இங்கிலாந்தில் கிறிஸ்தவப் பக்தருள் சிலர் சபை போதகர்களாக பணியாற்றி, அத்துடன் கவிஞர்களாகத் திகழ்ந்து, அழியாப் புகழைப் பெற்றிருக்கின்றனர். அப்பெருமக்களுள் போதகர் பாரிங்கோல்டு ஒருவராவார். இவர் ஒரு சிறந்த கிறிஸ்தவப் பக்தன். எந்தச் சபைக்கு குருவாகச் சென்றாலும், வெகு சீக்கிரத்தில் அச்சபை மக்களின் நன்மதிப்பைப் பெற்று வந்தார். அவருடைய தூய வாழ்க்கையும், சபை மக்களின் நன்மதிப்பைப் பெற்றுத்தர உதவி செய்தது. சபை மக்களின் நல்வாழ்விற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அவர் காட்டிய ஊக்கமும் அதற்குக் காரணங்களாகும்.
பாரிங்கோல்டு கவிகள் எழுதும் திறனுள்ளவர். அவர் அநேக ஞானப்பாட்டுகள் எழுதியுள்ளார். அவைகளில் மூன்று “துக்கம் திகில் இருள் சூழ” என்று ஆரம்பிக்கும் பாடலும், “யுத்தம் செய்வோம் வாரும்”, “உயிர்த்தெழும்பும் காலை தன்னில்,” என்று ஆரம்பிக்கும் ஞானப்பாட்டும் பாமாலையிலுள்ளன.
பாரிங்கோல்டு ஒவ்வொரு நாளும் பெரும்பாகத்தை வேத வாசிப்பிலும், ஜெபத்திலும் தியானத்திலும் செலவிட்டு வந்தார். மறு உலக வாழ்க்கைக் காட்சி அவருடைய மனக்கண்ணில் அடிக்கடி வந்து மறையும் எனவே அவர் எழுதிய பாடல்களில் மறு உலக நித்திய ஆனந்தத்தைக் குறித்து எழுதுவது அவருக்குப் பழக்கமாயிற்று. பாமாலையிலுள்ள ஒரு பாடலில் “அங்கு துக்கம் திகில் யாவும் நீங்கிடுமென்றும், பூரிப்பானந்தம் ஒன்றே உண்டு” என்றும் எழுதியுள்ளார். மற்றொரு பாடல் முழுவதும் உயிர்த்தெழும்பும் நாளின் மாட்சியைக் குறித்து எழுதியுள்ளார். மறு உலக வாழ்க்கையை எதிர்நோக்கியவராக அதற்குத் தம்மை பக்குவப்படுத்தி அவர் வாழ்ந்து வந்தார்.
கவித்திறனைக்கொண்டு அவர் செய்த தொண்டு
இங்கிலாந்தில் யார்க்க்ஷயர் பகுதியில் ஹார்பரி என்ற கிராமம் ஒன்று உள்ளது. அங்குள்ள கிறிஸ்தவச் சபையின் மக்கள் பரிசுத்த ஆவியின் திருநாளைச் சிறப்புடன் கொண்டாடி வந்தனர். அன்று ஓய்வு நாள் பள்ளியிலுள்ள சிறுவர் சிறுமிகள் பாடல்களைப் பாடிக்கொண்டு சபை மக்கள் குடியிருந்த தெருக்கள் வழியாக ஊர்வலம் வந்து இறுதியில் ஆலயத்திற்கு சென்று தேவ ஆராதனையில் பங்கெடுப்பது வழக்கம். அவ்வாறு ஊர்வலம் வரும்பொழுது பாடுவதற்குத் தகுந்த பாடல்களை அதற்கு முந்தின ஞாயிற்றுக்கிழமையன்று போதகருடன் கலந்து தெரிந்தெடுப்பதுண்டு.
ஒரு வருடம் பரிசுத்த ஆவியின் பண்டிகைக்குச் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் போதகர் பாரிங்கோல்டு புதிதாக ஹார்பரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சென்று சபையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டபொழுது, அச்சபையின் மக்கள் அவரிடம் சென்று பரிசுத்த ஆவியின் பண்டிகையன்று ஓய்வு நாள் பாடசாலையின் சிறுவர் சிறுமிகள் பாடிக்கொண்டு ஊர்வலம் செல்லும் பழக்கத்தை அவரிடம் தெரிவித்து, பவனியில் செல்கையில், பிள்ளைகள் பாடுவதற்குத் தகுதியான பாடலைத் தெரிந்தெடுக்கும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர்.
