Today Bible Verse

Allen Gardiner History in Tamil

ஆலன் கார்டினர்

     “அப்பா! கப்பல் மாலுமி என்னை அழைத்துச் செல்வதாக வாக்களித்துள்ளார். நாங்கள் அடுத்த வாரம் கடற்பிரயாணம் செய்யப்போகிறோம்” என்று மகன் மிக உற்சாகத்தோடு பேசினான். அவனது தந்தை தலையை அசைத்து, “மகனே நீ மிகவும் சிறியவன். கப்பல் பிரயாணம் மேற்கொள்ள சில வருடங்கள் நீ காத்திரு. நீ பெரியவனாகும் போது கப்பல் பிரயாணம் செய்யலாம்” என்றார். ஆலனின் தாயார் படுக்கையறைக்குள் சென்று பார்க்கும்போதெல்லாம். அவன் வெறும் தரையில் படுத்துறங்குவதைக் காண்பாள். “மெத்தைப் படுக்கையில் படுத்துறங்காமல் ஏன் தரையில் தூங்குகிறாய்” என்று அவன் தாய் கேட்டால் “நான் கப்பல் மாலுமியாகப் போகிறேன். புதிய நாடுகளையும் இடங்களையும் கண்டு பிடிப்பேன். அதற்காக இப்போது கடின வாழ்க்கையில் எனக்குப் பழக்கம் ஏற்படவேண்டும்” எனச் சொல்லுவான்.

     மிகச் சிறிய வயதிலே கப்பல் மாலுமியாக மாறி தீரச் செயல்கள் புரியவேண்டும் என்ற எண்ணம் ஆலனின் உள்ளத்தில் பலமாக ஊன்றியிருந்தது.

ஆரம்ப வாழ்க்கை

     1794 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் பிறந்த இவன் மிகச் சிறிய வயதிலேயே தீரச் செயல்கள் புரிவதில் பிரியப்பட்டான். “மிங்கோ பார்க்கினுடைய பயணங்கள்” என்ற ஆப்பிரிக்க நாட்டின் அதிதீரச் செயல்கள் அடங்கிய கட்டுரைகளைப் படிப்பதில் உற்சாகமடைந்தான். ஆப்பிரிக்க மொழியின் வார்த்தைகளை எழுதி மனப்பாடம் செய்வான். முழு உலகையும் சுற்றிப் பயணம் செய்வதைத் தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தான். குதிரைச் சவாரி செய்வதிலும், நீந்துவதிலும் திறமைசாலியாகக் காணப்பட்டான்.

கடற்படையில் சேருதல்

     கார்டினர் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பதினாறு வயதிலேயே உயர் கல்வி பெற்றுத் தகுதியடைந்தார். கடற்படையிலே உடனே சேர்ந்து நான்கு வருடங்களில் பதவி உயர்வும் பெற்றார். வெகு விரைவில் ஒரு கப்பலை ஏற்று நடத்தும் கப்பல் தலைவன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதற்குள்ளாக உண்மைக் கிறிஸ்தவளான அவனது தாயாரின் நல்ல போதனைகளை விட்டு தூர அலைந்து திரிகிறவராகவும், தன் மனம் போன போக்கில் நடப்பவராகவும் மாறிவிட்டார். ஒரு நாள் அவருடைய தந்தை எழுதிய தாயைப்பற்றிய சுயசரிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அவரது தாய் சேவித்து வணங்கி வந்த தேவனைப்பற்றி அறியவேண்டும் என்கிற உணர்வு அவர் உள்ளத்தில் ஏற்பட்டது. ஒரு வேதாகமத்தை வாங்கி வாசித்து தியானித்தார். இளம் மாலுமியான ஆலன் கிறிஸ்துவைத் தன் சொந்த ஆத்ம மீட்பராக ஏற்றுக்கொண்டார்.

