Today Bible Verse

John Bunyan History in Tamil

ஜாண் பன்னியன்

    "மோட்ச பிரயாணம்" என்ற உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ நூலை எழுதிய ஜாண் பன்னியன் என்ற பரிசுத்த தேவ பக்தன் இங்கிலாந்து தேசத்திலுள்ள பெட்ஃபோர்ட் நகருக்கு ஒரு மைல் தொலைவிலுள்ள எல்ஸ்டவ் என்ற கிராமத்தில் 1628 ஆம் ஆண்டு பிறந்தார். ஒரு காலத்தில் அவரது முந்தைய தலைமுறையினர் நிலச் சுவான்தார்களாக வாழ்ந்த போதிலும் ஜாண் பன்னியனுடைய நாட்களில் அந்தச் செழுமையும், செல்வாக்கும் பறந்து போய்விட்டது. ஏழையிலும் ஏழையாக வாழ வேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார்.

    ஜாண் பன்னியன், தகர டப்பாக்கள், கெட்டில்கள் போன்றவற்றை செய்யும் தகர வேலைக்காரன் தொழிலையே செய்து வந்தார். அவரது தந்தையும் கூட வெண்கல பாத்திரங்களை உருவாக்கும் ஒரு தொழிலாளிதான். பன்னியன் தனது எல்ஸ்டவ் ஊரில் மிகவும் அற்பமான கல்வியைக் கற்றுவிட்டு தான் கற்ற அந்த சிறிய படிப்பையும் கூட மறந்துவிட்டு நின்றுவிட்டார். மற்ற ஏழைகளின் குழந்தைகளைப் போன்றே ஏழையான எனது கல்வியும் அமைந்தது என்று பன்னியன் கூறுவதுண்டு. எல்ஸ்டவ் கிராமத்திலிருந்த ஜாண் பன்னியனுடைய வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

பாவ வாழ்க்கை

    பன்னியன் தனது இளமைக் காலத்தில் தன்னுடன் தனது இளமை நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு தனது கிராமத்தில் காட்டு மிராண்டித்தனமாக வாழ்ந்து வந்தார். அவரைப்போல பொய் புரளி பேசவும், சபிக்கவும், கொடுந்தூஷணம் சொல்லவும், ஆண்டவரை நிந்தனை செய்யவும் அவருக்கு இணையாக எவரும் இருக்க இயலாது. கண்ணிகள் வைத்து பட்சி பறவைகள் போன்றவைகளை வேட்டையாடுவது, பழத்தோட்டங்களை கொள்ளையிடுவது போன்றவற்றிலும் அவரது கரம் முதன்மையாக சேர்ந்திருந்தது. தங்கள் ஊர் தீய கூட்டத்தின் கலகத் தலைவன் தலைமைப் பொறுப்பு தன் வசம்தான் இருந்ததாக அவரே சொல்லுவார். எல்ஸ்டவ் ஊரில் அனைவராலும் இழிவாகக் கருதப்பட்ட கற்பு நெறி தவறிய பெண்கள் கூட ஜாண் பன்னியனை காரி உமிழ்ந்து அருவெறுத்து பேசும் எல்லைக்கு அவரது நடத்தை சென்றது.