சிறுபிள்ளைகளின்மீது மிகப் பற்றுதலுள்ளவர் பாரிங்கோல்டு. ‘கவித்திறனுள்ள ஒரு கிறிஸ்தவச் சபையின் ஞானப்பாட்டுகள்’ என்ற இரண்டு பாடல் புத்தகங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளில் பாடக்கூடிய பாடல்களிருந்தன. அவர் அவைகளைப் பாடிப்பார்த்து பரிசுத்தாவியின் திருநாளன்று பவனியில் பிள்ளைகள் பாடக்கூடிய பாடலொன்றை தெரிந்தெடுப்பதில் முனைந்தார். அவைகள் ஒன்றும் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே அவ்விழாவிற்கேற்றதாக ஒருபாடலைத் தாமே இயற்ற முற்பட்டார். அதைக் குறித்து சிந்தனை செய்கையில் அடுத்தடுத்த சபையிலுள்ள சிறு பிள்ளைகள் கிறிஸ்துவின் நாமத்தில் மகிழ்வுடன் செல்லும் காட்சி அவர் மனக்கண்முன் நின்றது.
‘கிறிஸ்து சபை’ வல்லசேனை போன்றது என்ற எண்ணம் அவருடைய உள்ளத்தில் பட்டது. சிறுவர் சிறுமிகள் கிறிஸ்துவின் கொடியின் கீழ் சாத்தானுக்கு விரோதமாகப் போர் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. இரவில் வெகுநேரம் உட்கார்ந்து அதைக் குறித்துச் சிந்தனை செய்து ‘யுத்தம் செய்வோம், வாரும், கிறிஸ்து வீரரே’ என்று ஆரம்பிக்கும் பாடலை அவர் எழுதி முடித்தார். பரிசுத்த ஆவியின் திருநாளன்று அந்த ஊரில் பவனிச்சென்று சிறுவர் சிறுமிகள் முதன்முதலாக இப்பாடலைப் பாடிச் சென்றனர்.
சிறுபிள்ளைகள் பவனி செல்லும்பொழுது பாடுவதற்காக இயற்றப்பட்ட இப்பாடல் சிறப்புப்பெற்று உலகமெங்குமுள்ள கிறிஸ்தவ மக்களால் இப்பொழுதும் பாடப்பட்டு வருகின்றது. இரண்டொரு வரிகளை அனைவரும் பாடுவதற்கென்று பாரிங்கோல்டு திருத்தி அமைத்தார். சர். ஆர்தர் சலிவன் அமைத்த ‘பரி. கெட்ரூட்’ என்ற ராகம் இப்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது. அதற்குப்பின் முன்னிலும் அதிகமாய் கிறிஸ்தவர்கள் இப்பாடலைப் பாடலானார்கள்.
பாரிங்கோல்டு எழுதியுள்ள பாடல்கள் அநேகமுள்ளன. அவை கிறிஸ்தவ மக்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்து, கிறிஸ்தவ விசுவாசத்தில் அவர்களை வேரூன்றச் செய்வனவாயுள்ளன. தூய வாழ்க்கையைக் கடைப்பிடித்து வந்த பக்தன் அவர். எளிய நிலைமையிலுள்ள மக்களுக்கு அவர் பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்தார். அவர் 1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி தமது 90 ஆம் வயதில் மரணமடைந்தார். ஒரு பக்தன் நமதாண்டவரிடம் தனது அன்பைச் செலுத்தி மக்களுக்கும் சிறந்த தொண்டு செய்யக்கூடும் என்பதற்கு இக்கவிஞருடைய வாழ்க்கை எடுத்துக்காட்டாக திகழ்கின்றது.
பிறப்பு: கி.பி. 1834, ஜனவரி 28, (இங்கிலாந்து)
இறப்பு: கி.பி. 1924, ஜனவரி 2, (இங்கிலாந்து)
Comments (0)