‘என்னோடிருக்கும், மா நேச கர்த்தரே’ என்று ஆரம்பிக்கும் ஞானப்பாட்டு, கிறிஸ்தவ மக்கள், ஆலயங்களில் மாலை ஆராதனைகளில் பாடும் பாடல்களில் சிறந்ததொன்றாகும். இதை ஹென்றி பிரான்சிஸ் லைட் என்ற பக்தன் தமது வாழ்நாட்களின் இறுதியில் எழுதினார். தம் வாழ்க்கை அஸ்தமனமாகும்பொழுது, அவ்வேளையைக் குறித்து எழுதினாரேயன்றி, ஒருநாளின் முடிவைத் தம் மனதில் கொண்டு அவர் எழுதவில்லை. இப்பாட்டின் இரண்டாம் கவி முதல் கடைசி கவி முடிய நாம் படித்துப் பார்த்தால், இந்த உண்மை நமக்குப் புலனாகும். முதல் கவி மட்டும் எம்மா ஊருக்குப் போகும் பாதையில், நமது ஆண்டவருடன் நடந்து சென்ற சீடர்கள், அவரைத் தங்களுடன் தங்கிப் போகும்படி வருந்தி அழைத்த நிகழ்ச்சியை நம் நினைவிற்குக் கொண்டு வருகின்றது.
கிறிஸ்துவைத் தம்முடைய வாழ்க்கையில் நன்குணர்ந்து அவரோடு ஐக்கியப்பட்டு வாழ்ந்து வந்தவர் லைட் கவிஞர். இவர் எழுதிய மற்ற பாமாலைகள்: “ஆத்மமே, உன் ஆண்டவரின்”, “ஆண்டவா! மேலோகில் உம்”, “சிலுவை சுமந்தோனாக” போன்றவைகளாகும். அவர் எழுதிய முதலாம் ஞானப்பாட்டு, நமதாண்டவரைப் போற்றித் துதிக்கும் பாடலாக அமைந்துள்ளது. அவர் எழுதிய பாடல்கள் யாவும் நமதாண்டவரின் பிரசன்னத்தை நமக்கு உணர்த்துவனாகவும், மோட்ச பாக்கியத்தைக் காட்டுகின்றனவாகவும், கிறிஸ்துவின் பேரிலுள்ள நம்முடைய விசுவாசத்தைக் குறித்து வாக்குறுதி கொடுக்க நம்மை ஏவுகின்றனவாகவும் இருப்பதைக் காணலாம். “உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி, ஞானம், உலகம் அனைத்தும் அற்பக் குப்பை” என்று எண்ணின பக்தன் இவர்.
இவர் 1793 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியன்று ஸ்காட்லாந்தில் கெல்லோ என்னுமிடத்தில் பிறந்தார். தமது எதிர்கால வாழ்க்கையைக் குறித்துச் சிந்தித்தபோது முதலில் மருத்துவராக மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று எண்ணினார். பின்பு தம்முடைய எண்ணத்தை மாற்றி, வேத சாத்திர கல்லூரிக்குச் சென்று, கற்று, குருப்பட்டம் பெற்றார். இருபத்துமூன்றாம் வயதில் குருவாக அபிஷேகம் செய்யப்பட்டார்.
மூன்று வருடங்கள் குருவாகப் பணியாற்றியபின் அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. ஒருநாள், நோய்வாய்ப்பட்டு மரணத்தருவாயிலிருந்த ஒரு சபை குருவைப் பார்க்க அவர் சென்றார். அக்குருவானவர். லைட்டைக் கண்டதும், தம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் தாம் இவ்வுலகத்தை விட்டுப் போவதாகவும், ஆண்டவரைச் குறித்துக் கலக்கமுள்ளவராயிருப்பதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட லைட் வருத்தமடைந்து, அவரை ஆறுதல்படுத்தி, அவருடன் சேர்ந்து ஜெபித்தார். பின்பு, பரிசுத்த ஆவியின் ஒத்தாசையை நாடி, புதிய ஏற்பாட்டிலுள்ள சில பாகங்களைச் சிறப்பாக, பரிசுத்த பவுலின் நிருபங்களில் சில வசனங்களை வாசித்தார்கள்.
கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகக் கல்வாரி சிலுவையில் தொங்கிச் சிந்திய இரத்தத்தின் மேன்மையையும், அவர் அருளிய பாவமன்னிப்பையும், இரட்சிப்பையும் முழுவதுமாக இருவரும் விசுவாசித்தார்கள். மரணப்படுக்கையிலிருந்த குருவானவர் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று, முகமலர்ச்சியுடன் மரித்தார். இந்த நிகழ்ச்சியைக் குறித்து, எழுதும்பொழுது தாம் அன்றுமுதல் பரிசுத்த வேதாகமத்தை ஒரு புது உணர்ச்சியுடன் வாசித்துப் பிரசங்கம் செய்ததாகக் கூறியுள்ளார். அதுமுதல் அவருடைய வாழ்க்கையில் மாறுதலும் காணப்பட்டது.
தமது வாழ்நாட்களில் பல சபைகளில் குருப்பணியாற்றினார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் சபையோரின் நன்மதிப்பைப் பெற்றார். 1823 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 வருடங்களுக்கு மேலாகத் தென் டவன் பகுதியிலுள்ள பிரிக்காம் என்னுமிடத்திலிருந்த சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் கிறிஸ்தவப் பணியாற்றினார். அநேக ஞானப் பாட்டுகளை அங்கிருக்கும்பொழுது எழுதினார். பிற்காலங்களில் அவர் உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. இவ்வுலகைவிட்டு மறைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, இங்கிலாந்தைக் காட்டிலும் வெப்பமுள்ள நாடாகிய இத்தாலியில் குளிர் காலத்தைச் செலவிடும்படி, அவரைக் கொண்டுபோவது பயன்தருமென்று அவருடைய நண்பர்கள் கருதி, அவரை அங்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவர் தம்முடைய படுக்கையை விட்டு எழுந்து, வெளியே போகும் நிலைமையிலில்லை.
இவ்வாறிருக்கும்பொழுது, அவர் ஒருநாள் ஆலய ஆராதனையில் பங்கு பெற்று, தம்முடைய சபையின் மக்களுக்குக் கடவுளின் செய்தியைக் கொடுக்கப்போவதாகக் கூறினார். அவ்வாறு அவர் செய்வாரானால், அவர் உடல்நலனை அது பெரிதும் பாதிக்குமென்று அவருடைய உறவினர்களும், நண்பர்களும் பயந்து அவரைத் தடுத்தார்கள். அவர்கள் கூறியதை அவர் தமது செவிகளில் ஏற்காமல், ஆலயத்திற்குச் சென்று, ‘பரிசுத்த நற்கருணை’ என்ற பொருளின் பேரில் ஒரு அருமையான பிரசங்கம் செய்தார்.
நற்கருணை ஆராதனையையும் அவர் நடத்தி, தமது இல்லத்திற்குத் திரும்பின போது, தம்முடைய வாழ்க்கை முடிவடையும் காலம் நெருங்கியதை உணர்ந்தவராய்த் தம்முடைய அறைக்குச் சென்றார். அன்று மாலையில், “என்னோடிரும், மா நேச கர்த்தரே” என்று ஆரம்பிக்கும் பாடலை எழுதி, தாம் நேசித்து வந்த உறவினர் ஒருவரிடம் கொடுத்தார். இது நிகழ்ந்தது செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியாகும். அதன்பின் இத்தாலியா நாட்டிலுள்ள நீஸ் என்னுமிடத்திற்குச் சென்று, இரண்டரை மாதங்களுக்குப்பின், நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று மரித்தார்.
அவருடைய கடைசி வார்த்தைகள் ‘சமாதானம், சந்தோஷம்’ என்பவைகளே.
பிறப்பு: கி.பி. 1793, ஜூன் 1
இறப்பு: கி.பி. 1847, நவம்பர் 20
Comments (0)