கடவுளின் அழைப்பைப் பெற்று கிறிஸ்தவ நற்செய்தியை அறிவிக்கும்படி தமிழகத்துக்கு வந்த மேனாட்டு திருத்தொண்டரில் ஜான் தாமஸ் ஒருவராவார். அவர் நம் நாட்டின் தென்கோடியில் சிறந்த கிறிஸ்தவத் தொண்டாற்றியவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கு வேண்டிய விவரங்களைச் சேகரித்து, புத்தக வடிவாக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட ஒரு ஆங்கிலத் திருச்சபை குரு அப்புத்தகத்திற்குக் கொடுத்த தலைப்பு, ‘ஒரு சிறந்த வாழ்க்கை வரலாறு’ என்பதாகும். உண்மையாக அவர் வாழ்க்கை ஒரு சிறந்த வாழ்க்கையே.
தம்முடைய தாய்நாட்டில் சகல வசதிகளுடன் வாழக்கூடிய வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு, நம் நாட்டைத் தம் சொந்த நாடாகக் கருதி, அதில் கிறிஸ்துவின் ராஜ்யம் பரவுவதற்காக அயராது உழைத்த பக்தன் இவர். திருநெல்வேலி மாவட்டத்தின் கோடியிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் கிறிஸ்தவ மக்கள் வழிபடுவதற்கென்று, அவர் கட்டிய பெரிய அழகிய ஆலயம் நம் நாட்டின் கிறிஸ்தவ மக்களிடம் அவர் காட்டிய அன்பிற்கும் அவருடைய உழைப்பிற்கும் நினைவுச் சின்னமாக அமைந்திருக்கிறது.
பிறப்பும் வளர்ப்பும்
வேல்ஸ்நாடு இங்கிலாந்து தேசத்தின் மேல்பாகத்திலுள்ளது. சிறப்புவாய்ந்த மக்களை ஈன்ற நாடு அது. ஜான் தாமஸ் 1807 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி அந்நாட்டில் டிரிலேக் என்னுமிடத்தில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் மூன்றாவது பிள்ளை. இவருடைய தந்தையின் பெயர் தாமஸ். இவர் ஏராளமான சொத்துக்கள் உடையவர். இவருடைய தாய் பிரான்சஸ், ஜாண் டேவிஸ் என்னும் குருவின் ஒரே மகள். ஜான் டேவிஸ் உயர்ந்த பண்புகள் வாய்ந்த கிறிஸ்துவின் மெய்யடியான். சிறுவராயிருந்த பொழுது ஜாண் தாமஸ் தம்முடைய பாட்டனார். வீட்டில் வளர்ந்தார். ஒன்பது வயதினராயிருக்கும்பொழுது கார்மார்த்தன் என்னுமிடத்திற்குச் சென்றார். அவருடைய பெற்றோர் அப்பொழுது அவ்விடத்தில் வசித்து வந்தனர். 1816 ஆம் ஆண்டு முதல் ஜான் தாமஸ் தம்முடைய பெற்றோருடன் தங்கி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றுவந்தார். இளைஞராயிருந்தபொழுது தண்ணீரில் நீந்தி விளையாடுவது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது.
1826 ஆம் ஆண்டில் தமது பத்தொன்பதாவது வயதில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடவேண்டுமென்ற எண்ணத்துடன் கார்மார்த்தன் என்னுமிடத்திலுள்ள ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்தில் சேர்ந்தார். இப்பணியில் திறமைசாலியாகவும், புத்திக்கூர்மையுள்ளவராகவும் காணப்பட்டார். நார்பாத் என்னுமிடத்தில் ஒரு புது அலுவலகம் திறந்தபொழுது, அவரை அதின் பொறுப்பேற்று நடத்த அங்கு அனுப்புவதற்குத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அத்திட்டம் நிறைவேறவில்லை. உலகமனைத்தையும் தமது சித்தத்துக்குக் கீழ்ப்படுத்தி ஆளுகை செய்யும் பரமபிதா, ஜாண் தாமஸின் பிற்கால வாழ்க்கையைக் குறித்து வேறுவிதமான திட்டம் போட்டிருந்தார்.
