மேனாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து, கிறிஸ்தவ தொண்டனாக ஊழியஞ்செய்து அத்துடன் செந்தமிழ் புலவராக விளங்கியவர் போப் பாதிரியார்.
ஜியார்ஜ் யுக்ளோ என்பது இவருக்கு இடப்பட்ட பெயர். இவருடைய தந்தையின் பெயர் போப் என்பதாகும். ஜியார்ஜ் யுக்ளோ போப் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி நோவாஸ்கோஷியோவிலுள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார். 1826 இல் இவருடைய பெற்றோர் இங்கிலாந்துக்கு திரும்பியபொழுது அவர்களோடு ஜியார்ஜ் போப்பும் வந்தார். இளமையிலே பக்தி நெறியில் அவர் வளர்க்கப்பட்டார். அப்பொழுதே கடவுளுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்று தீர்மானம் செய்தார். தமது 13 ஆம் வயதிலேயே தென்னிந்தியாவில் தாம் ஊழியம் செய்ய கடவுள் தம்மை அழைப்பதாக உணர்ந்தார். வேத வாசிப்பில் அதிக ஊக்கம் காண்பித்தார். அதைச் செம்மையாக கற்பதற்காக எபிரெயு மொழியையும் கிரேக்கு மொழியையும் கற்றார்.
1838 ஆம் ஆண்டில் தம்மை ஒரு கிறிஸ்தவ ஊழியனாக ஏற்றுக்கொண்டு, தென்னிந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென்று வெஸ்லியன் சங்கத்தாரைக் கேட்டுக்கொண்டார். நாட்டு மொழிகளை அறியாமல் ஒரு நாட்டில் எவ்விதமான தொண்டும் செய்யமுடியாதென்று எண்ணி, தென்னிந்தியாவுக்கு புறப்படும் முன்பே அவர் தமிழ்மொழியைக் கற்கத் துவங்கினார். வெஸ்லியின் சங்கத்தார் 1839 இல் அவரைத் தென்னிந்தியாவில் ஊழியம் செய்வதற்கென்று தெரிந்து கொண்டார்கள். எனவே அவர் கப்பலேறி சென்னையைச் சேர்ந்தார்.
சென்னையிலிருந்த காலத்தில் இங்கிலாந்து திருச்சபையைச் சேர்ந்து ஊழியம் செய்வதென்று முடிவு செய்தார். சென்னை அத்தியட்சகர் முதலில் அவருக்கு உதவி குரு பட்டமும், பிறகு குரு பட்டமும் கொடுத்தார். சங்கத்தார் திருநெல்வேலியில் ஊழியம் செய்யும்படி அவரை அனுப்பினார்கள். ஆகவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் என்னுமிடத்தில் தொண்டாற்றுவதற்கென்று வந்து சேர்ந்தார்.
19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவினவர்களுக்குப் பல துன்பங்கள் உண்டாயின, துன்புற்ற கிறிஸ்தவ மக்கள் குடியேறுவதற்கென்று இப்பொழுது சாயர்புரம் இருக்குமிடத்தை சாமுவேல் சாயர் என்ற ஒரு ஐரோப்பிய வணிகர் விலைக்கு வாங்கி, கிறிஸ்தவச் சங்கத்திற்கு வழங்கினார். துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு அது அடைக்கலம் பட்டணமாய் விளங்கிற்று.
அக்காலத்தில் பாடசாலைகள் பல இருந்த போதிலும் பல்கலைக்கழகம் ஒன்றும் தென்னாட்டில் இல்லை. தமிழ்நாட்டு கிறிஸ்தவ மக்களுக்கு சரியானப் பயிற்சியளித்தால், எக்கலையையும் அவர்கள் எளிதாகக் கற்கக் கூடுமென்றும், அவர்கள் மூலம் கிறிஸ்தவ மார்க்கம் பரவக் கூடுமென்றும், போப் பாதிரியார் உணர்ந்தார். எனவே அவர் சாயர்புரத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவினார். பல இடையூறுகளுக்குள் அப்பல்கலைக்கழகத்தை செம்மையாய் நடத்தினார். சரித்திரம், தாக்கம், தத்துவம், ஆகியக் கலைகளை செய்மூர் என்ற உதவி ஆசிரியர் வெகு திறமையுடன் போதித்தார். இவருக்கு கண் தெரியாது. தமிழ் இலக்கியமும், கிரேக்கு, லத்தீன், எபிரேயு மொழிகளையும் மாணவருக்குப் போப் கற்றுக் கொடுத்தார். சாயர்புரத்தில் படித்தவர்கள் பிற்காலத்தில் சிறந்த திருச்சபைத் தொண்டர்களாக விளங்கினார்கள்.
