ஒவ்வொரு கிறிஸ்தவனையும், எல்லா நிலைமைகளிலும் கடவுள் வழி நடத்துகிறார். நாம் என்ன காரியத்தைச் செய்தாலும், எங்கு சென்றாலும், அவரே முன்சென்று நம்மை நடத்துகிறார். சில சந்தர்ப்பங்களில் கடவுளின் நடத்துதலைக் கண்டுகொள்ளுதல் கஷ்டமாயிருக்கிறது. நாம் செல்லும்பாதை எப்போதும் சுலபமாயிராது. சிலவேளை கார்மேகம் மூடினதாகவும், முட்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. யோபுவுக்கு நேர்ந்த எல்லாத் துன்பங்களிலும் கடவுளின் நடத்துதலை அவன் உணர்ந்தான். தாவீதரசன் தமது வாழ்க்கையில் எவ்வளவோ இன்னல்களை அனுபவித்தாலும், கடவுளால் பத்திரமாக வழிநடத்தப்பட்டு, அவர் நடத்துதலைக்குறித்து 23 ஆம் சங்கீதத்தை எழுதினார்.
தானியேலைக் கடவுள் சிங்கக்கெபியில் பத்திரமாகக் காப்பாற்றினார். “பரதேசியின் மோட்ச பிரயாணம்” என்னும் சிறந்த நூலை எழுதிய ஜான் பனியன் என்பவரை அநேக ஆண்டுகள் சிறைவாசகத்தில் நடத்தினார். டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் மருத்துவ மிஷனெரியைத் துஷ்ட மிருகங்கள் நிறைந்த ஆப்பிரிக்கக் காடுகளில் பத்திரமாக நடத்தினார். நாம் செல்லும் பாதை எவ்வளவு கடினமாயிருப்பினும், கடவுள் நம்மைப் பத்திரமாக வழிநடத்தி, இறுதியில் பரம கானானில் சேர்க்கிறார்.
1862 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருக்கையில், பிலடெல்பியா நகரிலுள்ள ஒரு பாப்டிஸ்டு ஆலயத்தில், இருபத்தெட்டு வயதுள்ள ஜோசப் ஹென்றி கில்மோர் என்னும் குருவானவர் திருப்பணியாற்றி வந்தார். யுத்தத்தினால் மனக்கலக்கம் அடைந்திருந்த மக்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் உண்டாக்குவதற்காகவும், கடவுளின் நடத்துதலை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், போதகர் 23 ஆம் சங்கீதத்தைத் தெரிந்தெடுத்து, அதில் பிரசங்கம் செய்கையில், ‘அவர் என்னை நடத்துகிறார்’ என்பதை அடிக்கடி சொல்ல நேர்ந்தது.
ஆராதனைக்குப்பின் சபை ஊழியர் ஒருவரது வீட்டில் அவர் உட்கார்ந்திருக்கையில் அவர் பிரசங்கம் செய்த, ‘அவர் என்னை நடத்துகிறார்’ என்னும் வார்த்தைகளை ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார். திடீரென அங்கே கிடந்த ஒரு காகிதத்தை எடுத்து, அதில் ‘He leadeth me, O blessed thought’ என ஆரம்பித்துச் சில கவிகளை எழுதத் தொடங்கினார். முடிவில் நாம் பாடும் இப்பாடலின் நான்கு கவிகளையும் எழுதினார். இக்காகிதத்தைச் சட்டைப் பையில் வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று அதை மறந்துவிட்டார். சில தினங்களுக்குப்பின் அவர் மனைவி அதைக் கண்டெடுத்து, சிறந்த கவித்தொடராகத் தோன்றியதால், அதின் பிரதி ஒன்றை எழுதி, பாஸ்டன் நகரில் வெளியாகும் ஒரு கிறிஸ்தவப் பத்திரிகைக்கு அனுப்பினார்கள். இதைக்கண்ட வில்லியம் பிராட்பரி என்னும் சங்கீத நிபுணர் அதற்கேற்ற ஓர் இராகத்தை அமைத்தார்.
இப்பாடலை எழுதிய ஜோசப் ஹென்றி கில்மோர் என்பவர் 1834 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 29 ஆம் தேதி அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் பிறந்தார். அவரது தந்தை நியூஹாம்ஷயர் மாகாணத்தின் கவர்னராயிருந்தார். அவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் திறமையுடன் பயின்று, 1858 இல் பி.ஏ பட்டம் பெற்றார். பின்னர், நியூட்டன் இறையியல் கல்லூரியில் பயின்று 1861 இல் இறையியல் பட்டமும் பெற்று, மறு ஆண்டில் பிஷர்வில் பாப்டிஸ்டு சபையின் குருவாக அபிஷேகம் பெற்றார். சில ஆண்டுகள் பணியாற்றியபின், அவர் நியுஹாம்ஷயர் மாகாணத்தின் கவர்னராயிருந்த தனது தந்தையாரின் செயலாளராக வேலைபார்த்தார். இதற்குப்பின் சில காலம் போதகராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி இறுதியில் 1868 ஆம் ஆண்டு முதல், ராக்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்திலும், தத்துவ சாஸ்திரத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்து, 1911 இல் ஓய்வு பெற்றார்.
கில்மோர் போதகர் 1918 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 23 ஆம் தேதி, தமது 84 ஆம் வயதில் ராக்செஸ்டர் நகரில் மரித்தார்.
பிறப்பு: கி.பி. 1834,
இறப்பு: கி.பி. 1918, ஜூலை 23, (ராக்செஸ்டர்)
Comments (0)