1827 ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் லாம்பீல்டில் நடைபெற்ற ஆலய ஆராதனைக்கு ஜான் தாமஸ் தம் நண்பருடன் சென்றிருந்தார். குருவானவர் பயர்ஸ் அன்று கொடுத்த செய்தி ஜாண் தாமசின் மனதைத் தொட்டது. தம்முடைய பாவங்களைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அவைகளை அறிக்கையிட்டு மன்னிப்புக்காக மன்றாடினார். ஆராதனை முடிந்த பின்பு சபை குருவுடைய இல்லத்திற்குச் சென்று குருவானவர் பயர்சுடன் சேர்ந்து ஜெபித்தார். அன்று முதல் பயர்சுடன் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
பயர்ஸ் ஒரு போர்ச்சேவகராக நம் நாட்டில் பன்னிரெண்டு ஆண்டுகள் இருந்தவர். இந்திய மக்களின் பேரில் பற்றுதலுடையவர். இந்தியாவிற்கு ஆங்கில மக்கள் சென்று கிறிஸ்தவ நற்செய்தியை அங்குள்ள மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்று மாதாந்திரக் கூட்டங்களில் அவர் கூறி வந்தார். பர்மாவிற்கும், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சென்று அப்பொழுது தாய்நாடு திரும்பி வந்திருந்த காப்டன் ஃபோர்ப்ஸ் என்பவரும் அதைக் குறித்துக் கூட்டங்களில் வலியுறுத்திப் பேசினார். இக் கூட்டங்களுக்குச் சென்ற ஜான் தாமஸ், அதைக் குறித்து ஜெபித்து நம் நாட்டிற்கு மிஷனெரியாக வருவதென்று முடிவு செய்தார். 1835 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி லண்டன் அத்தியட்சகரால் டீக்கன் பட்டம் பெற்றார். மறு வருடம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி குரு பட்டம் பெற்றார்.
தாய் நாட்டை விட்டு இந்தியாவுக்கு மிஷனெரியாகச் செல்லும் நாள் நெருங்கிற்று. லாம்பி சபை மக்கள் அவருக்கு பிரிவுபசாரம் செய்து வழியனுப்பும் முயற்சிகளில் முனைந்து அவர்கள் அன்பின் அறிகுறியாக அவருக்கு ஒரு வேதாகமம் கொடுத்து வாழ்த்துக் கூறி அவரை அனுப்பினர்.
1836 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட ‘வெலிங்டன்’ என்ற பெயருடைய மரக்கலமொன்றில் ஏறி சுமார் நான்கு மாதங்கள் கடற்பிரயாணம் செய்து அவ்வருடம் கிறிஸ்மஸ் தினத்தன்று தாமஸ் சென்னை வந்தடைந்தார். அங்குச் சில நாட்கள் செலவிட்டு மறுவருடம் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி திருநெல்வேலியை அடைந்தார்.
சுவிசேஷப்பணியின் ஆரம்பம்
திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து சுமார் 18 மைல் தூரத்தில் மெய்ஞானபுரம் என்ற சிற்றூர் உண்டு. முன் நாட்களில் அதற்கு நெடுவளை என்று பெயர். நம் நாட்டிற்கு வந்த நாளிலிருந்து வாழ்நாள் இறுதிவரை தாமஸ் அதனைத் தமது தலைமையிடமாகக் கொண்டார்.. மிஷனெரி ரேனியஸ் ஆரம்பித்த ‘தர்மசகாய நிதி’யைக் கொண்டு கட்டப்பட்ட சிற்றாலயம் ஒன்று அவ்வூரிலிருந்தது. தாழ்வான மண் சுவரின்மேல் கூரை போட்ட காற்றோட்டமில்லாத ஆலயம் அது. 1847 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தாமஸ் அதில் ஆராதனையை நடத்தி, தமிழ்மொழியில் பிரசங்கம் செய்தார்.
இங்கிலாந்தில் பெம்பிரோக் என்னும் இடத்திலுள்ள ஜான் டேவிஸ் என்பவரின் மகள் மேரி டேவிஸ் என்ற பெண்மணியை 1838 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தாமஸ் சென்னையில் திருமணம் செய்தார். ஜாண் தாமஸ் தம் நாட்டைவிட்டு நம் நாட்டிற்கு வருமுன் இவர்களுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சி.எம்.எஸ் செயலாளர் ஜான் டக்கர் சென்னை வேப்பேரி ஆலயத்தில் இத்திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களுடைய இல்வாழ்க்கை இனிதே நடந்தது. அவர்களின் இரண்டு தலைமுறைகள் தங்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கிறிஸ்தவப் பணியில் ஈடுபட்டு ஊழியம் செய்வதைக் காணும் பாக்கியம் பெற்றனர்.