    தனது தீய கூட்டாளிகளுடன் சேர்ந்து நடனம் ஆடுவது அவருக்கு மிகவும் விருப்பமாகும். ஜாண் பன்னியன் படிக்கும் புத்தகங்கள் எப்பொழுதும் காதல் புத்தகங்களாகவேதான் இருக்கும். ஆனால், கர்த்தருடைய கிருபையால், அவர் ஒருக்காலும் விபச்சாரம், வேசித்தன பாவங்களில் விழவில்லை. சலங்கை மணிகளை கால் கரங்களில் கட்டிக் கொண்டு விளையாடுவது போன்ற விளையாட்டுகளை அவர் தனது நண்பர்களுடன் விளையாடுவார். கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாட்களில் "டிப்-காட்" என்ற ஒரு விளையாட்டை அவர் ஆர்வமாக விளையாடுவதுண்டு. "டிப்-காட்" என்பது நம் தமிழ் நாட்டில் சிறுவர்கள் விளையாடும் "கிட்டிப் புள்" என்ற "குச்சி-கம்பு" விளையாட்டாகும். இரு பக்கமும் கூர்மையாக சீவப்பட்ட ஒரு சிறிய குச்சியை தரையில் வைத்து மற்றொரு கடினமான சிறிய கட்டையால் தரையில் கிடக்கும் குச்சியின் ஒரு ஓரத்தை அடித்து எழுப்பி அடுத்த அடியால் அதனை தூரமாக செல்லப்பண்ணுவார்கள். அது மிகவும் சுவையான விளையாட்டாகும். அந்தக் கூர்மையான குச்சி அடிபட்டு எழுந்து செல்லும். எழுந்து செல்லும் அந்த குச்சியை பிடித்து விட்டால் அதை அடித்த நபர் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அந்த விளையாட்டின் காரணமாக தங்கள் கண் பார்வையை இழந்த சிறுவர்கள் பலருண்டு.

மரணத்திலிருந்து பாதுகாத்தார்

    ஜாண் பன்னியன் மரணத்தின் பிடியிலிருந்து பல தடவைகளிலும் கர்த்தரால் அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றார். ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத அந்த நாட்களில் அவருக்கு மரணம் சம்பவித்திருந்தால் நிச்சயமாக அவர் நரகத்துக்குத்தான் சென்றிருக்க வேண்டும். எனினும் தேவனுடைய அநாதி கிருபை அவரை பாதுகாத்தது. ஒரு சமயம் மலைகளுக்கு இடையேயுள்ள குறுகலான கடற்கழியில் விழுந்து நிச்சயமான மரணத்தின் பிடியிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பெட்போர்ட் நகரத்திலுள்ள நதியில் படகிலிருந்து தவறி விழுந்தும் நீரில் மூழ்கிவிடாமல் கர்த்தரால் அற்புதமாக காக்கப்பட்டார். ஒரு தடவை அவர் தனது நண்பனுடன் வயல் வெளியில் நின்று கொண்டிருக்கையில் ரஸ்தாவில் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பைக் கண்டார். கையில் நல்ல வலுவான கம்பு இருந்ததால் விரைந்து ஓடிச் சென்று அதை முதுகில் பலமாக அடித்து அதை ஓட இயலாமல் செய்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. தனது கம்பால் அதின் வாயைத் திறந்து அதின் விஷப் பல்லை தனது மதியீனத்தால் பிடுங்கி எடுக்க முயற்சித்தார். தனது முழுமையான முட்டாள்தனத்தால் தனது சாவை ஒரு நொடிப் பொழுதில் தனக்கு வரவழைத்துக் கொள்ள இருந்த இடத்திலும் அவரை அதிகமாக நேசித்த அவருடைய அன்பின் தேவனுடைய கரம் அவரை அதிசயமாகப் பாதுகாத்துக் கொண்டது.

    பன்னியன் தனது வாழ் நாள் முழுவதும் தன் ஆண்டவருக்கு நன்றி ஸ்தோத்திரம் ஏறெடுத்துக் கொண்டே இருக்கத்தக்கதான ஒரு அசாதாரண சம்பவம் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. அப்பொழுது அவர் ராணுவத்தில் இருந்தார். ஒரு இடத்தை அவரது படைப் பிரிவு முற்றுகையிட வேண்டுமென்பது மேலிடத்துக் கட்டளை. அவர் அதற்கு ஆயத்தமாகி போக தயாராகிக் கொண்டிருந்த போது அவருடைய ஸ்தானத்தில் அவரது கூட்டாளி ஒருவன் அவருடைய சம்மதத்துடன் சென்று முற்றுகையிட்ட இடத்தில் காவலாளியாக நின்று கொண்டிருந்தான். அப்படி நின்று கொண்டிருந்த அவனது தலையை எதிரியின் நாட்டுத் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு ஒன்று துளைத்துச் சென்று விட்டது. அந்த இடத்திலேயே அவன் துடிதுடித்து மாண்டான். தான் துடிதுடித்துச் சாக வேண்டிய இடத்தில் தனது நண்பன் மடிந்ததை அவர் மிகுந்த கண்ணீரோடு நினைவு கூர்ந்தார். இவைகள் எல்லாம் நடைபெற்ற போதினும் பன்னியன் மனந்திரும்பாமல் இன்னும் தன்னைக் கடினப்படுத்திக் கொண்டும், தேவனுடைய கிருபைக்கும், இரக்கத்துக்கும், அன்புக்கும் எதிராக கலகம் பண்ணுகிறவராகவும் தனது இரட்சிப்பின் காரியத்தை குறித்து மிகவும் அசட்டை கொண்டவராகவே இருந்தார்.

