Today Bible Verse

Rev. John Keble History in Tamil

     ஜான் கிபிள் இங்கிலாந்தில் கிளஸ்டர் பகுதியிலுள்ள ஃபேர் ஃபோர்டு என்னுமிடத்தில் 1792 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சபை குரு. பள்ளிக்கூடத்திற்குக் கிபிள் சென்று வந்தபோதிலும், அவருடைய தந்தையே அவருக்குத் தம்முடைய வீட்டில் தகுந்த பயிற்சியளித்து ஆசிரியராக விளங்கினார். இளமையிலேயே புத்திக்கூர்மையும், கல்வி கற்பதில் ஆர்வமுள்ளவராகவும் அவர் காணப்பட்டார். இவர் தம்முடைய பதினைந்தாம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அவருள் கிறிஸ்துவின் பேரிலுள்ள அன்பு வளரவும், கிறிஸ்தவப் பண்பு உருவாகவும் வேண்டுமென்று விரும்பி, அவருடைய தந்தை அவருடைய வளர்ப்பில் மிக அக்கறை காட்டி வந்தார்.

      கிபிள் தம்முடைய பதினெட்டாம் வயதில் கணிதத்திலும், கிரேக்கு, லத்தீன் மொழிகளிலும் முதலாவதாகத் தேறினார். ஆக்ஸ்ஃபோர்டில் பிரசித்தி பெற்ற ஓரியல் கல்லூரியில் அவர் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். தம்முடைய கல்வியறிவையும், தாலந்துகளையும் அக்காலத்திலேயே கடவுளுக்கு அர்ப்பணம் செய்தார். தமது இருபத்து மூன்றாம் வயதில் படிப்பை முடித்துக்கொண்டு, குருவாக அபிஷேகம் செய்யப்பட்டார்.

கிறிஸ்தவப்பணி

   முதலில் ஆக்ஸ்ஃபோர்டு சர்வகலாசாலையில் உதவி ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினார். அறிஞர் பலருடன் பழகி நட்புகொள்ள அவருக்கு வாய்ப்புக்கிட்டியது. ஆனால் ஆக்ஸ்ஃபோர்டிலேயே நீடித்திருந்து ஆசிரியராகப் பணிசெய்ய வேண்டுமென்று எண்ணம் அவருக்கு இல்லை. குருவாகப் பணியாற்றி, சபைகளுக்குச் சேவை செய்வதையே விரும்பினார். இந்நிலையில் அவருடையை தாயார் மரித்தார். தம்முடைய மனவிருப்பத்தை நிறைவேற்றுகிறதற்கு ஏற்ற சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது. தம்முடைய தந்தையுடன் சேர்ந்து, பரந்துகிடந்த அவருடைய எல்லைக்குட்பட்ட மக்களுக்குப் பணிசெய்ய அனுமதி கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவருடைய தந்தைக்குச் சபை ஊழியத்தில் உதவி செய்து வந்தார்.

     கல்லூரியில் மாணவனாக இருக்கும்பொழுதே கிபிள் ஒரு கவிஞராக விளங்கினார். அவருடைய கவித்திறனையறிந்த தந்தை அவர் கவிதைகள் எழுதுவதில் உற்சாகமூட்டி வந்தார். அவர் கைவசமிருந்த பாடல்களை ஒரு புத்தகமாக வெளியிடும்படி அவருடைய மகனைக் கேட்டுக்கொண்டார். புகழை விரும்பாதவர் கிபிள். தம்முடைய பெயரால் அவைகள் அச்சிடப்படுவதை அவர் விரும்பவில்லை. தம்முடைய பெயரில்லாமல் ‘கிறிஸ்தவ ஆண்டு’ என்ற தலைப்புடன் தாம் எழுதிய பாடல்களை அச்சடித்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். ஞாயிற்றுக்கிழமைகளிலும், திருநாட்களிலும் பாடப்படும் முறையில் அவைகளைத் தொகுத்துப் பிரசுரம் செய்தார். ரக்பியிலுள்ள பிரசித்திப்பெற்ற பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரான டாக்டர் ஆர்னால்டும், டாக்டர் புசி என்ற பெரியாரும் அப்புத்தகத்தில் அடங்கியிருந்த பாடல்களை வெகுவாய் புகழ்ந்தார்கள்.