     உலகின் பல நாடுகளில் உள்ள துறைமுக நகரங்களுக்குக் கப்பல் தலைவன் பொறுப்பில் அவர் போகவேண்டியிருந்தது. துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போது நகரங்களுக்குள் சென்று ஊரைச் சுற்றி பார்ப்பது அவருக்குப் பிரியம். உள்ளூர்வாசிகள் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றை மிக ஆர்வத்தோடு கவனிப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். ஒரு சமயம் கப்பல் பிரயாணத்தில் பசிபிக் தீவுகளில் ஒன்றான தஹிதி தீவில் தங்கவேண்டியிருந்தது. கரையில் இறங்கி நடந்தபோது வெகு அமைதியாகவும், அவாந்திர வெளியாகவும் காணப்பட்டது. உட்பகுதியில் கிராமத்தை அடைந்தார். அத்தீவைச் சேர்ந்த மனிதன் ஒருவன் கிராமப் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்து ஓய்வுநாள் பாடசாலையில், கிறிஸ்துவைப் பற்றிப் போதித்துக் கொண்டிருந்தான்.

    திடீரென்று ஆலனுக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற நினைவு வந்தது. அனைத்துத் தீவு மக்களும் கிறிஸ்தவர்கள் என்பதை அறியலானார். அவர் பார்த்துவந்த மற்ற இடங்களைக் காட்டிலும் இந்த இடம் பெரும் மாறுதலுக்கு உட்பட்டிருந்ததை உணர்ந்தார். தியாக சிந்தையோடு திருப்பணியாற்றிய மிஷனெரிகளே, இப்பெரிய மாற்றத்திற்குக் காரணம் என்று அறிந்தார். இப்படிப்பட்ட தீவுகளிலும் மிஷனெரிகள் வந்து பணியாற்றியுள்ளனரே என்று வியந்தார். இவ்வித மாற்றங்கள் மற்ற நாடுகளிலும் நிகழமுடியுமா என்ற கேள்வி அவரில் எழுந்தது. நிச்சயமாக மாற்றங்கள் நிகழ முடியும். ஆனால் யார் கிறிஸ்துவைப் பற்றி அவர்களுக்குச் சொல்லுவார்கள் என்கிற சிந்தையோடு பிரயாணப்பட்டுப் போனார்.

  தென் அமெரிக்காவின் தென்கோடியிலுள்ள சில தீவுகளையும், அவரது கடற் பிரயாணத்தில் பார்க்க நேர்ந்தது. தென் அர்ஜென்டைனாவிலுள்ள படகோனியா என்ற இடத்தில் மிகவும் பழங்குடியினரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அநாகரீகமான மூடப்பழக்க வழக்கமுள்ளவர்களாகக் காணப்பட்டனர். சிறிதும் கடவுளைப்பற்றி அறிவில்லாதவர்கள். இப்படிப்பட்ட கடற்பிராயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களெல்லாம் ஆலன் கார்டினரைச் சிந்திக்க வைத்து, பிரிட்டிஷ் கடற்படையை விட்டு மிஷனெரியாக மாற தூண்டியது.

கார்டினர் தென் ஆப்பிரிக்க நாட்டை அடைதல்

   கடவுள் கார்டினரை தென் ஆப்பிரிக்க நாட்டிற்குப் போக வழி நடத்தினார். அங்குள்ள ஆப்பிரிக்க இன மக்களுக்கு அன்றைய நாளில் ஒருவரும் சுவிசேஷத்தை அறிவிக்கச் செல்லவில்லை. ஜூலுஸ் என்ற பழங்குடி இனத்தினர் ஒருவரும் செல்லக்கூடாத உட்பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்களைச் சந்திக்க குதிரைமேல் பிரயாணம் செய்து மிகவும் ஆபத்தான வழிகளைக் கடந்து சென்றார். அடர்ந்த காடுகளையும், சதுப்பு நிலங்களையும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளையும் நீந்திச் சென்றார். ஒரு சமயம் ஆற்றங்கரையில் பசியுள்ளவராகவும், நனைந்த நிலையிலும் களைப்புடன் படுத்து உறங்கி விட்டார். அச்சமயம் ஒரு பெரிய நீர் யானையின் சத்தத்தைக் கேட்டு விழிப்படைந்தார்.

   ஜூலுஸ் இனத்தின் அரசன் மிகக் கொடூரமான போர் வீரன் என்றும், அப்பகுதி மக்கள் அனைவரும் அவனைக் கண்டு மிகவும் பயந்து வாழ்ந்து வந்தனர் என்றும் அறியலானார். அப்படிப்பட்ட மனிதனிடம் இயேசு கிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பை எடுத்துக் கூறினார். கார்டினர் தென் ஆப்பிரிக்காவில் பணிச்செய்ய வந்தபோது, அவருடைய உடமைகள் மிகவும் அற்பமானவைகள், சில உடைகள், குதிரைச் சேணம், ஒரு கரண்டி, புதிய ஏற்பாடு ஆகியவைகளே.