எச்சரிப்புகள்

   ஜாண் பன்னியன் சிறு வயதிலிருந்தே பயங்கரமான கனவுகளைக் கண்டு வந்தார். ஆண்டவருடைய இரண்டாம் வருகை வருவதைப் போலவும், ஆயத்தமானோர் அவரால் எடுத்துக் கொள்ளப்படுவதையும், பாவத்தில் ஜீவிக்கும் அவர் தேவனால் கைவிடப்படுவதையும் கண்டு அலறுவார். அவரது பாவச்செயல்கள் அதிகரிக்க, அதிகரிக்க அவர் காண்கின்ற சொப்பனங்களும் அவரை கதிகலங்கப்பண்ணுவதாக இருந்தன. சாத்தானாம் பிசாசு அவரை சங்கிலிகளால் கட்டி நரக பாதாளத்தில் தள்ள அவனது கரங்களில் கொண்டு வந்த இரும்பு சங்கிலிகளின் சலசலக்கும் ஓசையைக் கேட்டு ஒரு சொப்பனத்தில் அவர் வேர்த்து வியர்த்து நடுநடுங்கி திகைத்து எழும்பினார். தனது மற்றொரு சொப்பனத்தில் அடித்தளமே காணப்படாததான நரக தீச்சூளை தனக்கு முன்பாக திறந்திருப்பதைப் பார்த்து ஓலமிட்டுப் புலம்பினார்.

    தான் மனந்திரும்ப வழி வகுத்துக் கொடுத்த ஒரு சம்பவத்தை ஜாண் பன்னியனே தமது சொந்த வார்த்தைகளால் நமக்கு விளக்குகின்றார். "கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டியதன் அவசியத்தை அன்று குருவானவர் ஆலயத்தில் அத்தனை கண்டிப்பாகப் பேசினார். அந்த நாளில் வேலை செய்வதோ, விளையாடுவதோ மற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பொழுதைப் போக்குவதோ கண்டிப்பாகக் கூடாது என்று திட்டமும் தெளிவுமாகக் கூறினார். அவரது தேவச் செய்தி என் உள்ளத்தை தொட்டது. எனது பாவ குற்றங்களை உணர்ந்து இனிமேல் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு வீட்டுக்கு வந்த நான் நன்றாக சாப்பிட்டுவிட்டு உணர்வற்ற மிருகம் போல "டிப்-காட்" விளையாட்டு விளையாட தெருவுக்குச் சென்று தீவிரமாக எனது ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தேன்.

    எனக்கு முன்னால் தரையில் கீழே கிடந்த இருபுறமும் கூர்மையான குச்சியை எனது கரத்திலிருந்த கடினமான சிறிய கட்டை கம்பால் ஒரு தடவை அடித்து மேலே எழும்பிய அந்தக் குச்சியை அடுத்த அடியால் வெகு தொலைவுக்கு செலுத்த முயன்ற போது "உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு மோட்சம் செல்லுவாயா? அல்லது பாவங்களைச் செய்து நரக பாதாளம் செல்லப் போகின்றாயா?" என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் கூர்மையான அம்பைப்போல எனது இருதயத்தை ஊடுருவிச் சென்றது. என்னோடு பேசிய ஆண்டவரின் பரலோக வார்த்தைiயால் நான் தாக்குண்டு இனி பாவத்தில் நீடித்தால் அழிவே நமது பங்காகிவிடும் என்ற பயத்தால் இரட்சிப்பை தேட ஆரம்பித்தேன்" என்கின்றார் ஜாண் பன்னியன்.

