பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் சார்லஸ் வெஸ்லியின் பிரசங்கங்களைக் கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மனம்மாறி கிறிஸ்துவின் மெய்யடியார்களானார்கள். கிறிஸ்துவின் பேரில் வெஸ்லி கொண்டிருந்த அன்பும், அவருடைய சுவிசேஷ வாஞ்சையும் அவர்களுடைய மனதைக் கவர்ந்தன. அவர்களில் பலர் அவரைப் பின்பற்றிக் கிறிஸ்தவ சேவைக்கென்று தங்களை ஒப்புக் கொடுத்தனர். அவர்களுள் தாமஸ் ஆலிவர்ஸ் என்பவர் ஒருவராவர்.
வெஸ்லியின் கீழ் சேவை செய்யும்முன், ஆலிவர்ஸ் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். சிறுவனான அவர் கல்வியில் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஆனால் அக்காலத்தில் நல்ல குடும்பங்களிலுள்ள இளைஞருடன் பழக அவருக்கு வாய்ப்பு இல்லாமற் போயிற்று. கவித்திறன் இளமை பருவத்திலேயே அவரில் காணப்பட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் கவிகள் எழுத முயற்சித்து வந்தார். வளர வளர கெட்ட சகவாசத்தால் தீய குணங்கள் அவரிலுள்ள நற்குணங்களை மேற்கொண்டன. அவருடைய நண்பர்கள் அவரைக் குடியிலும் தீயக்காரியங்கள் செய்வதிலும் வழிநடத்தினர். அவர்களுடன் சேர்ந்து ஆலிவர்ஸ் தீய வழிகளில் செல்லத் தலைப்பட்டார்.
இந்நிலையில் ஒரு நாள் அவர் சார்லஸ் வெஸ்லி தெருவில் நின்று செய்த பிரசங்கங்களில் ஒன்றைக் கேட்டார். பாவிகளின் மீது கிறிஸ்து கொண்டிருக்கும் அன்பைக் குறித்து அன்று வெஸ்லி பிரசங்கம் செய்தார். அவர் கூறிய வார்த்தைகள் ஆலிவர்ஸின் மனதைத் தொட்டன. தாம் செய்த பாவங்களுக்காக அவர் மனஸ்தாபப்பட்டு, நமதாண்டவரிடம் அவைகளை அறிக்கையிட்டு அவருடைய மன்னிப்பை நாடினார். பின்பு தம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதையும் கிறிஸ்துவின் மீட்பின் வல்லமையும் உணர்ந்து மகிழ்ச்சியடைந்தார்.
கிறிஸ்துவின் அடியானாக மாறினபின்பு, தம்முடைய வாழ்நாட்களெல்லாம் அவருக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். எனவே அதற்காகத் தம்முடைய வேத அறிவைப் பெருக்கவும், தம்முடைய உள்ளத்தைப் பக்குவப்படுத்தவும் கிறிஸ்துவின் மெய்யடியார்களாக வாழ்ந்தவர்கள் ஐக்கியத்தில் சில காலம் செலவிடுவததென்று முடிவு செய்தார். அக்காலத்தில் இங்கிலாந்தில் பற்பல இடங்களில் கிறிஸ்துவுக்கு பூரணமாகத் தங்களை ஒப்புக் கொடுத்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் சேர்ந்து சில காலம் வேதம் வாசித்து, ஜெபம் செய்து, கிறிஸ்து ஐக்கியத்தில் செலவிட்டு இன்புற்றிருந்தார். ஆண்டவரின் அருளால் சிறிது காலத்தில் வேத அறிவிலும், பேச்சு வன்மையிலும் சிறந்து விளங்கி சார்லஸ் வெஸ்லியிடம் ஒரு சுவிசேஷ போதகராக அமர்ந்தார். அப்பொழுது ஆலிவர்சுடைய வயது 28.
கல்வித்திறனைக்கொண்டு அவர் செய்த பணி
தாமஸ் ஆலிவர்ஸ் கவித்திறனுள்ளவர். வெஸ்ட் மினிஸ்டர் என்னுமிடத்திலிருந்த வெஸ்லியின் அடியான் ஜான் பேக்கர் என்பவரின் இல்லத்திற்கு ஒரு சமயம் ஆலிவர்ஸ் சென்றிருந்தார். அங்கிருந்தபொழுது அவ்வூரிலிருந்த யூதருடைய ஜெப ஆலயத்திற்குச் சென்றார். சிக்னர் லியோனி என்ற ரபி அவ்வாலயத்தில் ஒரு பாட்டை இனிய இசையுடன் பாடிக்கொண்டிருந்தார். அந்த இசை ஆலிவர்சுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே தமது நண்பருடைய வீட்டிற்குத் திரும்பியவுடன் கிறிஸ்தவச் சபை மக்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய வசனங்களுடன் ஒரு பாடலை அந்த இசைக்குப் பொருந்துமாறு அமைத்து எழுதுவதில் முனைந்தார். “முன்னோரின் தெய்வமாம்” என்று ஆரம்பிக்கும் பாடலை அன்றே எழுதி முடித்தார்.
இப்பாடல் ஒரு தெய்வ துதி பாடலாகும். இது வெகு சீக்கிரம் கிறிஸ்தவ மக்களுக்குப் பிரியமான பாடல்களில் ஒன்றாக விளங்கிற்று. வெளியிடப்பட்ட இரண்டாம் ஆண்டில் எட்டு வெளியீடுகள் தேவைப்பட்டன. இதன் இசையில் முதன் முதலாகப் பாடிய லியோனி என்பவரின் பெயர் இப்பாடலின் இசைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
தாமஸ் ஆலிவர்ஸ் ஒரு சுவிசேஷ பிரசங்கியார். கிறிஸ்தவப் பணி செய்துவரும்பொழுது, பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டு, தம் மனதில் எழுந்த எண்ணங்களையும், கிறிஸ்தவச் சத்தியங்களையும், கிறிஸ்தவ மக்களின் ஆத்ம நலனுக்காகப் பாடல் வடிவாக அவர் எழுதி வந்தார். இவர் பல பாடல்களை இயற்றியுள்ளார். அவைகளுள் நம் பாமாலையில் இப்பாடல் ஒன்று மட்டும் இடம் பெற்றுள்ளது. கணக்கற்ற மக்கள் இன்னும் அவர் இயற்றிய பாடல்களினால் பயனடந்து வருகின்றனர்.
பிறப்பு: கி.பி. 1725, (இங்கிலாந்து)
இறப்பு: கி.பி. 1799, (லண்டன், இங்கிலாந்து)
Comments (0)