   தென் ஆப்பிரிக்காவில், தூதுவராக பிரிட்டிஷ் அரசு அவரை நியமித்தது. அவருடைய அரசுப் பணியும், அருட்பணியும் நடைபெற்று வரும் நேரத்தில் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாயிற்று. குடியேறியுள்ள வெள்ளை இனத்தவருக்கும், ஜூலுஸ் குடி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட போர் முற்றியதால் தென் ஆப்பிரிக்காவை விட்டு கார்டினர் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

தென் அமெரிக்காவுக்குச் செல்லுதல்

   ஆலன் கார்டினர், தன்னைக் கர்த்தர் மிஷனெரிப் பணிக்கென்று அழைத்ததை நிச்சயமாக நம்பினார். முன்பு ஒரு காலத்தில் தென் அமெரிக்கப் பகுதியில் சந்தித்த பழங்குடி இன மக்களிடம் பணியாற்ற தன் மனதில் நிர்ணயம் பண்ணிக்கொண்டார். 1838 ஆம் ஆண்டு தன் மனைவி பிள்ளைகளுடன் தென் அமெரிக்காவுக்குப் பயணமானார். கரையிறங்கி அவர் குடும்பத்தோடு ஒரு கூண்டு வண்டியில் பயணத்தை மேற்கொண்டார். அராகேணியர் என்கிற தென் அமெரிக்க இனம் ஓரளவு நகரீகம் அடைந்திருந்தது. அவர்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்க நீண்ட பயணத்தைச் செய்ய வேண்டியிருந்தது.

    பதினான்கு நாட்கள், மேடு பள்ளங்கள் நிறைந்த பாதையையும், ஆறுகளையும் கடந்து சென்றார். ஆண்டிஸ் மலைகளைத் தாண்டிச் செல்ல கோவேறு கழுதைகளைப் பயன்படுத்தினர். முடிவில் தாங்கள் பணியாற்ற விரும்பின இடத்தில் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். அவ்வீட்டில் அவர்கள் கொண்டு வந்திருந்த வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் அடுக்கி ஒழுங்கு செய்தனர். அச்சமயத்தில் அராகேணிய இனத்தலைவன் அவர்களிடம் வந்து அவ்விடத்தை விட்டுப் போகும்படி உத்தரவிட்டான். இவருக்கு முன்னால் வந்த வெள்ளையர்கள் அதிகக் கொடுமை நிறைந்தவர்களாய் இருந்தபடியால் அவ்வின மக்கள் வெள்ளையரை வெறுத்தனர். வெள்ளையர் என்றாலே கொடூரமானவர்கள் என்ற தவறான எண்ணத்தினால், அவ்வினத்தினர் ஆலன் கார்டினரை மிஷனெரிப் பணியை ஆரம்பிக்கவே அனுமதிக்கவில்லை முழுவதுமாய்த் தடுத்துவிட்டனர்.

இரண்டாம் முயற்சி

    தென் அமெரிக்காவின் தென் கோடியில் ஆலன் முன்பு சந்தித்த மக்களிடம் சென்று பணித்தளத்தை நிறுவினார். மரங்கள் அற்ற கடற்கரைப் பகுதியில், அவர்களுக்கென்று ஒரு மர வீட்டைக் கட்டினார். கிழிந்துபோன கூடாரங்களைத் தைப்பது போன்ற தொழிலை அங்குள்ள மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததால் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றார். நல்ல நண்பர்களாகப் பழகும் இவ்வின மக்களிடையே தாம் விரும்பின மிஷனெரி இயக்கத்தை நிறுவ விரும்பினார். உதவிகளைப் பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்குத் திரும்பினார். அவருடைய முயற்சிகளுக்கு உதவியும், உற்சாகமும் கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப்பின் படகோனியன் மிஷன் சங்கத்தை நிறுவினார்.