   ஜாண் பன்னியன் ஒரு தேவ பக்தியுள்ள ஏழை மனிதரின் மகளை திருமணம் செய்தார். அந்தப் பெண்மணி தன்னுடன் சீதனமாக கொண்டு வந்த பொருட்கள் ஒரு சாப்பிடும் தட்டும் ஒரு கரண்டியுமாகும். அத்துடன் அந்த பக்தியான பெண் இரண்டு அருமையான கிறிஸ்தவ ஆவிக்குரிய புத்தகங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். "பக்தி வாழ்வை அப்பியாசித்தல்" "மனிதனை பரலோகத்துக்கு அழைத்துச் செல்லும் பாதை" என்ற அந்த இரண்டு புத்தகங்களும் பாவத்தில் ஜீவித்த பன்னியனை பக்தி வாழ்வுக்கு அடி எடுத்து வைக்க பெரிதும் கை கொடுத்து உதவின. எனினும் இந்தப் புத்தகங்கள் மாத்திரம்தான் அவரை இரட்சிப்புக்குள் வழிநடத்தினது என்று நாம் சொல்ல இயலாது.

    ஜாண் பன்னியனை ஆண்டவருடைய இரட்சிப்பின் நிச்சயத்துக்குள்ளும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்துக்குள்ளும் வழிநடத்தியவர் பெட்ஃபோர்ட் நகரத்துப் பரிசுத்த குருவானவர் ஜாண் கிஃபோர்ட் என்பவராவார். ஜாண் கிஃபோர்ட் தனது வாழ்க்கையை ஒரு போர் வீரனாக ஆரம்பித்தார். வாழ்வில் அவர் துஷ்டனும், துன்மார்க்கனும், சூதாட்டக்காரனும், ஊறிப்போன குடிகாரனுமாக இருந்தார். ஊதாரித்தனமாக வாழ்ந்த அவருடைய வாயிலிருந்து கடல் மடை திறந்தது போல ஆணையிடுதல்கள் அவலட்சணமான தூஷண வார்த்தைகளோடு புறப்பட்டு வரும் என்று அவரை அறிந்தவரான ராபர்ட் சவுதே என்பவர் கூறுகின்றார். அவர் தான் வாழ்ந்த பெட்ஃபோர்ட் பட்டணத்திலுள்ள பியூரிட்டான்கள் (Puritans) என்று அழைக்கப்பட்ட புராட்டஸ்டண்ட் பக்தர்களை இம்சிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர்களின் தலைவனான அன்றோணி ஹாரிங்டன் என்பவரை கொலை செய்ய அவர் வெகுவாக முயற்சித்தார் தெய்வாதீனமாக அந்த பக்தன் கர்த்தரால் காக்கப்பட்டார்.

    இங்கிலாந்தில் உள் நாட்டுப்போர் நடந்த சமயம் ஜாண் ஹிஃபோர்ட் அரசருடைய படையில் சேர்ந்திருந்தார். மன்னருக்கெதிரான படையின் தளபதி ஒருவன் ஜாணை எதிர்பாராதவிதமாக கைது செய்து அவருடன் சேர்ந்த சிலரையும் அடுத்த நாள் தூக்கிலிட்டு கொல்ல பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்திருந்தான். அதைக் கேள்விப்பட்ட ஜாண் ஹிஃபோர்டின் உடன் பிறந்த சகோதரி தனது உயிரையும் துச்சமாக மதித்து அவர் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நள்ளிரவு நேரம் சென்றார். தனது சகோதரனை பாதுகாத்துக் கொண்டிருந்த காவலர்கள் நன்கு மதுபானம் குடித்து மயங்கிக்கிடந்த அந்த நேரத்தில் அவரை ஓசைப்படாமல் அழைத்து வந்து விட்டார். அடுத்து வந்த 3 நாட்கள் ஜாண் ஹிஃபோர்ட் தனது உயிரைக் பாதுகாத்துக் கொள்ள ஆழமான ஒரு நாற்ற சாக்கடைத் தண்ணீருக்குள் மூழ்கி இருந்து கொள்ள வேண்டியதானது. ஆண்டவரின் பாதுகாவலின் கரங்கள் நிச்சயமாக அவரோடு இருந்தபடியால் தான் சந்திக்க வேண்டிய முழு நிச்சயமான மரண தண்டனையிலிருந்து ஆச்சரியமாகவும், அற்புதமாகவும் தப்பிக் கொண்டார்.

