ஜேம்ஸ் சால்மர்
பல தேவ மனிதர்கள் உதித்த ஸ்காட்லாந்து தேசத்தில் 1841-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜேம்ஸ் சால்மர். அவருடைய தந்தை கல் தச்சர், வேலைக்காக வெளியூர் சென்றவர் வீடு திரும்பவே இல்லை. சிறு வயது முதல் ஜேம்ஸ் சால்மரை ஒழுக்கமுள்ளவராக வளர்த்தார். இந்த எளிய பக்தியுள்ள கிறிஸ்தவ பெற்றோருக்கு, இரண்டு பெண் பிள்ளைகளும் இருந்தனர்.
தனது வீட்டினருகே இருந்த கடலில் விளையாடுவதும், அங்குள்ள மீனவர்களின் நண்பனாவும் இருந்தார் ஜேம்ஸ் சால்மர். கடலில் அனுபவமுள்ள இவர் 10 வயதாயிருக்கும் போதே, தனது சக பள்ளி மாணவனை கடலின் அலையிலிருந்து காப்பாற்றினார். மற்றொரு முறை கடலில் வீழ்ந்த சிறு குழந்தையை மீட்டார். ஓய்வு நாள் பாட சாலையில், ஒரு நாள் போதகர் மெக்கின், பிஜி தீவுகளில் பணியாற்றிய ஒரு மிஷனெரியின் கடிதத்தை வாசித்தார். அக்கடிதத்தில் நரமாமிசம் உண்கிற பழங்குடி மக்கள் மத்தியில் நடைபெறும் ஊழியம், அதன் தேவைகளைப் பற்றி இருந்தது. போதகர் இப்படிப்பட்ட நரமாமிசம் உண்ணும் பழங்குடி மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்க இங்கு யார் உண்டு? என அறைகூவலிட்டார்.
தேவ ஆவியானவர் ஜேம்ஸ் சால்மர் உள்ளத்தில் பேசினபடியால், ‘ஆண்டவரே உமக்குச் சித்தமானால் என்னை அனுப்பும்’ என தனது உள்ளத்தில் ஜெபித்தார். பின்பு வீடு திரும்பும் போது சாலை அருகே முழங்கால்படியிட்டு ‘ஆண்டவரே, என்னை ஏற்றுக்கொள்ளும், ஒரு மிஷனெரியாக என்னை அனுப்பும்’ என பிரார்த்தனை செய்தார். பின்பு ஆவிக்குரிய வாழ்வில் வந்த சோர்வு, தோல்விகளுக்கு பரிகாரமாக போதகர் மெக்கின் மற்றும் திரு. டன்கன் போன்ற ஆவிக்குரிய தலைவர்கள், ஜேம்ஸ் சால்மரை உற்சாகப்படுத்தி வழிநடத்தினர்.
நாட்கள் சென்ற பின்பு, ஜேம்ஸ் சால்மர் ஒரு தேவ ஊழியரானார். பட்டணத்தில் நற்செய்திக் கூடுகைகள், வீடுகளில் ஜெபக்கூட்டங்கள் நடத்தி வந்தார். அதே வேளையில் தான் ஒரு மிஷனெரியாகச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மங்காமல் எரிந்து கொண்டே இருந்தது. உற்சாகமூட்டும் வண்ணம் போதகர் மெக்கின் அவரோடு இருந்து வழி நடத்தினார். கிளாஸ்கோ நகர ஊழிய ஸ்தாபனத்தில் ஜேம்ஸ் சேர உதவினார். அங்கு எட்டு மாத பணிக்குப் பின் ஒரு வேத கலாசாலை சென்று பயின்றார். அவருடைய சக மாணவர்கள் “ஜேம்ஸ் இளகிய நெஞ்சமுடைய தேவ மனிதர் எனப் புகழ்ந்தனர்.”
1865-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி ஜேன் ஹெர்கல் என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஜேன், ஜேம்ஸ் சால்மருக்கு ஏற்றத் துணையாக, மிஷனெரிப் பணிக்கு அர்ப்பணித்து, வாஞ்சையுள்ள பெண்ணாக இருந்தார். ஆண்டவரை அறியாத மக்கள் அவரை அறியத் துடிப்பாக காத்திருந்த பெண் அவர். திருமணமாகி இரண்டாம் நாளில் அபிஷேகம் செய்யப்பட்டு, ஜனவரி 4-ஆம் தேதி, 1866-ல் “ஜாண் வில்லியம் -11” என்ற கப்பலில் பணிக்களம் செல்ல புறப்பட்டார்கள்.