   தென் அமெரிக்க தென் பகுதிக்கு அவர் மறுபடியும் வருகை தந்தபோது, ஒரு புதிய தலைவன் பதவி ஏற்றிருந்தான். அவன் அவருக்கு எதிராக செயல்பட்டு மிஷனெரி தளத்தை அவ்விடத்தில் நிறுவமுடியாதபடி செய்துவிட்டான். இதனால் கார்டினர் மறுபடியும் இங்கிலாந்து திரும்பவேண்டியதாயிற்று. அவருடைய உடன் ஊழியர்கள் உற்சாகம் இழந்து சோர்வுற்றனர். ஆனால் கார்டினர் சோர்ந்து விடவில்லை. “நான் மறுபடியும் தென் அமெரிக்காவுக்குத் திரும்ப மன உறுதி கொண்டுள்ளேன். எல்லா முயற்சிகளையும் செய்து பார்ப்பேன். பெயர்க்கமுடியாத தடைக் கற்கள் எத்தனை உண்டோ அத்தனையையும் அகற்றுவேன். அபோரிஜினல் என்ற பழங்குடியினரிடையே, புராடஸ்டண்ட் மிஷனெரி இயக்கத்தை நிறுவியே தீருவேன்” என்று தீர்மானித்தார்.

மூன்றாம் முறை கார்டினர் எடுத்த முயற்சி

   தென் அமெரிக்காவில் பொலினியா என்ற நாட்டிற்கு இம்முறை சென்றார். அந்த இடத்தில் பதினாறு கிராமங்களைச் சந்தித்த பின் தலைவனின் அனுமதியைக் கேட்டார். பணித்தளம் நிறுவ பதினோரு முறை அனுமதி மறுக்கப்பட்டது. அவருடைய கூட்டாளிகளில் அநேகர் காய்ச்சலால் அவதிப்பட்டனர். மிகவும் கரடுமுரடான பாதைகளில் ஆயிரம் மைல்களுக்கு மேலாக அவர்களுக்கு, சுவிசேஷ நற்செய்திப் பணி செய்ய அனுமதி கிடைக்கவில்லை. மிகுந்த பிரயாசத்துடன் அனுமதி பெற்றார். அந்நேரத்தில் அங்கு புரட்சிப் போர் வெடித்ததால் கார்டினர் இங்கிலாந்து திரும்ப நேரிட்டது.

நான்காவது முயற்சியும் தோல்வியடைதல்

   இங்கிலாந்திலிருந்து, கார்டினர் தன்னுடைய புதிய நண்பர்களுடன் தென் அமெரிக்காவுக்குப் பயணமானார். ஒரு புதிய தீவில் இறங்கி குடிசைகள் அமைத்தனர். அத்தீவின் மக்கள் மிகவும் பொல்லாதவர்களும், திருடர்களுமாயிருந்தனர். மிஷனெரிகள் கொண்டு வந்திருந்த எல்லா உடைமைகளையும், உணவுப் பொருள்களையும் திருடிச் சென்றுவிட்டனர். இம்முறையும் ஏமாற்றம் அடைந்தவராய், அத்தீவை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.

ஆலன் கார்டினர் மேற்கொண்ட முயற்சிகள்

     கடற்படை தலைவன் பதவியை உதறித்தள்ளி, மிஷனெரிப் பணிக்கு தன்னை அர்ப்பணித்து, அநேக ஆண்டுகள் ஆயிற்று. எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாகக் தோன்றிற்று. அருட்பணி செய்யவும், பணித்தளம் நிறுவவும் அவர் எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. எனினும் அவர் பெற்ற அழைப்பையும் விட்டு விடவில்லை. அதனால் புதிய முறையில் ஊழியம் செய்ய ஏவப்பட்டார். ஒரு மிஷனெரிக் கப்பலை எடுத்துச் சென்று தென் அமெரிக்கத் தீவுகளில், பணிக்கென்று பயன்படுத்தினால் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார். அவரும் அவர் குழுவினரும் உடைமைகள், உணவுப் பொருள்கள் ஆகியவைகளை வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தார். கப்பல் வாங்கத் தேவையான தொகையை மிஷனெரிச் சங்கம் கொடுக்க இயலவில்லை. “இந்தக் காரியத்தை என் துணிவால் செய்ய முடிவெடுத்து விட்டேன். மிஷனெரிச் சங்கம் உதவினாலும் உதவாவிட்டாலும் சரி, நம் இரட்சகர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவனாய், உலகின் கடைசிப் பரியந்தமும் சுவிசேஷத்தை அறிவிக்கச் செல்லுவேன். கட்டளையைப் பெற்ற நாம் கீழ்ப்படிவது முக்கியம்” என்று எழுதினார்.