      1835 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிபிளின் தந்தை தமது  தொண்ணூறாம் வயதில் மரித்தார். அதே வருடம் கிபிள் வின்செஸ்டருக்கு அருகிலுள்ள ஹர்ஸ்லிக்குச் சபை குருவாக மாற்றப்பட்டார். அந்த இடத்தின் சூழ்நிலையும், அமைதியும், அவ்வூரைச் சுற்றியிருந்த கிராம மக்களின் அன்பும் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவ்வருடம் அக்டோபர் மாதம் சார்லட் கிளார்க் என்ற பெண்மணியை அவர் மணந்தார்.

ஹர்ஸ்லியில் அவருடைய ஊழியம்

      கிபிள் ஹர்ஸ்லியில் 30 வருடங்கள் சபை குருவாகப் பணியாற்றினார். பக்திப் பாடல்கள் பலவற்றை அவர் எழுதினார். கிறிஸ்துவின் பேரில் பற்றுதலுள்ளவராக வாழ்ந்து, பல்வேறு வகைகளில் சபை மக்களின் ஆத்ம நலனுக்காக அவர் உழைத்தார். சபையில் பொறுப்பை ஏற்றவுடன் ஆலயத்தில் தினசரி ஆராதனை நடத்த ஆரம்பித்தார். சிறுவர், சிறுமியர்களுக்கு நடத்தும் ஓய்வுநாள் பள்ளியைத் தவிர, முதியோருக்கு வேத ஆராய்ச்சிக் கூட்டமொன்றும் அவர் நடத்தினார். புதன்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் திடப்படுத்துதலுக்காக ஆயத்தம் செய்யும் இளைஞருக்குப் பாடம் கற்பித்து வந்தார். அவர்களில் யாராவது வர இயலாதிருந்தார்களென்று அறிந்தால், ஒரு கை விளக்கை பிடித்துக்கொண்டு இரவில் அவர்கள் வீட்டிற்குச் சென்று, கிறிஸ்தவச் சத்தியங்களைக் குறித்தும், புனித சமயச் சடங்குகளைக் குறித்தும் அவர்களுக்குப் போதிப்பார். இவ்வாறு இளைஞருக்குப் போதித்து, அவர்களுடன் நெருங்கிப் பழகுவதனால் கிறிஸ்துவினிடம் அவர்கள் வழி நடத்தப்பட்டு மீட்பின்பேறு பெறக் கூடுமென்பது அவருடைய கருத்து. அவர்களுக்கு வேத புத்தகத்தைக் கருத்தூன்றிப் படித்துக் காட்டுவார்.

      தமது கண்களை மூடி, தலைகுணிந்து ஜெபம் செய்து, பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு வேதப் புத்தகத்திலுள்ள சத்தியங்களைக் காட்ட வேண்டுமென்று கடவுளிடம் மன்றாடுவார். அரிய சத்திய வசனங்களை ஒரு பென்சிலைக் கொண்டு அடிக்கோடிடுவார். தாம் வேதாகமம் கற்றுக்கொடுத்த மாணவருக்கு அந்த வேதாகமப் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுப்பார். அவைகளை அவர்கள் பெரிதும் மதித்து, அவருடைய நினைவாக அவைகளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதுண்டு.

