பதினெட்டாம் நூற்றாண்டில் கிறிஸ்துவின்பேரில் மிகப்பற்றுதலுடன் வாழ்ந்த கவிஞர்கள் இங்கிலாந்தில் அநேகரிருந்தார். ஜான் நியூட்டனும் அவர்களில் ஒருவராவர். “நல் மீட்பர் இயேசு நாமமே” என்று ஆரம்பிக்கும் பாடல் இவரால் எழுதிய எல்லாப் பாடல்களைப்போலவே பக்தியையும், எழுச்சியையும் கொடுத்தது. இதைத் திரும்பத் திரும்பப் பாடி இன்புற்று, அதன் மூலமாய்க் கிறிஸ்துவை நெருங்கிச் சேர்ந்து வாழ்ந்த கிறிஸ்தவப் பக்தர்கள் அநேகருண்டு.
ஜான் நியூட்டன் 1725 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி லண்டன் மாநகரத்தில் பிறந்தார். கிறிஸ்தவ சபைச் சரித்திரத்தில் பக்தியுள்ள தாய்மார் மூலமாய்க் கிறிஸ்துவினிடம் வழிநடத்தப்பட்ட பக்தர்கள் அநேகரைப்பற்றி வாசிக்கின்றோம். ஜான் நியூட்டன் சிறந்த கிறிஸ்தவ அடியானாக திகழ்ந்ததின் இரகசியம் அவருடையத் தாயின் ஜெபமேயாகும். நியூட்டன் ஏழு வயது நிரம்பியவராயிருக்கும்பொழுது அந்த அம்மாள் இவ்வுலக வாழ்வை நீத்தபோதிலும், அவர் சிறுபிராயமுதலே ஜெபத்தில் வாஞ்சையுள்ளவராகவும், வேத வாசிப்பில் கருத்துள்ளவராகவும் வளர வேண்டுமென்று முயற்சித்தார்கள். அதற்காக நாள்தோறும் கடவுளை மன்றாடினார்கள்.
ஜான் நியூட்டனுடைய தந்தை கப்பற்படையில் கேப்டன் பதவியை வகித்து வந்தார். தமது பத்தாம் வயதிலேயே நியூட்டன் கப்பலொன்றில் கடைநிலைப் பணியாளாகச் சேர்ந்தார். பின்பு நடுநிலைக் கப்பலோட்டிப் பதவிக்கு உயர்த்தப்பட்டார். ஆனால் அக்கப்பலில் அதிக காலம் அவர் பணியாற்றவில்லை. கீழ்ப்படியாமைக்காக அவ்வேலையிலிருந்து நீக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு வேறொரு கப்பலில் வேலை கிடைத்தது. மேற்கு ஆப்பிரிக்க அடிமைகளை வியாபாரம் செய்தவரொருவர் தம்முடைய கப்பலில் வேலை பார்க்கும்படி அவரை அழைத்தார். அதற்கு அவர் சம்மதித்து, அடிமைகளை விலைக்கி வாங்கி, அவர்களை அயல்நாடுகளுக்குக் கொண்டுபோகும் கப்பலொன்றில் சில வருடங்கள் பணியாற்றினார். அக்காலத்தில் அவருடைய வாழ்க்கை தீய வழிகளில் சென்று கெட்டுப் போயிற்று. அப்பொழுது அவருடைய வயது 23.
ஓரிரவு, அவர் வேலை செய்து வந்த கப்பல் புயல் காற்றில் அகப்பட்டு முழுகிப்போகும் நிலைமையிலிருந்தது. உயிர் பிழைப்போமென்ற நம்பிக்கை கப்பலிலுள்ளவர்களுக்கு அற்றுப்போயிற்று. அப்பொழுது ஜான் நியூட்டன் முழங்காலில் நின்று, “ஆண்டவரே எங்களுக்கு இரங்கும்” என்று ஜெபித்தார். சேதமின்றி கப்பல் கரை சேர்ந்தது. அதற்கு பின் நியூட்டன் கடவுளின் வல்லமையையும், அன்பையும் குறித்து சிந்திக்கலானார். அவருடைய தாய் பக்தி நெறியில் வளர்த்ததையும், தமக்காக அவர்கள் கடவுளிடம் மன்றாடி ஜெபித்ததையும் தம்முடைய நினைவில் கொண்டு வந்தார். இவை அவருடைய உள்ளத்தை அசைத்தன. தம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, ஆண்டவரிடம் மன்னிப்பைப் பெற்று அதுமுதல் வெற்றி வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்.