    கார்டினர் அவருடைய சொந்தப் பணத்தைக் கொண்டும், அவருடைய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுத்து அவர்மேல் இரக்கமுற்ற ஓர் அம்மையார் கொடுத்த தொகையைக் கொண்டும், இரண்டு நடுத்தரக் கப்பல்களை ஆயத்தம் செய்தார். ‘பயனியர்’ (முன்னோடி) ‘ஸ்பீட்வெல்’ (அதிவேகம்) என்று பெயர்கள் சூட்டப்பட்ட இரண்டுக் கப்பல்களில், ஏழுபேரடங்கிய குழுவுடன் தென் அமெரிக்காவுக்குப் பயணமானார். எல்லா இயந்திரச் சாதனங்களையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. பின் நாட்களில் இயந்திரச் சாதனங்கள் அவர்களை வந்தடையும்படி ஏற்பாடுகளைச் செய்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

    தென் அமெரிக்காவின் தென் பகுதியில், நிர்ணயித்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்குள்ள கடற்பகுதி மிகுந்த அலைகள் நிறைந்ததாகவும் வேகமாகக் காற்று வீசும் பகுதியாகவும் இருந்தது. அவர்கள் சென்ற கப்பல்கள் கடும் காற்றையும், அலைகளையும் தாங்கமுடியாத சிறிய கப்பல்களாக இருந்தன. முதல் மாத முடிவில் ‘பயணியர்’ கப்பல் சேதமடைந்துவிட்டது. தைரியசாலிகளான மிஷனெரிகள் ஒரு தீவில் கரையிறங்கினார்கள். அத்தீவு மக்கள் கொடூரமானவர்களும், மதிகேடர்களுமாய் இருந்ததால் அத்தீவில் தங்கமுடியவில்லை. எந்தத் தீவுக்கு நிவாரணக் கப்பல் வருமோ, அத்தீவை விட்டு வேறு தீவுக்குப் போக நேரிட்டது. ‘ஸ்பானியர்ட்’ துறைமுகம் அத்தீவுகளில் பிரதான தீவில் அமைந்திருந்ததால், அங்கு சென்றுவிட முடிவு செய்தனர். அவர்களைத் தேடிவரும் நிவாரணக் கப்பலுக்குச் செய்தியை, ஒரு பெரிய பாறையின்மேல் எழுதினர்.

‘   ஸ்பானியர்ட் துறைமுகத்திற்குப் போகிறோம், அங்கு சந்திக்கவும்’ என்று எழுதினர். கண்ணாடி பாட்டில்களில் மேற்கண்ட செய்தியை எழுதி கரையோர மணலில் புதைத்தனர். “உணவுப் பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. நாங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம். நிவாரண உதவி எங்களுக்கு விரைவில் கிடைக்காவிட்டால் நாங்கள் பட்டினி கிடப்போம்” என்று எழுதப்பட்ட செய்திகளும் பாட்டில்களில் வைக்கப்பட்டன. நிவாரணக் கப்பல் அங்கு வரும்போது அந்தச் செய்திகளை எடுத்துப் படிப்பார்கள் என்று நம்பினர். உதவி தாமதமாக அவர்களை வந்து அடையும் என்று எதிர்பார்த்தனர்.

கடைசிப் போராட்டம்

   பல வாரங்கள் கடந்தும் நிவாரணக் கப்பல் வந்து சேரவில்லை. ஆகாரப் பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. தலைவன் கார்டினரும் நண்பர்களும் வெளி உலகத் தொடர்பினின்று துண்டிக்கப்பட்டு விட்டனர். உணவுமில்லை, காப்பாற்றப்படுவோம் என்கிற நம்பிக்கையும் இல்லை. மீன் பிடிப்பது அக்கடலில் சாத்தியமாய் இல்லை. ஏழுபேரும் ஒரு நரியின் மாம்சத்தைப் புசித்துப் பலநாள் வாழ்ந்தனர். அடுத்து, ஆறு எலிகளையும், சில விதைகளையும், காட்டுச் செடியின் தண்டுகளையும் பட்டினியைப் போக்க உட்கொண்டனர். பட்டினி கிடந்ததோடல்லாமல் “ஸ்கர்வி” என்னும் நோயாலும் தாக்கப்பட்டனர். மிகக் கடினமான இச்சூழ்நிலையில் தன்னுடைய நாள்குறிப்பில் கார்டினர் இவ்விதம் எழுதினார். “நான் மிகவும் சோர்வுடன் பலவீனமாகக் காணப்படுகிறேன் நான் முழுவதும் படுத்த நிலையிலேயே இருக்கிறேன். என் மனக் கவலைகள் அனைத்தையும் என் தேவனிடத்தில் சமர்ப்பித்து விட்டேன். அவருடைய நேரம் வரவும் அன்பின் சித்தம் செய்யப்படவும் பூரணமாய் என்னை ஒப்படைத்து விட்டேன்” என்பதே.