தாமஸ் மெய்ஞானபுரத்தில் திருத்தொண்டாற்ற ஆரம்பித்தபொழுது அப்பணியை வெற்றிகரமாகச் செய்வதற்காக சூழ்நிலை அங்கு இல்லை. புதிதாகக் கிறிஸ்தவர்களான மக்கள் ‘விபூதி சங்கம்’ என்று இந்துக்களால் தோற்றுவிக்கப்பட்டிருந்த சங்கத்தின் அங்கத்தினரால் பல துன்பங்களுக்கு ஆளானார்கள். கிறிஸ்தவ வழிபாட்டிற்கென்று கட்டியிருந்த ஆலயங்கள் தீக்கிரையாயின. கிராமங்களிலுள்ள இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்தி, அவர்களை அதிகாரிகள் முன்பும் நியாயஸ்தலங்களுக்கும் கொண்டுபோயினர். தாமஸ் கிராமங்களிலுள்ள கிறிஸ்தவ மக்களைச் சந்தித்து, அவர்களுடைய மனம் தளராதபடி அவர்களுடன் அன்பாகப் பேசி, அவர்கள் இன்னல்களைப் போக்க முயற்சிகள் செய்தார்.
மிஷனெரி ஊழியத்திற்கென்று திருநெல்வேலி மாவட்டம் ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. தாமஸ் மெய்ஞானப்புரத்தில் தங்கி, ஒரு பிரிவில் பணியாற்றி வந்தார்.அங்கிருந்து சுற்றுப்புறங்களிலிருந்த சுமார் 120 கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் நிலைமையை உயர்த்தவும், சுவிசேஷப்பணி செய்துவந்த உபதேசிமார்களின் ஊழியத்தைப் பயனுள்ளதாக்கவும் முற்பட்டார்.
பல்வேறுபட்ட பணிகள்
1838 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்றாலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு சிறிய ஆலயம் கிறிஸ்தவ வழிபாட்டிற்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வாராதனையில் தாமஸ் பங்கெடுத்து திருவிருந்து பரிமாறிப் பிரசங்கம் செய்தார். 1840 ஆம் ஆண்டு மாவட்ட ஆலயக் கட்டுமான நிதியொன்று நிறுவப்பட்டது. அதன் முதல் ஆண்டு விழாவில் தாமஸ் தலைமை வகித்தார். பல இடங்களிலிருந்து வந்த சுமார் 300 கிராம மக்கள் அதில் கலந்து கொண்டனர். கிராமங்களில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவ மக்கள் இச் சங்கத்தின் காரியங்களில் காட்டிய ஊக்கமும் உற்சாகமும் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.
1843 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் வாந்தி பேதியால் பல மக்கள் மாண்டனர். கிறிஸ்தவர்களிலும் பலர் அதனால் மரித்தனர். இம்மரணங்கள் அவருக்கு மன வருத்தத்தைக் கொடுத்தன. ஆனால் கிறிஸ்தவ நற்பண்புள்ளவர்களாக வாழ்ந்து, கிறிஸ்துவின் பேரில் விசுவாசமுள்ளவர்களாக இவ்வுலக வாழ்வை விட்டு அவர்கள் சென்றது. புறமதஸ்தர்களுக்கு ஒரு நற்சாட்சியாக இருந்ததையறிந்து அவர் மனம் சமாதானம் அடைந்தது.
1845 ஆம் ஆண்டு குற்றாலத்திலிருந்தபொழுது தாமஸ் தம்பதிகளின் குழந்தையொன்று வாந்தி பேதியினால் மரித்தது. அவர்களுடைய மற்றொரு குழந்தைக்கும் இந்நோய் தொற்றிற்று. கடவுளின் அருளாலும் இரக்கத்தினாலும் அக்குழந்தை உயிர் தப்பிற்று. கிறிஸ்துவின் பேரில் விசுவாசம் உள்ளவர்களாயும், அவருடைய வழி நடத்தலில் நம்பிக்கையுள்ளவர்களாயும், வாழ்ந்த தாமசும், அவருடைய வாழ்க்கைத் துணைவியும், ஆறுதலடைந்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.