1750 ஆம் ஆண்டு கப்பலில் செய்து வந்த பணியை விட்டுவிலகி மேரி கட்லெட் என்ற பெண்மணியை மணம் செய்து கொண்டு லிவர்பூல் நகரத்தில் இல்லற வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். ஜான் வெஸ்லி, ஜார்ஜ் ஒயிட்பீல்டு, வில்லியம் கூப்பர் என்பவர்களுடைய நட்பும் அவருக்குக் கிடைத்தது.
லிவர்பூலிலிருக்கும்பொழுது, கிரேக்கு, லத்தீன், எபிரெயு மொழிகளையும் கற்று, வேத சாஸ்திரம் படித்து, 1764 ஆம் ஆண்டு குருபட்டம் பெற்றார். தமது முப்பத்தொன்பதாவது வயதில் அவர் பெக்கன்ஹாம்ஷையரிலுள்ள ஓல்னியில் சபை குருவாக நியமிக்கப்பட்டார். அங்கு பதினாறு வருடங்கள் அச்சபையோரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றார். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சபையின் மக்களுக்கென்று விசேஷித்த கூட்டங்கள் நடத்தி வந்தார். அக்கூட்டங்களில் பிரசங்கம் செய்து மக்கள் தூய வாழ்க்கையைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்கு ஊக்கமூட்டி வந்தார். அவர் ஒரு சிறந்த பக்தனாயிருப்பதுடன் ஒரு கவிஞராயுமிருந்தமையால், அந்நாட்களில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் ஒவ்வொரு ஞானப்பாட்டை எழுதி அவர்களுக்கு வாசித்துக் காண்பிப்பார். அக்கூட்டங்களுக்கென்று வில்லியம் கூப்பர் ஞானப்பாட்டுகள் எழுதுவார். இவ்விருவரும் இவ்வாறு எழுதி வந்த பாடல்கள் ‘ஞானப்பாட்டுகள் மட்டும்’ என்று வெளியிடப்பட்டன. அப்பாடல் புத்தகத்தில் நியூட்டன் எழுதிய பாடல்கள் 281 ஆம், வில்லியம் கூப்பர் எழுதிய பாடல்கள் 67 ஆம் அடங்கியிருந்தன. நியூட்டன் எழுதி, அப்புத்தகத்தில் வெளியான பாடல்களில், ‘நல் மீட்பர் இயேசு நாமமே’ என்று ஆரம்பிக்கும் பாடலும் ஒன்றாகும்.
1776 ஆம் ஆண்டு லண்டன் மாநகரத்திலுள்ள இங்கிலாந்து பாங்க் அருகிலுள்ள பரி. மரியாளின் ஆலய சபை குருவாக அவர் நியமிக்கப்பட்டார். அங்கு 27 வருடங்கள் பணியாற்றி புகழ் பெற்றார். அவர் பிரசங்கங்களைக் கேட்க மக்கள் திரண்டு வந்தார்கள். வயது முதிர்ந்த காலத்தில் கண்பார்வையை அநேகமாக இழந்த பின்பும், இப்பக்தன் ஆண்டவரின் செய்தியை மக்களுக்குத் தாமே கொடுக்க வேண்டுமென்று விரும்புவார். ஒரு ஞாயிற்றுக்கிழமை பிரசங்க பீடத்தின் மேல் நின்று ‘இயேசு கிறிஸ்து அருமையானவர்’ என்று இரு முறை கூறினார். மூன்றாம் முறையாக அதையே சொல்ல முயன்றபோது அவருடைய உதவியாளர் அவரை அணுகி “இதை இருமுறை சொல்லிவிட்டேன். ஆனால், மூன்றாம் முறையாகவும் கூற விரும்புகிறேன்” என்று பதிலளித்து, உரத்த சத்தமாய், “இயேசு கிறிஸ்து அருமையானவர்” என்று சபை மக்களிடம் கூறினார்.
1807 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தமது எண்பத்திரெண்டாம் வயதில் அவர் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அவர் மரிப்பதற்கு சற்று முன்பு வில்லியம் ஜே என்ற அவருடைய நண்பரொருவர் அவரைப்பார்க்க விரும்பி, அவர் படுக்கையருகில் சென்றார். அவரைப் பார்த்து நியூட்டன் கூறியதாவது; “என் ஞாபக சக்தியை அநேகமாக இழந்து விட்டேன். ஆனால், இரண்டு காரியங்கள் எனக்கு ஞாபகமிருக்கின்றன. ஒன்று நான் பாவி, இரண்டாவது கிறிஸ்து என் இரட்சகர்”.
பிறப்பு: கி.பி. 1725, ஜூலை 24, (லண்டன்)
இறப்பு: கி.பி. 1807, டிசம்பர் 31, (லண்டன், இங்கிலாந்து)
Comments (0)