    கார்டினரும் அவருடைய இரண்டு நண்பர்களும் உடைந்துபோன ‘பயணியர்’ கப்பலை கரைக்கு இழுத்துச் சென்று, அதில் ஒரு கூடாரத்தைப் போட்டுத் தங்கினர். மற்றக் குழுவினர் ஒரு மைல் தூரத்தில் கடலில் நின்றிருந்த கப்பலில் தங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் சோர்வுற்று பலவீனப்பட்டதால், கரைக்கும் கடலில் நின்றிருந்த கப்பலுக்கும் இடையே இருந்த போக்குவரத்து நின்றுவிட்டது. கார்டினர் மறுபடியும் இவ்விதம் எழுதினர். “இப்போதும் இச்சிறிய மிஷனெரி குழுவை, நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்து இதனிலும் மேலான பரலோக பாக்கியத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவே கூட்டிச் சேர்த்தார். எங்கள் அனைவருடைய உயிரும் அவருடைய கரத்திலுள்ளது. எங்களைக் காட்டிலும், மேலானவர்களையும், சிறந்த பயிற்சி பெற்றவர்களையும், திறமை மிக்கவர்களையும், தேவன் எங்களுக்குப் பின் எழுப்புவார். நாங்கள் நிறுத்திவிட்ட அருட்பணியை அவர்களே தொடர்ந்து செய்வார்கள்” என்பதே.

    கரையில் நின்றிருந்த, உடைந்த கப்பலில் தனியே விடப்பட்டவராகத் தன்னுடைய பிரிவு உபசாரக் கடிதத்தைத் தன் குடும்பத்திற்கு எழுதினார். குழுவினர் அனைவரும் இறந்துவிட்டனர். தென் அமெரிக்கத் தீவுகளில், எதிர்காலத்தில் மிஷனெரிப் பணியை எவ்வாறு நடத்திச் செல்வது என்பதைப்பற்றிய செயல் திட்டத்தையும் எழுதி வைத்தார். பிரிட்டிஷ் கிறிஸ்தவ சமுதாயத்திற்குத் தென் அமெரிக்க இனத்தவரின் சார்பில் ‘ஒரு வேண்டுகோளையும்’ எழுதி வைத்தார். அவர் உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை, அவர் உள்ளமும் நினைவும் மிஷனெரிப் பணியைப்பற்றியே இருந்தது. முடிவாக 1815 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் நாள் குழுவின் கடைசி ஆளாக கார்டினர் மரணத்தைத் தழுவினார். நிவாரணக் கப்பல், இருபது நாள்கள் கழித்து வந்து சேர்ந்தது. கிறிஸ்துவுகென்று மரித்த, தைரியசாலிகளான ஆறு பேரையும் கிறிஸ்துவின் சிலுவை வீரரையும் மரித்த நிலையில் கண்டனர்.

மண்ணில் விழுந்த – மரித்த கோதுமை மணி

   கார்டினரின் மிஷனரி வாழ்க்கை, ஏனைய மிஷனெரிகளைப் போலல்லாமல் வேறுபட்டதாய்க் காணப்பட்டது. அவருடைய மிகுந்த பிரயாசமும் முயற்சியும், எவரையும் கிறிஸ்தவர்களாக மாற்றவில்லை. கிறிஸ்தவ சபையும் ஸ்தாபிக்கப்படவில்லை. அவர் அர்ப்பணித்த வாழ்வும் முயற்சிகளும் வீண்போனது என்று சொல்லமுடியுமா? இல்லவே இல்லை. கிறிஸ்து கூறுகிறார், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்” (யோவான் 12:24). ஆலன் கார்டினர் கடவுள் தெரிந்தெடுத்த கோதுமை மணி. தென் அமெரிக்க மண்ணில் அவர் விழுந்து மரித்துப் போனார். அதனால் நிச்சயம் பலன் இருந்தே தீரும். அவருடைய பரிதாபமான மரண சம்பவத்தைக் கேள்விப்பட்ட அனைத்துத் திருச்சபைகளும் செயல்படத் துவங்கின. அவருடைய அருட்பணி சரித்திரம் எங்கும் பிரசுரிக்கப்பட்டது.