போப் அங்கு வேலையை ஆரம்பித்தக் காலத்தில் சாயர்புரம் நாசரேத் வட்டத்தைச் சேர்ந்திருந்தது. அவர் வந்த பின் அது தாமிரபரணி ஆற்றிற்கு வடக்கேயுள்ள நாட்டிற்குத் தலைமை இடமாயிற்று. அன்று முதல் போப் ஐயரின் தலைமையில் சாயர்புரம் முன்னேற்றமடைந்தது. பல்கலைக்கழகம் நிறுவியதோடு போப் திருப்தி அடையவில்லை. கிறிஸ்தவச் சபைகள் புத்துயிர் பெறுவதற்காக முயற்சித்தார். கிறிஸ்துவை அறியாத மக்களுக்குக் கிறிஸ்துவின் ரட்சிப்பைக் குறித்து அறிவித்து அவர் ராஜ்யம் பரவுதலுக்காக இடைவிடாமல் உழைத்தார். அவர் சாயர்புரத்திற்கு வந்த இரண்டு ஆண்டுகளில் அவ்வட்டத்திலுள்ள தொண்ணூற்றாறு ஊர்களில் கிறிஸ்தவச் சபைகள் ஏற்பட்டன. ஞானஸ்நானம் பெறும்படி ஆயிரத்து நூறு மக்கள் ஆயத்தப்படலாயினர். சுற்றுப்புற கிராமங்களில் கிறிஸ்தவக் கோயில்களும் பாடசாலைகளும் கட்டப்பட்டன.
சுவிசேஷ ஊழியத்தில் இந்தியக் கிறிஸ்தவ மக்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென்பது அவருடைய வாஞ்சை. அவர்களுக்கு முன்மாதிரியாகக் கிராமத் தெருக்களில் நின்று கிறிஸ்துவின் அன்பையும் மீட்பையும் குறித்துப் பிரசங்கித்தார். இந்திய ஊழியர் அவ்வாறு செய்ய வேண்டுமென்று போதித்தார். இதனால் கிறிஸ்தவரல்லாத மக்களால் பல துன்பங்கள் உண்டாயின. அத்துன்பங்களைத் தாம் பொறுமையோடு சகித்ததோடு, தன்னுடன் ஊழியஞ்செய்த இந்திய மக்களும் பொறுத்தல் வேண்டுமென்று சொல்லி வந்தார்.
சாயர்புரத்துக்கு அருகாமையிலுள்ள ஒரு ஊரில் அவர் பிரசங்கம் செய்யப்போகும்பொழுது தங்கள் ஊரில் அவரை நுழைய விடலாகாதென்று அவ்வூரார் தீர்மானித்தார்கள். அவர் அதனைக் கவனியாதவர் போல் அவ்வூரார் தெருவில் நின்று கிறிஸ்தவ நற்செய்தியை எடுத்துரைத்தார். அவர் பிரசங்கம் செய்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் மாட்டுச் சாணியைத் தண்ணீரில் கரைத்து அவர் மேல் ஊற்றினாள். அதைப் பொருட்படுத்தாமல் அவர் பிரசங்கத்தை தொடர்ந்து முடித்தார். மறுபடியும் அவ்வூருக்கு பன்முறை வந்து பிரசங்கம் செய்தார். கடவுளின் அருளால் அவ்வூரில் பலர் கிறிஸ்தவர்களானார்கள். ஒரு இந்துக் கோயில் இருந்த இடத்தில் கிறிஸ்தவக் கோயில் கட்டப்பட்டது. போப் ஐயர் தூத்துக்குடிக்கும் அடிக்கடி போய் அங்குள்ள ஆலயத்தில் ஆராதனை நடத்தி வந்தார்.
எட்டு ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்ததால், அவருடைய உடல் நலம் கெட்டது. எனவே 1849 ஆம் ஆண்டு சாயர்புரத்தை விட்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அப்பொழுது அவருக்கு வயது முப்பது. 1850 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு தம் மனைவியோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னையிலிருந்து தஞ்சாவூரில் ஊழியம் செய்யும்படி அனுப்பப்பட்டார். சுவார்ட்ஸ் ஐயர் வேலை செய்த இடத்தில் தாம் பணியாற்ற வேண்டியதை குறித்து அவர் அகமகிழ்ந்தார்.
