Today Bible Verse

John Henry Newman History in Tamil

      பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஞானப்பாட்டுகளில் இது சிறந்ததொன்றாகும். இது இஸ்ரவேல் மக்களைக் கடவுள் இரவில் தீபஸ்தம்பத்தைக் கொண்டு வழி நடத்தினதைத் தம் மனதில் கொண்டு, இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில் ஒரு நேச தீபமாகத் தம்மை வழி நடத்தும்படி ஒரு பக்தன் கடவுளை வேண்டிக் கொண்ட பிரார்த்தனை பாடலாகும். “உன்னதம் ஆழம் எங்கேயும்” என்று ஆரம்பிக்கும் பாடலும் இவரால் இயற்றப்பட்டதேயாகும்.

    இப்பாடலை எழுதிய நியூமன் என்ற பக்தன், அந்நூற்றாண்டில் வாழ்ந்த பேரறிஞரில் ஒருவர். இவர் தம்முடைய சிறந்த கிறிஸ்தவப்பண்பினாலும், சிந்தனையினாலும், அவர் ஆற்றிய சொற்பொழிவுகளினாலும், கட்டுரைகளினாலும், தம்முடைய அறிவையும், ஆற்றலையும் கொண்டு ஒரு புது கிறிஸ்தவ யுகத்தைத் தோற்றுவித்தார் என்று இவரைக் குறித்து பெரியார் ஒருவர் எழுதியுள்ளார். கிறிஸ்தவ சமயச் சத்தியங்களை ஆழ ஆராய்ந்து, ஒரு இலட்சியக் கிறிஸ்தவப் பக்தனாகத் தூய வாழ்க்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்த பக்தன் நியூமன்.

      இவர் லண்டன் மாநகரத்தில் 1801 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி பிறந்தார். ஜாண் ஹென்றி நியூமன் என்பது இவருடைய முழுப் பெயராகும். இவருடைய தந்தையின் பெயர் ஜாண் நியூமன். ஜெமிமா போர்டினியர் என்பது இவருடைய தாயின் பெயர். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவர் ஹென்றி நியூமன். சிறுவராயிருக்கும் பொழுதே நியூமன் புத்திக் கூர்மையுள்ளவராகக் காணப்பட்டார். வேதம் வாசிப்பதில் ஊக்கம் காட்டி வந்தார். ஆனால் இளமையிலிருந்தே ஒரு கனவில் வாழ்வது போன்றும், இவ்வுலக வாழ்வு அநித்தியம் என்று கருதி தன் வாழ்க்கையை நடத்தி வந்தார் என்றும் இவரைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றது.

    இவர் 1808 ஆம் வருடம் மே மாதம் முதல்தேதி ஈலிங்கிலுள்ள பள்ளிக்கூடமொன்றில் சேர்ந்தார். சுமார் இரண்டு வருடங்களில் ஆங்கில மொழியில் கவிதை இயற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் வியக்கதக்க முன்னேற்றமடைந்தார். பதினைந்து வயது நிரம்பியவரானபொழுது, 1816 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு கலாசாலையில் சேர்ந்து, இலத்தீன் மொழியிலும், கணிதத்திலும் முதல் வகுப்பில் தேறினார். கலாசாலையின் முதல் மாணவன் என்பதற்கு அறிகுறியாக அளிக்கப்பட்ட நீல நாடாவையும் பெற்றார்.

    ஆக்ஸ்ஃபோர்டில் ஓரியல் கலாசாலையில் பயிற்சி பெற்று வரும்பொழுது (1823), பேரறிஞரான டாக்டர் ஃபுசி கவிஞர் ஜான் கிபிள் என்ற பக்தர்களுடைய நட்பு அவருக்கு கிடைத்தது. அவர் இந்நாட்டைப் பெரிதாகக் கருதினார். பட்டம் பெற்று, அதே கலாசாலையில் இரண்டு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் 1828 ஆம் ஆண்டு பரி. மரியாளின் ஆலயச் சபையின் குருவாக நியமிக்கப்பட்டார். அங்குப் பணி செய்யும்பொழுது பேரறிஞரும், சிறந்த கிறிஸ்தவப் பக்தனுமான ஹால் ஃபோர்டு அவருக்கு நண்பரானார். கிறிஸ்துவின் பேரில் விசுவாசமில்லாமல் உயிரற்ற வாழ்க்கையை வருந்தினார். கிறிஸ்தவச் சபைகள் புத்துயிர் பெற்று வளர ஆவன செய்ய வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். அதற்குத் தமக்கு வழி காட்டி, நடத்த வேண்டுமென்று அவர் கடவுளிடம் மன்றாடி ஊக்கமாய் ஜெபித்து வந்தார்.