   அதன் பலனாக படகோனியன் மிஷனெரி சங்கம் உதயமாயிற்று. எந்தத் தீவுகளில் கார்டினரும் அவர் குழுவினரும் உயிர் துறந்தனரோ அவ்விடத்திலேயே அச்சங்கம் நிறுவப்பட்டது. பிரதான பணித்தளத்தை ஓரிடத்தில் அமைத்துக்கொண்டு, அங்கிருந்து அநேக தீவுகளுக்குச் சென்றுவர எல்லா வசதிகளையும் உடைய ஒரு கப்பல் உபயோகத்திற்கு வந்தது. அக்கப்பலின் பெயர் “ஆலன் கார்டினர்” என்பதாகும். மிஷனெரிப் பணிக்கென்று அர்ப்பணித்த முன்னோடியானவர்களில் கப்பல் தலைவனான கார்டினரின் மகனும் ஒருவராவார். அவர் தன் தகப்பனின் ஆவலை இதன்மூலம் பூர்த்தி செய்தார். கிறிஸ்தவ சபையார் தங்கள் தவறை நினைத்து வருந்தினர். கார்டினரின் ஒப்பற்ற சேவைக்கு அவர்கள் முழு ஆதரவையும் கொடுக்காததே அவர்களுடைய தவறாகும்.

    பல வாலிபர்கள் தங்களை இந்த மிஷனெரி சங்கத்தின் சேவைக்கென்று அர்ப்பணித்தனர். சுவிசேஷம் சென்றடையாத அநேக இடங்களுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் சொல்ல முன் வந்தனர். தென் அமெரிக்கப் பகுதிகளில் மிஷனெரிப் பணி மிகுந்த ஆர்வத்துடன் நிறுவப்பட்டு தொடர்ந்து செயல்பட்டது. இவைகளையும் இன்னும் அதிகமான பலன்களையும் பெற, கடவுளின் கோதுமை மணியான கார்டினர் தென் அமெரிக்க மண்ணில் விழுந்து மரித்ததினால் ஏற்பட்ட மகிமையின் விளைவே ஆகும். கிடைக்கப்பெற்ற அளவற்ற ஆசீர்வாதங்களுக்கும் காரணமாகும்.

    உன் வாழ்க்கையில் கனிகள் நிறைந்திருக்க விரும்புகிறாயா? உன்னை இயேசுவினிடத்தில் கொடுத்துப் பார். அவர் உன்னை பயன்படுத்துவார். கிறிஸ்துவுக்கு முழுவதுமாய் அர்ப்பணிக்கப்பட்ட எந்த வாழ்வும் வீணாவதில்லை. பயனில்லாமலும் போவதில்லை. உன்னுடைய வாழ்வும் கனிதரும் வாழ்வாக. பலன் கொடுக்க, அநேகருக்கு உபயோகமானதாக இருக்க விரும்புகிறாயா? அப்படியானால் கிறிஸ்துவுக்கென்று உன் வாழ்க்கையை முழுவதுமாய் கொடுத்துப் பார். அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பல நூற்றாண்டுகளாகப் பலன் கொடுத்துக்கொண்டே இருக்கும். சிலுவையில் மரித்து உயிர்த்த கிறிஸ்துவின் ஜீவன், உன்னிலும் என்னிலும் ஜீவனைக் கொடுத்து ஈராயிரம் ஆண்டுகளாகப் பலன் பெருகச் செய்கிறதை உணர்வாயோ?

பிறப்பு: கி.பி. 1794, (இங்கிலாந்து)

இறப்பு: கி.பி. 1851, செப்டம்பர் 6

Posted in Missionary Biography on December 23 at 05:49 AM

Comments (0)

No login
gif