மிஷனெரி தாமஸ் எல்லாக் காரியங்களையும் உடனடியாக முடிவு செய்யும் ஆற்றலுள்ளவர். அத்துடன் அவர் ஒரு செயல் வீரர். 1845 ஆம் ஆண்டு அடித்த புயல் காற்றினால் மெய்ஞான புரத்திலுள்ள வீடுகள் அழிந்து தரைமட்டமாயின. புயலுக்குப்பின் அங்குசென்று, அக்காட்சியைக் கண்ட தாமஸ், உடனடியாக விழுந்துபோய் சிதறிக்கிடந்த வீடுகளின் கூரைகளையும், இடிந்த சுவர்களின் மண்ணையும் அப்புறப்படுத்தி அவ்வூரைத் திருத்தியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். தெருக்களை நேராக அமைத்து இருபக்கங்களிலும் ஒழுங்காக வீடுகளைக் கட்ட திட்டம் வகுத்து, வரிசையாக தெருக்களில் தென்னங்கன்றுகளை நட்டார்.
பெண்களுக்கு உரிய இடம் அளிக்காவிட்டால் நாடு முன்னேற இயலாது என்ற கருத்துக் கொண்டவர் தாமஸ். அவர்களுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் மெய்ஞானபுரத்தில் பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடம் கட்ட முற்பட்டார். இங்கிலாந்தில் எலியட் என்ற பெயருடைய ஒரு சபை குருவும், நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியிலுள்ள டக்ஸ்ஃபோர்டு கிராம மக்களும் அம்முயற்சிக்குப் பொருளுதவி செய்தனர். எனவே அவர்கள் பெயராலேயே எலியட் டக்ஸ்ஃபோர்டு பள்ளிக்கூடம் என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது.
ஆண் பிள்ளைகளுக்கென்று ஒரு பள்ளிக்கூடமும் விடுதியும் தாமஸ் கட்டினார். அவர்களுக்குக் கிறிஸ்தவ நன்னெறியில் பயிற்சி கொடுத்து, திருமறை, ஆங்கில இலக்கணம், தமிழ், கணிதம், சரித்திரம் முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தார். அவருடைய மகனும் சிறுவர்களுக்குப் பாடம் கற்பித்து வந்தார். 1868 ஆம் ஆண்டு முதன் முதலாக அப்பள்ளியிலிருந்து ஆறு மாணவர்களைப் பாளையங்கோட்டைக்கு மேற்படிப்புக்காக அனுப்பினர். இவர்கள் கல்வியில் முன்னேற்றமடைந்து, கிறிஸ்துவின் மெய்யடியார்களாகத் திகழ்ந்து, சுவிசேஷத்தை அறிவிக்க அவர்கள் முன்வரவேண்டுமென்பது அவருடைய வாஞ்சையாகும்.
ஆலயம் கட்டும் பணி
மெய்ஞானபுரத்தில் அப்பொழுதிருந்த ஆலயம் மிகச் சிறியது. ஆராதனைக்கு வரும் சபை மக்கள் எல்லாரும் அமர்ந்து, கடவுளை ஆராதிக்க அதனுள் போதிய இடமில்லை. நம் நாட்டிற்கு வந்த 2 அல்லது 3 வருடங்களில் பெரிய அளவில், சிறந்த முறையில், அவ்வூரில் ஒரு ஆலயம் கட்டிடவேண்டுமென்ற எண்ணம் தாமஸ் மனதில் உண்டாயிற்று. கட்டட வல்லுனர் ஜே.என். டெரிக் என்பவரை அதற்கு வேண்டிய வரை படங்களைத் தயாரித்து, திட்டங்களை வகுக்கும்படி அவர் கேட்டார். அவர் 1841 ஆம் ஆண்டு தயாரித்த முதல் திட்டத்தைக் காட்டிலும் பெரிய அளவில் மற்றொரு திட்டத்தை அமைத்தார்.