    1832 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமக்கு உடல்நலம் குறைந்து வருவதைக் கண்டு ஹால் ஃபோர்டு, தம்முடைய தந்தையுடன் இத்தாலியா நாட்டிற்குப் புறப்பட்டார். தங்களுடன் அந்நாட்டிற்கு வரும்படி அவர் நியூமனை அழைத்தார். அதற்கிணங்கி ஹால் ஃபோர்டுடன் அவர் புறப்பட்டு மத்திய தரைக் கடலைச் சுற்றியுள்ள பல இடங்களுக்குச் சென்று, அவர்களுடன் ரோமாபுரியை அடைந்தார். அங்கு சில நாள்கள் செலவிட்டபின்னர் அவர்களை விட்டுப் பிரிந்து 1833 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் தனிமையாய் நியூமன், சிசிரி தீவிற்குச் சென்று, அங்கு நோய்வாய்ப்பட்டார். அதனால் தம் தாய் நாடு செல்வது தாமதப் பட்டதை நினைத்து வருந்தி, உடல்நலம் தேறியவுடன் கப்பலேறி மார்சேயில்ஸூக்குச் சென்று அங்கிருந்து இங்கிலாந்து செல்ல முயற்சித்தார்.

    மார்சேயில்ஸ் செல்லும் கப்பல் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, பலர்மோ என்னுமிடத்தில் அவர் மூன்று வாரங்கள் தங்க நேரிட்டது. ஆரஞ்சு பழங்களேற்றிச் செல்லும் கப்பலொன்று மார்சேயில்ஸூக்குப் போவதாக அறிந்து அதில் ஏறினார். பானிஃபேசியோ நீர்ச்சந்தியில் அக்கப்பல் ஒருவாரம் தங்க நேரிட்டது. இங்கிலாந்திற்குச் சென்று தம்முடைய நெருங்கிய நண்பர்களைப் பார்க்க வேண்டுமென்றும். அங்குள்ள கிறிஸ்தவ மக்களைத் தட்டி எழுப்பி, அவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கும் பனியில் ஈடுபட வேண்டுமென்றும் அவருடைய உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் தாம் செய்ய வேண்டிய பயணம் தாமதப்பட்டிருக்கக் கண்டு அவர் தவித்தார். ஒரு இருள் சூழ்ந்த நிலைமையில் தாம் இருப்பதாகக் கருதி, தமக்கு வழி காட்ட வேண்டுமென்று, நமதாண்டவரை நோக்கி ஜெபித்தார். அப்பொழுது “காரிருளில் என் நேச தீபமே” என்று ஆரம்பிக்கும் பாடல் அவருடைய மனதில் உருவாயிற்று. இதோடு மற்றும் இரண்டு பாடல்களையும் அன்று கப்பலிலிருக்கும்பொழுது எழுதி முடித்தார்.

   1833 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்திற்குத் திரும்பினார். தம்முடைய நாட்டை அடைந்தவுடன், அவர் வெளிநாடுகளுக்குப் புறப்படுமுன் நிறுவப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு இயக்கத்தை நிலைவரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆங்கிலத் திருச்சபையையும் ரோமத் திருச்சபையையும் ஒன்றாக இணைக்க வேண்டுமென்ற எண்ணம் அவருடைய மனதில் உருவாகி, நாளடைவில் அவருடைய உள்ளத்தைப் பற்றிக் கொண்டது. ஆனால் அது இயலாத காரியமென்பதை உணர்ந்தார். நாட்கள் செல்லச்செல்ல தாம் ரோம சபையில் சேர வேண்டுமென்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வேரூன்ற ஆரம்பித்தது. நண்பர்களுடன் கலந்தாலோசித்து, ஜெபத்தில் அநேக நாட்களை அதற்காகச் செலவிட்டு ரோமச் சபையில் சேர்வதென்ற முடிவுக்கு வந்தார். 1845 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி தம்முடைய நண்பர்கள் நால்வருடன் ரோமச் சபையைச் தழுவினார்.

     ரோமச்சபையைச் சேர்ந்து 34 ஆண்டுகளுக்குப் பின், 1879 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இவர் கார்டினலாக நியமிக்கப்பட்டார். அச்சபையில் பல சேவைகளில் ஈடுபட்டு, 1890 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதினோராம் தேதியன்று பர்மிங்ஹாம் நகரில், தமது 90 ஆம் வயதில் இப்பக்தன் உலக வாழ்வை நீத்தார்.

   அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள சிகாகோ என்னும் நகரில் அகில உலக சமய மகாநாடொன்று கூடிற்று. அது ஆரம்பிப்பதற்கு முன் கடவுளின் வழி நடத்துதலுக்காகக் கூடியிருந்த அனைவரும் சேர்ந்து பாடக் கூடிய பாடல் எது என்று அவர்கள் ஆராய்ந்தபொழுது இப்பாடலையே தெரிந்தெடுத்து அவர்கள் பாடியதாகக் கூறப்பட்டிருக்கின்றது.

பிறப்பு: கி.பி. 1801, பிப்ரவரி 21, (லண்டன்)

இறப்பு: கி.பி. 1891, ஆகஸ்டு 11, (பர்மிங்ஹாம், இங்கிலாந்து)

Posted in Missionary Biography on November 30 at 05:29 AM

Comments (0)

No login
gif