Today Bible Verse

St. Theodulph History in Tamil

 

       கிறிஸ்துநாதர் பாடுபடுவதற்கு முன்னே அவர் ஒரு கழுதைக் குட்டியின்மேல் பயணம் செய்து, அரச மரியாதைகளுடன் மகத்துவமாக எருசலேம் நகரத்துக்குள் சென்றார். அப் பவனியில் அவரது சீடரும், ஏராளமான யூதரும், பிள்ளைகளும் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு ஓசன்னா பாடிச் சென்றனர். இப்பவனியின் நினைவாக உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முந்தின ஓய்வுநாளை, ‘குருத்தோலை ஞாயிறு’ என்னும் பெயருடன் திருச்சபை ஆசரித்து வருகிறது. சுமார் ஆயிரத்து நூற்று அறுபது ஆண்டுகளுக்குமுன் ஒரு குருத்தோலை ஞாயிறன்று, முதல் முதலாகப் பாடப்பட்ட ஒரு பாடலே ‘ஓசன்னா பாலர் பாடும்’ என்னும் பாடலாகும்.

     கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் தியோடல்ப் என்னும் ஒரு வாலிபன் இருந்தார். அவர் இளம் வயதிலேயே துறவிகள் மடத்தில் சேர்ந்து, சிறந்த பணியாற்றி வந்தார். நல்ல கல்வியறிவும், மடத்தை நல்லமுறையில் நடத்தும் திறமையும் உடையவராதலால், வெகு சீக்கிரத்தில் அவர் மடத்தின் தலைவரானார். அக்காலத்தில் மடங்களிலும், திருச்சபையிலும் குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் உண்டாவது வழக்கமாய் இருந்தது. பக்தன் தியோடல்ப் இக்குழப்பங்களைத் திறமையுடன் சமாளித்து, மடத்தைச் சுற்றியுள்ள மக்களைச் சமாதானமாக வாழச் செய்தார். இவரது சிறந்த அறிவையும், பக்தியையும், திறமையையும் கேள்வியுற்ற பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தியான சார்லிமாக்னே என்பவர் தியோடல்பை ஆர்லியன்ஸ் நகரத்தின் அத்தியட்சகராக நியமித்தார்.

     மத்திய காலத்தில் மத குருக்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவராயிருந்தனர். பொதுமக்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள். ஆதலால், அரசியல் விஷயங்களில் மத குருக்களும், தலைவர்களும் அதிகமாகத் தலையிடும் வாய்ப்பு இருந்தது. தியோடல்பை ஆதரித்த மன்னன் சார்லிமாக்னே இறந்தபின் அவரது புதல்வரான லூயி அரசன் ஆட்சி புரிந்தார். ஆட்சியில் அவருக்குப் பல தொந்தரவுகள் நேரிட்டன. தியோடல்ப் அத்தியட்சகரிடம் பொறாமை கொண்ட பலர் அரசனிடம் சென்று, அவர் ராஜ துரோகியென்றும், அவராலேதான் அரசனுக்குத் தொந்தரவுகள் உண்டாயின என்றும் பொய்ப் புகார் செய்தனர். அரசன் கோபமூண்டு, தியோடல்பை ஆங்கர்ஸ் நகரத்தில் சிறையிலடைத்தார். அவர் மூன்று ஆண்டுகள் சிறையில் அவதிப்பட்டார். இந்த நேரத்தை அவர் வேத ஆராய்ச்சியிலும் பாடல்கள் எழுதுவதிலும் செலவிட்டார்.

     கி.பி. 821 ஆம் ஆண்டு, குருத்தோலை ஞாயிறன்று, லூயி அரசன் ஆங்கர்ஸ் நகரத்துக்கு வந்திருந்தார். வழக்கம்போல அரசன் தன் பரிவாரங்களோடும், மத குருக்களோடும் காலையில் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு ஆலயத்துக்குப் பவனி சென்றார். தியோடல்ப் அடைப்பட்டிருந்த சிறை வழியாகப் பவனி செல்லும்போது, இத்தினத்திற்காக ஏற்கனவே அத்தியட்சகர் எழுதி வைத்திருந்த, ‘ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே’ என்ற பாடலைச் சிறைக் கம்பிகளுக்குள் நின்று உரத்த சத்தமாய்ப் பாடினார்.

       இதைக்கேட்ட அரசனும் பரிவாரங்களும் அமைதியாகப் பாடல் முடியும்வரை அங்கேயே நின்றனர். பாடல் முடிந்தவுடன் அரசன். “இப்பாடலை எழுதிய அத்தியட்சகர் ராஜ துரோகியல்ல, இவரை விடுதலை செய்யுங்கள்” என்று கட்டளையிட்டு, அவரை முன்போல ஆர்லியன்ஸ் நகரத்தில் அத்தியட்சகராக நியமித்தார். மேலும் ஒவ்வொரு குருத்தோலை ஞாயிறன்றும் இப்பாடல் அந்நாட்டின் ஆலயங்களிலெல்லாம் பாடப்படவேண்டுமென்றும் கட்டளையிட்டார்.

     இப்பாடல் முதலில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது. 1842 இல் ஜான் மேசன் நீல் என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, பின்னர் தமிழ் உள்பட ஏராளமான பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகமெங்கும் குருத்தோலை ஞாயிறன்று பாடப்பட்டு வருகின்றது. இப்பாடலுக்கு நாம் பாடும் இராகம் முதலில் அத்தியட்சகர் தியோடல்ப் பாடிய இராகமல்ல. நாம் பாடும் இராகமானது டெஷ்னர் என்பவரால் எழுதப்பட்டு, அத்தியட்சகர் நினைவாக ‘St. Theodulph’ என அழைக்கப்படுகிறது.

Posted in Missionary Biography on November 29 at 01:24 PM

Comments (0)

No login
gif