அத்திட்டத்தின்படி 1844 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி ஜே. டக்கர் ஐயர், ஆலயத்தின் அஸ்திபாரக்கல்லை, நாட்டினார். தாமசுடன் சேர்ந்து இப்பணியில் ஊக்கம் காட்டி உழைத்த பக்தன் இவர். 1841 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவ்வாலயம் கட்டுவதற்குப் பொருளுதவி தேவை என்றும் அதற்கு கிறிஸ்தவ மக்கள் உதவி செய்யவேண்டுமென்றும் இவர் ஒரு சுற்றறிக்கை விடுத்திருந்தார். பொருளுதவி வந்து கொண்டிருந்தது. கட்டிடத்திற்காகச் செலவிட்ட தொகையையும், அது வளர்ந்து வந்ததைக் குறித்தும் தாமஸ் அறிக்கைகள் விடுத்து வந்தார். இங்கிலாந்திலுள்ள ஆலயங்களில் காணப்பட்ட கோதிக் முறையில் இவ்வாலயம் கட்டப்பட்டது. 1847 ஆம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, அவ்வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி அது தாமஸ் ஐயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தாய்நாடு சென்று திரும்புதல்
நம் நாட்டில் திருப்பணி செய்த 33 வருடங்களில் இரு முறை தாமஸ் தம் தாய் நாட்டிற்குச் சென்று திரும்பினார். அயராது கிராமங்களில் சுற்றுப் பிரயாணம் செய்து உழைத்ததின் காரணமாக அவருடைய உடல் நலம் கெட்டது. எனவே 1848 ஆம் ஆண்டு தம்முடைய குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்றார். அவருடைய நண்பர், சபை குரு பயர்ஸ் பணியாற்றின இடத்தில் சிலகாலம் ஓய்வெடுத்து, அதன் பின்பு சி.எம்.எஸ் இன் பிரதிநிதியாக இங்கிலாந்து வேல்ஸ் பிரதேசங்களில் சுற்றுப் பிரயாணம் செய்தார். இந்தியாவுக்கு திரும்பாமல் இங்கிலாந்திலேயே பாதிரியாராக ஊழியம் செய்யும்படி நண்பரில் சிலர் அவரை வற்புறுத்தினர். அவர் அதற்கு இணங்கவில்லை. சுமார் இரண்டு வருடங்கள் தம் தாய் நாட்டில் செலவிட்டார். திரும்பி தம் தாய் நாட்டிற்கு அவர் வந்த பொழுது மெய்ஞானபுரத்திலுள்ள மக்கள், தங்களோடு தங்கி உழைக்கும்படி, அவர் திரும்பி வந்தது தங்கள் கிராமம் பெற்ற பாக்கியம் என்று கருதி அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
1851 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அத்தியட்சகருடன் அவர் கடாட்சபுரம். கிறிஸ்தியநகரம், பிரகாசபுரம் முதலிய கிராமங்களுக்குச் சென்றார். அத்தியட்சகர் சென்னைக்குத் திரும்பிய பின் தாமஸ் தம்முடைய சுற்றுப் பிரயாணத்தை ஆரம்பித்து காயாமொழி, சமாதானபுரம், ஆறுமுகனேரி, நாலுமாவடி முதலான கிராமங்களுக்குச் சென்று, பணி செய்து திரும்பினார். பல வருடங்கள் அவரும் உபதேசிமாரும் இக்கிராமங்களில் கிறிஸ்தவ நற்செய்தியை எடுத்துரைத்ததற்கு பலன் கிடைத்தது. சுப்பிரமணியபுரம், இராசாமணிபுரம், பூவரசூர் என்ற கிராமங்களில் மக்கள் விக்கிரகவணக்கத்தைவிட்டு மனம் மாறி கிறிஸ்தவர்களானார்கள். ஆலயங்களும், பள்ளிக்கூடங்களும் இவ்விடங்களில் காணப்பட்டன. இங்கிலாந்தில் கென்ட் பகுதியிலுள்ள செளத்பரோ என்னுமிடத்திலுள்ள மக்கள் பூவரசூர் பள்ளிக்கூட ஆசிரியர், ஆசிரியைகள் சம்பளத்தைக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அப்பள்ளிக்கூடம் சிறந்த முறையில் இயங்கிவந்தது.