1867, மே மாதம் 20-ஆம் தேதி பசிபிக் கடலில் உள்ள அவருவா தீவுக்கு வந்தார்கள். அது ரரோ டோல்கா நகர் அருகே இருந்தது. முதலாவது நபராக கரையிறங்கிய அவரை, உன் பெயர் என்ன என்று கேட்ட கேள்விக்கு ‘சால்மர்’ என்று பதில் கொடுத்தார். அதைக் கேட்ட அந்த பழங்குடி மக்களுக்கு அந்த பெயர் உச்சரிக்க முடியாமல் ‘டமாட்டி’ என்று அழைத்தனர். அன்றிலிருந்து அங்கிருந்தவர்கள் அவரை அவ்வாறே அழைத்தனர். தன்னுடைய ஊழியங்களை ஆரம்பித்த அவருக்கு மக்கள் கிறிஸ்துவை சிறிது அறிந்திருப்பது ஏமாற்றமாக இருந்தது. ஒருமுறை கூட கேள்வியுராத மக்களைச் சந்திக்கவே நான் வந்தேன் என்றார். கிறிஸ்துவை சரிவர ஏற்றுக்கொள்ளாத அம்மக்கள் குடிப்பழக்கத்தில் நிலைத்திருந்தனர். குடியை நிறுத்த முயற்சிப்பதே அவருடைய முக்கியப் பணியாகியது. காட்டுக்குள், அடர்ந்த புதருக்குள் இருந்து குடிக்கும் மக்கள் மத்தியில் திடீரெனச் சென்று மதுவைப் பூமியில் ஊற்றச் செய்து விட்டு, கிறிஸ்துவைப் பிரசங்கிப்பார்.
ஜேம்ஸ் சால்மரின் வாஞ்சை நரமாமிசமுண்ணும் மக்கள் மீது இருந்தபடியால் குடும்பமாக நியூ கினியா செல்ல ஆயத்தமானார். “கிறிஸ்துவிடம் நெருங்கி வரும்போதெல்லாம் ஆண்டவரை அறியாத மக்களின் பணி வாஞ்சையே என்னை ஆட்கொள்ளுகிறது” என்கிறார். சாதாரண மனிதனுக்கு இருக்கும் பயமெல்லாம் அவருக்குச் சவாலாக இருந்து, அவரை ஈர்த்து, அவரை பணத்தாலும் ஜெபத்தாலும் தாங்கிய மிஷனெரி சங்கம் அவருக்குக் கொடுத்த விடுமுறையை ஏற்காது, 1877-ஆம் ஆண்டு மே மாதம் நியூ கினியா சென்றார். நாகரீகமற்ற, பாவம் நிறைந்த, மூடத்தனம் மிக்க, கொடூரமாக பழங்குடிகள் வாழுமிடமாயிருந்தது.
அம்மக்கள் அசுத்த ஆவிக்கு பயப்படுபவர்கள், ஆத்துமா அழிவில்லாதது என நம்பினார்கள். அவர்களுடன் பழக கத்தி, கரண்டி, கார்க் திறப்பான் மற்றும் சிறிய பொருட்களை பரிசாகக் கொடுத்து, தன் நட்பை வளர்த்துப் பணியாற்றினார். ஸ்காட்லாந்து மக்களிடம் அவர் கேட்பதெல்லாம் கத்தி, கரண்டி போன்ற பொருட்களை நூற்றுக்கணக்கில் எனக்கு அனுப்புவதே என்பதேயாகும். இவ்வித கடின உழைப்பால் 1878-ல் மனிதர்களை சாப்பிட்ட மக்கள் 1882-ல் மனந்திரும்பி, ஒருவரையொருவர் ஏற்று, ஐக்கியமாக அன்பாக வாழ கற்றனர். நரமாமிசம் இல்லை, மனித மண்டை ஓடு, தாடை எலும்பு அணிகலன்களாக அணிவதில்லை. சண்டையிட்டு கொன்று தின்னும் இம்மக்கள் கிறிஸ்துவில் புது வாழ்வு பெற்றனர்.
சால்மரின மனைவி ஜேன், அவருக்கு இணையாக ஊழியத்தில், மனிதர்களையே சாப்பிடும் கொடூர மக்கள் மத்தியில் அச்சமின்றி பணியாற்றினார்கள். ஒரு நாள் இறந்துபோன தனது கணவன் உடலையே விருந்தாக சமைத்து ஒருகூட்ட மக்களுக்கு பரிமாறினாள் ஒரு பெண். இப்படிபட்ட மக்கள் கிறிஸ்துவை அறிந்து வளரலானார்கள். சிட்னி பட்டிணத்திற்கு ஜேன் சென்றிருந்தபோது, மிகவும் பெலவீனமாகி இருந்தபடியால் நோயுற்று பிப்ரவரி 20, 1879-ல் மரித்துப் போனார்கள். இக்காரியம் தெரியாமலிருந்து பல நாட்களுக்குப் பின்னரே செய்தியை அறிந்தார். ஜேனைப் போல் தீவிர, பயமில்லாத மிஷனெரி கிடைப்பதே அரிது. எனினும் கிறிஸ்துவின் பணியில் ஈடுபடுவதின் மூலம் என் துக்கத்தை மறப்பேன் என இன்னும் தீவிரப் பணியில் ஈடுபட்டார்.
