ஐரோப்பாவில் முதன்முதலாக பதினாறாம் நூற்றாண்டில் தான் ஆலய ஆராதனைகளிலும், இதர வழிபாடுகளிலும் ஞானப்பாட்டுகள் பாடப்பட்டன. 1542 ஆம் வருடம் மார்ட்டின் லுத்தர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து வின்டன்பர்க் என்னுமிடத்தில் வெளியிட்டார். அதற்குப்பின் ஜெனிவன் சங்கீதப்பாட்டுகள் என்ற பெயரால் சில பாடல்கள் வெளியாயின. இவைகளே கிறிஸ்தவச் சபைகளில் பாடப்படும் ஞானப்பாட்டுகளுக்கு ஆரம்பமாகும்.
இப்பாடல்களின் சிறப்பையும் அவைகளால் நாம் பெரும் ஆறுதலையும், இன்பத்தையும் ஆங்கில மக்கள் அறிந்து கொள்ள அநேக ஆண்டுகளாயின. பல கவிஞர்கள் கவிதைகளை எழுதிவந்த போதிலும், டாக்டர் வாட்ஸ், சார்லஸ் வெஸ்லி என்பவர்கள் காலம் வரைக்கும் ஆங்கில மக்களால் அவை ஆதரிக்கப்படவில்லை. இவ்விருவரில், சார்லஸ் வெஸ்லி கணக்கற்ற பாடல்களை எழுதினார். அவர் எழுதிய ஞானப்பாட்டுகளின் தொகை 6500 என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அவைகளில் சுமார் 500 பாடல்கள் இப்பொழுதும் பாடப்பட்டு வருகின்றன. டாக்டர் வாட்ஸ் எழுதிய பாடல்கள் 454 ஆகும்.
இப்பாடல்களில் ‘கர்த்தாவே, யுக யுகமாய், எம் துணை ஆயினீர்’ என்று ஆரம்பிக்கும் பாடலை ‘கிறிஸ்தவச் சபையின் தேசியகீதம்’ என்று ஆங்கில மக்கள் சொல்வதுண்டு. இப்பாட்டிற்கு இது பொருத்தமான பெயரேயாகும். இங்கிலாந்தில் அநேகமாக எல்லா தேசீய நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டுவரும் பாடல் இது. விக்டோரியா மகாராணிக்கு நினைவுச் சின்னம் திறந்து வைத்த போதும், ஏழாவது எட்வர்ட் அரசனுடைய அடக்க ஆராதனையிலும், இளவரசன் எட்வர்டு, வேல்ஸ் இளவரசனாக நியமிக்கப்பட்டபொழுது நடந்த ஆராதனையிலும் இப்பாடல் பாடப்பட்டது. இது 9 ஆம் சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பாடலாகும்.
வாட்ஸ் பதினெட்டு வயது நிரம்பின வாலிபனாயிருக்கும்பொழுது அவருடைய தந்தை செளதாம்படனிலுள்ள ஒரு சிற்றாலயத்தில் டீக்கனாகப் பணியாற்றி வந்தார். ஆலய ஆராதனைகளில் சரியான இசையமைக்கப்படாத தாவீதின் சங்கீதங்கள் பாடப்பட்டு வந்தன. வாட்ஸூடைய செவிகளுக்கு அவை இனிமையாகத் தோன்றவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தம்முடைய தந்தையுடன் அதைக்குறித்துப் பேசினார். அதற்கு அவர், “வாலிபனே, அப்படியானால் நீ அவைகளைவிட மேலானதைச் சபைகளுக்கு கொடு” என்று கூறினார். வாட்ஸ் அதைத் தமக்கு ஒரு சவாலாக எடுத்து, உடனடியாக அன்று சாயங்கால ஆராதனைக்குள் ஒரு ஞானப்பாட்டை எழுதி, அதற்கு இசை அமைத்துக் கொடுத்தார். அன்று அது ஆலயத்தில் பாடப்பட்டபொழுது, சபையின் மக்கள் அதனைப் புகழ்ந்தனர். அது முதல் வெள்ளப்பிரவாகம்போல் அவருடைய பாடல்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
வாட்ஸ் செளதாம்ப்டனில் 1674 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். ஐசக் வாட்ஸ் என்பது இவருடைய முழுப் பெயராகும். குடும்பத்தில் பிறந்த ஒன்பது மக்களுள் இவர் முதல் பிறந்தவர். அப்பொழுது இவருடைய தந்தை ஒரு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். வாட்ஸ் பெலவீனமான சரீரம் படைத்தவர். இளமையிலிருந்தே கூர்மையான புத்தியும், எதையும் கற்பதில் ஆர்வமுள்ளவராகவும் காணப்பட்டார். தம்முடைய படிப்பை முடித்தவுடன் லண்டன் மாநகரத்தில் ஒரு ஆலயத்தில் சபை குருவாகப் பணியாற்றினார். சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின்பு அவருடைய உடல்நலம் குன்றியதால், 1714 ஆம் ஆண்டு ஹெர்போர்டுஷையரிலிருந்த சர் தாமஸ் அபினியும், அவருடைய மனைவியும் ஓய்வு எடுக்கும்படி அவரை வற்புறுத்தி, தங்களிடம் தங்கும்படி அழைத்தார்கள்.