தஞ்சாவூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் போப் பாதிரியார் சிறந்த ஊழியஞ் செய்தார். அவருடைய முயற்சியால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. தஞ்சாவூரிலிருந்தக் காலத்தில் நல்ல ஆசிரியர்களைத் துணையாகக்கொண்டு தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றார். சுவிசேஷ கவிராயர் வேதநாயக சாஸ்திரியார் அக்காலத்தில் முதியவராக இருந்தார். போப் பாதிரியார் அவரை அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். கிறிஸ்தவக் கவிஞர் சாஸ்திரியாரின் உறவு போப் ஐயருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தஞ்சாவூரில் பணிசெய்த எட்டு ஆண்டுகளில் மூன்று இலக்கண நூல்களை எழுதினார். முதல் இரண்டும் சிறுவர்களுக்கென எளிதான முறையிலும், மூன்றாவது நூல் விரிவான இலக்கண நூலாகவும் எழுதப்பட்டன. தமிழ், ஆங்கில அகராதி ஒன்றையும் எழுதினார். அக்காலத்தில் மாணவருக்கு சரித்திரக் கல்வியில் போதிய அறிவில்லாமலிருந்தது. இதன் அவசியத்தை உணர்ந்த போப் ஐயர், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த நாட்டு வரலாற்றொன்றை தமிழில் மொழி பெயர்த்து முடித்தார். விஞ்ஞான நூலென்றையும் எழுதினார். இவைகளையன்றி கிறிஸ்தவத் தொண்டர்களைப்பற்றி ஒரு நூலையும் பரிசுத்த நற்குணங்களைப்பற்றி ஒரு நூலும் எழுதி வெளியிட்டார்.
தஞ்சாவூரில் போப் பாதிரியார் ஊழியம் செய்த காலத்தில் கிறிஸ்தவர்களுக்குள் ஜாதிப் பிரிவினை நிலவி, அதனால் கட்சிகள் உண்டாயிற்று. போப் ஐயர் இதைக் குறித்து மனம் வருந்தி கிறிஸ்தவச் சபையில் உயர்குலத்தவர், தாழ்ந்த குலத்தவர் என்று இருக்கலாகாதென்று போதித்தார். இப்போதனையைக் கேட்டு சிலர் வெகுண்டார்கள். நற்செய்தி கழகத்தாருக்குக் கடிதங்கள் எழுதினார்கள். அக்கழக ஆட்சிக் குழுவினர் கிளர்ச்சியாளர்களின் விருப்பத்திற்கு மாறாக செய்வது நன்றல்ல என்று போப் பாதிரியாருக்கு எழுதினார்கள். அவர்கள் செய்த முடிவையறிந்த பாதிரியார் மனம் வருந்தி, தம் ஊழியத்திலிருந்து விலகிக்கொண்டு, தஞ்சாவூரை விட்டுப் புறப்பட்டார். தன் மனைவி மக்களுடன் மாட்டு வண்டிகளில் ஏறி உதகமண்டலம் சேர்ந்தார்.
உதகமண்டலம் அக்காலத்தில் ஒரு சிற்றூராக இருந்தது. குளிர்ச்சியான இடமானதால் ஐரோப்பியரில் சிலர் அங்கு வீடுகள் கட்டி குடியிருந்தார்கள். ஐரோப்பிய சிறுவருக்கென்று போப் ஐயர் பாடசாலையொன்று தொடங்கி நடத்தினார். நாளடைவில் அது வளர்ந்து சிறந்த கல்லூரியாக விளங்கிற்று. பல்கலைக்கழகத்தில் ஒரு கோயிலைக் கட்டி, காலையிலும் மாலையிலும் ஆராதனை நடத்தி மாணவர்கள் அவைகளுக்கு ஒழுங்காக வரும்படி செய்தார். உதகமண்டலத்திலுள்ள நூல் நிலையத்தை நல்ல முறையில் நடத்தி அதற்கென்று புதியதோர் கட்டிடம் கட்டினார். போப் பாதிரியாரின் கல்வி அறிவையும் புகழையும் கந்தர்புரி அத்தியட்சகர் கேள்விப்பட்டு 1864 இல் அவருக்கு ‘மறைநூல் புலவர்’ என்னும் பட்டம் அளித்தார்.
பெங்களூர் பிஷப் காட்டன் பாடசாலைக்குத் தலைவர் ஒருவர் தேவையாயிருந்தார். பாடசாலைக் குழுவினர் டாக்டர் போப் அதற்குத் தகுதிவாய்ந்தவரென்று முடிவு செய்து, அவரை அப்பாடசாலைக்குத் தலைவராக பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு இணங்கி, பிஷப் காட்டன் பாடசாலைக்குத் தலைமை ஏற்றார். அதுமுதல் அப்பாடசாலை முன்னேற்றமடைந்தது. புதிதாக வகுப்பு அறைகளும், மாணவர் இல்லமும் கட்டினார். “சகல பரிசுத்தவான்கள் ஆலயம்” என்ற கோயிலில் ஆராதனை நடத்தி வந்தார். பெங்களூரிலுள்ள தமிழக கோயிலிலும் தம்மாலியன்ற பணி செய்தார். சுமார் நாற்பத்திரண்டு ஆண்டுகள் நம் நாட்டில் சிறந்த வேலை செய்த பின் 1882 இல் தமது அறுபத்திரண்டாவது வயதில் தம் தாய்நாடு திரும்பினார்.