1886, மே மாதம் 11-ஆம் நாள் புறப்பட்டு ஆகஸ்டு 10-ஆம் தேதி லண்டன் மாநகர் வந்தடைந்தார். அவருடைய ஊழியத்தையும், தேவன் அவரைப் பயன்படுத்திய விதத்தையும் திருச்சபை மக்கள் கேட்டு, மிகவும் பரவசமடைந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள். மறுபடியும் பணிக்களம் திரும்பும்போது சாரா எலிசா ஹாரிசன் என்ற பெண்ணை திருமணம் செய்து 1888-ல் மோட்டு என்ற தீவில் தங்கி பணியாற்றினார். திருமதி. சாரா சால்மரும் ஊழியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு, அவருக்கு உறுதுணையாகப் பணியாற்றினார்.
புதுப்புது தீவுகளுக்குச் சென்று அங்குள்ள நரமாமிச பட்சிகளான பழங்குடியினரை கிறிஸ்துவிடம் வழி நடத்தினார். நியூ கினியாவிற்கு அருகாமையிலுள்ள ஃப்ளை ஆற்றுக் கரையோரம் உள்ள கிராமங்களில் ஊழியம் செய்து வெற்றி கண்டார். அவர் வரும் முன், இம்மக்கள் மனித எலும்புகளை, மண்டை ஓட்டை அணிகலன்களாக அணிபவர்கள், மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் இன்று சிறந்த விசுவாசிகள், அழகிய ஆலயங்களில் தேவனை வழிபடுவர்கள்.
1900-ஆம் ஆண்டு தாரு என்ற தீவில் தங்கி பணியாற்றும்போது, மனைவி சாரா அதிக சுகவீனமாகி, 14 வாரங்களாக படுத்த படுக்கையாகி, இறுதியில் தேவராஜ்யம் சேர்ந்தார். என் வாழ்வில் தேவ சித்தம் இதுவே என்று அந்த பிரிவையும் ஏற்றுக்கொண்டு, எஞ்சியுள்ள நாட்களை தீவிர பணியாற்ற செலவிடுவேன் என்றார். இன்னும் தேவனை அறியாமல் ஆயிர ஆயிரமான பழங்குடிகள் இருக்கும்போது, பல தீவுகளுக்குச் சென்றார். 1901-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி “கோரிபாரி” என்ற தீவிற்குப் பயணமாகி, ஏப்ரல் 7-ஆம் தேதி அந்த தீவை அடைந்தார். அங்குள்ள நரமாமிசம் உண்ணும் பழங்குடி மக்கள், அவருடைய படகை கூட்டமாக சூழ்ந்து கொண்டனர். நாளை மாலை மறுபடியும் வருகிறேன் எனக்கூற அக்கூட்ட மக்களிடம் இருந்து தப்பிச் சென்றார்.
மறுநாள் சில பரிசுப் பொருட்களுடன் காலையில் அந்த தீவை அடைந்தார். அவர் திரும்பி வர படகு காத்திருந்தது. ஆனால் சால்மர் திரும்பவில்லை. சால்மர் மற்றும் அவரது உடன் ஊழியர் டாம் கின்ஸ் இருவரும் கோரிபாரி தீவில் இறங்கியதும் அவர்களை ஒரு பெரிய விருந்துச்சாலைக்கு அந்த பழங்குடி மக்கள் அழைத்துச் சென்றனர். திடீரென மிஷனெரிகள் பின்புறம் இருந்து உருட்டுக் கட்டைகளால் தாக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டு, தலைகள் துண்டிக்கப்பட்டன. அவர்களின் உடல்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டன. பெண்கள் உடனே சமைத்து அங்கிருந்து பெருங்கூட்ட பழங்குடியினருக்கு விருந்தாகப் படைத்தனர்.
ஜேம்ஸ் சால்மர் ஒரு நாளும் இந்த பழங்குடியினருக்கு பயப்பட்டதில்லை. காரணம் அவருக்கு மரண பயம் இல்லை. மனிதனையே உண்ணும் இந்த மக்களுக்கு தன்னையே பலியாக்கியமையால், இன்று சாட்சிமிக்க திரள்கூட்ட நரமாமிச பட்சினிகள் தேவனுடைய பிள்ளைகளாக தலைமுறை, தலைமுறையாக வாழ்கின்றனர். நாமும் இது போன்று, பெரிய தியாகம் செய்ய முடியவில்லை என்றாலும், சிறிய அளவில் நம்மால் முயன்றவரை கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வோம். பரலோக மேன்மையை சுதந்தரிப்போம்.
பிறப்பு: கி.பி: 1841, ஆகஸ்ட் 04, (இங்கிலாந்து)
இறப்பு: கி.பி: 1901, ஏப்ரல் 08, (கோரிபாரி தீவு)
Comments (0)