருவாக்கத் தம்முடைய கணவனின் உதவியை நாடினார்கள். இருவருமாக ஆலோசனை செய்து அதற்கு ஆவன செய்வதற்கு நாற்பதினாயிரம் லிவரிகள் கொடுத்தார்கள். பான்க் இன்டன்ஸ் என்ற கல்லூரியின் கட்டிடங்களைப் பாரிசின் பிரதம அத்தியட்சகர் அவருக்கு தானமாகக் கொடுத்தார். வின்சென்ட் அவைகளை ஏற்றுக் கொண்டு 1625 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்குழுவிற்காக தம் மனதில் கொண்டிருந்த திட்டங்களையும் சட்டங்களையும் வகுத்தார்.
பிரான்ஸ் நாட்டு மன்னன் XIII லூயிஸ் என்பவரின் அனுமதியின்பேரில் 1633 ஆம் ஆண்டு லாசருக்கள் குழு நிறுவப்பட்டது. இக்குழுவில் சேருபவர்கள் மூன்று முக்கியமான விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். வறுமையை மேற்கொண்டு, திருமணம் செய்துகொள்ளாமல், புனித மனக்கருத்துள்ளவர்களாய் கடவுளின் நியமங்களுக்குத் வாழ்நாட்களில் பிரான்ஸ், போலந்து நாடுகளில் 25 ‘லாசரு குழுக்கள்’ நிறுவப்பட்டன.
இவ்வாறு பல இடங்களில் மக்களின் நலனுக்காக உழைத்த போதிலும், அவர் அதுகாறும் செய்த பணி அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. தன்னலம் கருதாமல் அநேக மக்கள் பிறருக்காக உழைத்துப் பாடுபட்டால்தான் உலகம் சீர்படும் என்ற எண்ணமுள்ளவர் வின்சென்ட் விதவைகளையும், எளிய மக்களையும், வியாதியுற்றோர்களையும் கவனிக்கவும், இன்னல்களுக்குட்பட்டோரின் குறைகளை நிவர்த்தி செய்யவும், பெண் மக்களின் சேவையும் தேவையென்று அவர் கருதினார். துன்பப்பட்டோருக்கு உதவி செய்யும் ‘சிலுவை நங்கைகளென்றும்’, நோயுற்றோருக்குச் ‘சேவை செய்யும் நங்கைகளென்றும்’, குழுக்கள் நிறுவினார். பொதுவாக ‘தர்ம சகாய நங்கைகள்’ என்ற பெயர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
அநேக மருத்துவா நிலையங்களிலும், அனாதைப் பிள்ளைகளின் ஸ்தாபனங்களிலும், கப்பல்களில் தண்டுவலித்து பெலவீனப்பட்டு ஆதரவற்றவர்களாகக் கஷ்டப்பட்ட அடிமைகளுக்குள்ளும் இவர்கள் சிறந்த சேவை செய்தார்கள். அவரையும், அவர் நிறுவிய ஸ்தாபனங்களைக் குறித்தும் ஐரோப்பிய மக்கள் நன்கறிந்ததால், அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்குப் பொருளுதவி குறைவின்றிக் கிடைத்தது.
இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவித்து, பற்றற்ற நிலையில் நின்று அயராது உழைத்த புனிதப் புருஷர் வின்சென்ட் கடுமையான உபவாசத்திலும், ஜெபத்திலும், கண்விழிப்பிலும் நாட்களை அவர் செலவழித்து வந்ததால் அவருடைய பெலன் குன்றிப் போயிற்று. தமது எண்பதாவது வயதில் நோய்வாய்ப்பட்டு தம்முடைய மரணநாளை முன்னறிந்து, தம்மருகிலுள்ளவர்களுக்குப் போதனை செய்தார். பின்பு திருவிருந்து பெற்று 1660 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று மரித்து, நம் ஆண்டவரின் திருப்பாதம் சேர்ந்தார்.
இவருடைய பெயர் நம் நினைவிற்கொள்ள வேண்டிய பரிசுத்தவான்களின் கிறிஸ்தவ அட்டவணையில் சேர்க்கப் பட்டிருக்கின்றது.
பிறப்பு: கி.பி. 1576, ஏப்ரல் 24, (பிரான்ஸ்)
இறப்பு: கி.பி. 1660, செப்டம்பர் 27, (பாரிஸ், பிரான்ஸ்)
Comments (0)