டாக்டர் போப் பாதிரியார் இங்கிலாந்து திரும்பியதும் நற்செய்தி கழகத்தார். அவரை வரவேற்று நல்மொழி கூறினார்கள். லண்டன் கழகத்தார். அவரை மான்செஸ்டர் அத்தியாதீனத்தில் அமைச்சராக ஏற்படுத்தினார்கள். உலகத்தின் பல பாகங்களில் கழகம் செய்துவரும் வேலையை எடுத்துரைத்து மக்களுக்கு ஊக்கமூட்டினார். சுவிசேஷ வேலைக்காகப் பொருள் திரட்டினார். 1885 ஆம் ஆண்டு வரை அப்பதவி வகித்தார்.
1885 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழும் தெலுங்கும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகப் பதவி ஏற்றார். இருபத்துமூன்று ஆண்டுகள் இவ்வேலையை ஊக்கத்துடன் செய்தார். அப்பொழுது ஆப்பிரிக்காவில் அத்தியட்சகராக பணிசெய்யப் போகவேண்டுமென்று கழகத்தார் அவரைக் கேட்டுக் கொண்டனர். இப்பணியை ஏற்க அவர் விரும்பவில்லை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் தெலுங்கு மொழிகள் மட்டுமல்லாமல், எபிரெயு மொழி பேராசிரியராகவும் விளங்கினார். கிரேக்கு, லத்தீன் மொழிகளிலும் சிறந்த புலவராகத் திகழ்ந்தார். இம்மொழிகளன்றி இந்திய மொழிகளில் சமஸ்கிருதம், கன்னடம், மலையாள மொழிகளும் அவருக்குத் தெரியும் எனினும் மற்றெல்லா மொழிகளைக் காடிலும் தமிழ் மொழியில் அவருக்குப் பற்று அதிகம். அவர் முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் திருக்குறளேயாகும். பின்னர், ‘நாலடியார்’ என்ற நூலையும் ‘திருவாசகம்’ என்ற நூலையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். ‘புறம்பொருள் வெண்பாமாலை’, ‘புறநானூறு’, ‘திருவருட்பயன்’ என்னும் நூல்களையும் பதிப்பித்தார். ‘மணிமேகலை’ என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். ஆனால் அதை முடிக்கவில்லை உலக முழுவதும் தமிழ் மொழியின் சிறப்பை அறியுமாறு தம் இறுதி காலம் வரை இடைவிடாமல் உழைத்து பல அரிய தமிழ் நூல்களை வெளியிட்டார்.
1906 ஆம் ஆண்டில் “ராயல் ஏஷியாடிக் சொசைட்டி” அவருக்குத் தங்கப் பதக்கம் அளித்தது. பேரறிஞர் பலர் அவருக்கு நண்பராயிருந்தனர். மாக்ஸ்முல்லரும் கவிஞர் பிரெளனிங்கும் அவருடைய தோழராயிருந்தார்கள். இறுதிவரை பல்கலைக் கழகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தார். இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் பேலியல் கல்லூரி ஆலயத்தில் லூக்கா சுவிசேஷம் 15 ஆம் அதிகாரம் 18ஆம் வாக்கியத்தின் பேரில் பிரசங்கம் செய்தார். “நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப் போவேன்” என்பது அவ்வாக்கியம். பின் அதை அச்சிட்டு, இந்தியாவிலுள்ள தம் நண்பர்களுக்கு அனுப்பினார். 1908 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு, 11ஆம் தேதி தமது எண்பத்தெட்டாவது வயதில் மரித்தார்.
தமிழ்மொழியில் பற்றுதலுள்ள புலவராக அவர் செய்த தொண்டை தமிழர் ஒருநாளும் மறக்க முடியாது. தென்னாட்டில் கிறிஸ்தவ ராஜ்ஜியம் பரவுதலுக்காக அவர் செய்த பணிகளைக் கிறிஸ்தவ மக்கள் வாழ்த்துகின்றனர். சாயர்புரம் பள்ளிக்கூடத்தை சிறந்த கலைக்கூடமாக்கியவர் போப் பாதிரியாரேயாவர். அப்பள்ளிக்கூடம் 1930 இல் உயர்தரக் கல்விச்சாலையாக உயர்த்தப்பட்டபோது, அதற்கு ‘போப் ஞாபகார்த்த பாடசாலை என்று பெயர் சூட்டப்பட்டது. அவருடைய புகழ் தமிழ் நாட்டில் எந்நாளும் நிலைநிற்கும்.
பிறப்பு: கி.பி. 1820, ஏப்ரல் 24, (நோவாஸ்கோஷியோ, எட்வர்ட் பிரின்ஸ்)
இறப்பு: கி.பி. 1908, பிப்ரவரி 11
Comments (0)