     பரந்துகிடந்த அவருடைய சபையின் எல்லையிலுள்ள சுமார் 1500 மக்கள் வழிபடுவதற்கென்று இரண்டு கோயில்களை ஒன்று ஆட்டர்போர்ன் என்னுமிடத்திலும், மற்றொன்றை ஆம்ஃபீல்டு என்னுமிடத்திலும் கட்டினார். ஹர்ஸ்லியிலுள்ள ஆலயத்தையும் அவர் புதுப்பித்துக் கட்டினார். ‘கிறிஸ்தவ ஆண்டு’ என்ற தலைப்பில் தாம் எழுதிய பாடல்களைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டாரென்று நான் முதலில் கூறியுள்ளேன். அப்புத்தகங்கள் சீக்கிரத்தில் விற்கப்பட்டன. அதில் கிடைத்த பணத்தை ஆலயங்களைக் கட்டவும், ஹர்ஸ்லி ஆலயத்தைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தினார்.

     எலிசபெத் என்ற அவருடைய சகோதரி கிபிளுடன் தங்கி ஒருவருக்கொருவர் துணையாக விளங்கி வந்தார்கள். எலிசபெத் உடல் நலமற்றவர். இருப்பினும் சகல நற்குணங்களும் படைத்தவர். 1860 ஆம் ஆண்டு தமது எழுபதாவது வயதில் அவர்கள் மரித்து, இறைவனடி சேர்ந்தார்கள். அவர்கள் மரித்தபொழுது கிபிள் கூறியதாவது: “இருபது வருட சுக வாழ்விலும், ஐம்பது வருடங்கள் உடல்நலம் குன்றியிருந்த நிலைமையிலும் அவரிடமிருந்து அன்பற்ற அல்லது தீய பார்வையையோ, வார்த்தையையோ பார்த்ததும், கேட்டதும் கிடையாது.”

     முதுமை காரணத்தால் குளிர்காலங்களில் கிபிளின் உடல்நலம் பாதிக்க ஆரம்பித்தது. எனவே, வெப்பமுள்ள இடங்களில் தங்கி நாட்களைச் செலவு செய்யலானார். பென்ஜான்ஸ், டார்க்குவே, போர்ன்மெளத் முதலான இடங்களுக்குச் சென்றார். போர்ன்மெளத் என்னுமிடத்திலிருக்கும்பொழுது 1866 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி கிபிள் திடீரென்று மறுமைக்குள் பிரவேசித்தார். அவருடைய மனைவியும் அதற்குப்பின் நீடித்து வாழவில்லை. ஆறு வாரங்களுக்குப்பின் அவர்களும் மரித்து நமதாண்டவரின் திருப்பாதம் சேர்ந்தார்கள்.

     தலைசிறந்த குருவாக சபையின் மக்களுக்கும், ஒரு கவிஞராக உலகமனைத்திலுமுள்ள கிறிஸ்தவ மக்களுக்கும் தம் பாடல்களின் மூலமாகவும் கிபிள் சிறந்த பணி செய்திருக்கின்றார். ‘மெய் ஜோதியாம் நல் மீட்பரே’, ‘நாம் நித்திரை செய்து விழித்தோம்’, ஏதேனில் ஆதிமணம் என்று ஆரம்பிக்கும் பாடல்களைத் தவிர இன்னும் பல சிறந்த பாடல்களையும் கிபிள் எழுதியிருக்கிறார். கிறிஸ்துவின் அன்பை நன்குணர்ந்த பக்தன் கிபிள், அவரை ‘மெய்ஜோதி’ என்றும், ‘நல்மீட்பர்’ என்றும் உள்ளத்தில் உணர்ந்த காரணத்தால், நெஞ்சுருகும்படியாக இப்பாடல்களை எழுதியுள்ளார். கிறிஸ்துவின் பேரில் இவர் அன்பும், ஆழ்ந்த பக்தியுமுள்ளவர் என்பதை அவருடைய பாடல்கள் சிறப்புடன் விளக்குகின்றன.

பிறப்பு: கி.பி. 1792, ஏப்ரல் 25, (இங்கிலாந்து)

இறப்பு: கி.பி. 1866, மார்ச் 29, (இங்கிலாந்து)

Posted in Missionary Biography on November 30 at 05:15 AM

Comments (0)

No login
gif