அவருடைய தூய்மையான வாழ்க்கையும், பரந்த அறிவும், கவித்திறனும் அவர்களுடைய மனதைக் கவர்ந்தன. அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி, அவர்களுடன் நிரந்தரமாகத் தங்கினார். அவர்களுடன் தங்கியிருக்கும்பொழுது, தான் விரும்பினபோது சபை மக்களைச் சந்திக்கவும், ஆலயங்களில் பிரசங்கங்கள் செய்யவும், தம்முடைய எழுத்துப் பணியில் ஈடுபடவும் அவருக்கு அவகாசம் கிடைத்தது.
டாக்டர் வாட்ஸ் புகழ் பெற்ற ஒரு கவிஞர். அத்துடன் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். திருமறை விளக்கங்களும், சரித்திரம், தத்துவ சாஸ்திரம் இவைகளைக் குறித்து கட்டுரைகளும் அவர் எழுதி வந்தார். ஆனால் அவர் எழுதிய ஞானப்பாட்டுகள் மூலமாகவே பெரும் புகழ் பெற்றார். அவருடைய மேசையின்மீது எப்பொழுதும் ஏராளமான புத்தகங்களும், ஒரு வேத புத்தகமும், ஒரு புல்லாங்குழலும் இருந்தன. தம்முடைய ஞானப்பாட்டுகளை மக்கள் பாடி, அவைகளின் மூலமாய் மக்கள் கிறிஸ்துவினண்டை இழுக்கப்பட வேண்டுமென்பது அவருடைய விருப்பம்.
தம்முடைய முதுமை காலத்தை ஸ்டோக்நியூமிஞ்டன் என்னுமிடத்தில் செலவிட்டார். உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தமையால், வாழ்நாள் முழுவதும் சரீரத்தில் கஷ்டப்பட்டார். ‘சரீர சிட்சைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்’ என்று கடவுளிடம் கூறிய பக்தருள் இவரும் ஒருவர். அத்துன்பத்தைப் பெருமையுடன் சகித்து, வெற்றி வாழ்க்கை நடத்தி, 1748 ஆம் வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தமது 75 ஆம் வயதில் இவர் மரித்தார். அவர் மரிப்பதற்கு சற்று முன்பு, “கடவுளின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறேன். கிறிஸ்து சிந்தின இரத்தத்தால் என் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நான் அவரிடம் அச்சமின்றிச் செல்வேன்,” என்று கூறியவைகளே அவரது கடைசி வார்த்தைகளாகும். அவரது நினைவாக எழுப்பப்பட்ட ஒரு நினைவுச் சின்னம், லண்டன் மாநகரிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபே என்னும் தேசீயப் பேராலயத்தில் இன்றும் உள்ளது.
பிறப்பு: கி.பி. 1674, ஜூலை 17, (லண்டன்)
இறப்பு: கி.பி. 1748, நவம்பர் 25, (லண்டன்)
Comments (0)