மதிப்பிற்குரிய மிஷனெரி
தினசரி நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தம்முடைய குறிப்பு புத்தகத்தில் தாமஸ் எழுதி வைத்தார். அவர் செய்த பணியின் விவரங்கள் அனைத்தையும் அதிலிருந்து எடுத்து எழுதினால், அது விரிந்து கொண்டே போகும். அவைகளில் மெய்ஞானபுரத்திலிருந்து சுமார் 3 மைல்கள் தூரத்திலுள்ள வெள்ளாளன்விளையில் நேரிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்து எழுதுவது பயன்தரும். பலவருடங்கள் தாமஸ் அக்கிராமத்திற்குச் சென்று கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வந்தார். ஆனால் பலன் யாதொன்றும் கிடைக்கவில்லை. ஒருநாள் வழக்கப்படி பிரசங்கம் செய்துவிட்டு அங்கிருந்த ஆலமரத்தடியில் முழங்காலில் நின்று “ஆண்டவரே இம்மக்களின் இருதயத்தைத் திறந்தருளும்”, என்று ஊக்கமாய் ஜெபித்தார். பின்பு எழுந்து நின்று, ஒரு தீர்க்கதரிசன மொழிபோல் விக்கிரகங்களை வணங்கும் மக்கள் ஒருவரும் இல்லாமல், இவ்விடத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்படும் நாள் சீக்கிரமாய் வருகிறதென்று கூறினார். இவ்வாக்கும் நிறைவேறிற்று. கிறிஸ்தவ ஆலயம் ஒன்று அங்கு கட்டப்பட்டது.
அவர் விரும்பியபடி மெய்ஞானபுரத்தில் ஒரு சிறந்த ஆலயம் கட்டி முடிந்தது ஒரு முக்கிய சாதனையாகும். அவருடைய மற்றொரு நோக்கம், தமிழ் மக்கள் சபை குருக்களாகவும், சுவிசேஷப் பணி ஆற்றுகிறவர்களாகவும் திகழ வேண்டுமென்பதாகும். அவர் தெரிந்தெடுத்து பயிற்சி கொடுத்த பல உபதேசிமார்கள் வேத அறிவுடையவர்களாகவும், சகல கிறிஸ்தவ நற்குணங்களும் பொருந்தியவர்களாகவும் விளங்கினர். 1869 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதியன்று பாளையங்கோட்டையில் அவர்களில் 12 பேர் பிஷப்ஜெல் அவர்களால் குருவானவர்களாக அபிஷேகம் செய்யப்பட்டனர். தாமசுக்கு இந்நிகழ்ச்சி மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்தது.
அயராது உழைத்த ஜான் தாமஸ் 1870 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நோய்வாய்ப்பட்டார். அதைக் குறித்து மிஷனெரி சார்ஜெண்ட் (பிற்காலத்தில் அத்தியட்சகராக பணியாற்றினவர்) கேள்விப்பட்டு மெய்ஞானபுரத்திற்குச் சென்றார். அவரும் தாமசின் மனைவியும், பிள்ளைகளும் அவரைச் சூழ்ந்து நிற்கும்பொழுது, தமக்குக் கடவுள் கொடுத்திருந்த பணியைச் சிறப்புறச் செய்து முடிக்க அவர் கிருபை கொடுத்ததற்காக நன்றி செலுத்தி, மார்ச் மாதம் 28 ஆம் தேதி மறுமைக்குள் பிரவேசித்தார் ஜான் தாமஸ்.
மெய்ஞானபுரத்தின் முன்னேற்றத்திற்கு அடிகோலியவர் தாமஸ் என்று கூறுவது மிகையாகாது. அதைச் சுற்றி இருந்த கிராமங்களிலுள்ள மக்கள் கிறிஸ்துவை அறியவும், அவர்களில் பலர் கிறிஸ்தவ சபையில் சேரவும் காரணமாயிருந்தவரும் அவரே அவருடைய மகன் ஜான் டேவிஸ் தாமஸ் அதற்கு பின் மூன்று வருடங்கள் அங்கு பணியாற்றினார். ஜான் தாமசின் மனைவி சிறந்த துணைவியாகத் தாமசுடன் 32 வருடங்கள் வாழ்ந்தார்கள். அவர் மரித்த பின் 29 வருடங்கள் மெய்ஞானபுரத்தில் பெண்களிடையே சிறந்த பணியாற்றி, 1899 ஆம் வருடம் தமது 88 ஆம் வயதில் நமதாண்டவரின் அழைப்பைப் பெற்று அவர் திருவடியைச் சேர்ந்தார்கள்.
பிறப்பு: கி.பி. 1807, நவம்பர் 10, (வேல்ஸ்நாடு, இங்கிலாந்து)
இறப்பு: கி.பி. 1899
Comments (0)