    அதின் பின்னர் ஜாண் ஹிஃபோர்ட் என்பவர் ராபர்ட் போல்ற்றன் என்ற பரிசுத்தவான் எழுதிய ஒரு பக்தியுள்ள புத்தகத்தை வாசித்து ஆழமான மனந்திரும்புதலுக்குள் கடந்து வந்தார். அதின் பின்னர் அநேகரை நீதிக்குட்படுத்தும் பரிசுத்த குருவானவராக பெட்ஃபோர்ட் பட்டணத்து தேவாலயத்தில் பணி புரிந்தார். இரட்சிப்பைக் கண்டடையும் விஷயத்தில் நிலைதடுமாறிக் கொண்டிருந்த அவரை சில தேவ பிள்ளைகள் தங்கள் குருவானவராகிய ஜாண் ஹிஃபோர்ட்டிடம் அழைத்து வந்து இரட்சிப்பின் வழியையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் கண்டு கொள்ள வகை செய்தனர்.

   கர்த்தருடைய இரட்சிப்பைக் கண்டடைந்த ஜாண் பன்னியனை தேவன் தமது வல்லமையான பாத்திரமாக ஆரம்பம் முதலே பயன்படுத்த தொடங்கினார். "ஜாண் பன்னியன் நல்ல உயரமான மனிதர். அவரது தலை முடி செந்நிறமாகவும், அவரது கண்கள் பளிச்சிட்டு மின்னுவதாகவும் இருக்கும். அவரது நெற்றி உயரமானதாகவும், அவரது முகப்பார்வை உறுதியானதும், கோபம் கொண்டோனைப்போல காணப்படுவதாயினும் அவர் பேசத் தொடங்கிவிட்டால் அவரில் அன்பும், தாழ்மையும், எளிமையும் பாய்ந்தோட ஆரம்பித்து விடும். பிரசங்க பீடத்தில் நின்று பன்னியன் பிரசங்கிக்கும்போது அவரது தேவச் செய்தியும் பாவனைகளும் மிகுந்த பக்தி வினயமாக இருக்கும். "தேவனுக்குப் பயப்படாமல் தங்கள் பாவங்களில் வாழ்வோருக்கு அவரது தேவச் செய்தி பயங்கரமான மின்னல் தாக்குதல் போல அத்தனை எச்சரிக்கையாக இருக்கும்" என்று அவரது நண்பர்களில் ஒருவர் கூறினார்.

வல்லமையான பிரசங்கியார்

    "சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தை பிரசங்கம் பண்ணு" (2 தீமோ 4 : 2)

    ஜாண் பன்னியன், ஒரு வேதாகம ஆசிரியரும், பிரசங்கியாருமாவார். ஆனால், அது அவருக்கே தெரியாது. அவர் எந்த ஒரு வேதாகம கல்லூரிக்கும் சென்று திருமறை பயின்றவர் அல்ல. அவர் தேவ வல்லமையால் நிறைந்திருப்பதை அவருடைய தேவச் செய்திகளைக் கேட்ட மக்கள் அவரில் கண்டு அவருக்குத் தெரிவித்தனர். நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படியாக தேவனுடைய வார்த்தைகளை ஜாண் பன்னியனைப் போன்று ஆராய்ந்து தியானித்தோர் மிகவும் சொற்பமான பேர்களே உண்டு. அவர் தனது முயற்சிகளில் கிட்டத்தட்ட நம்பிக்கையிழந்து போகும் கடைசி கட்டம் வரை செல்ல வேண்டியதானது. எரிகின்ற தீச்சூழையின் அக்கினி ஏழு மடங்கு ஜூவாலித்து எரியவும், அதின் ஊடாக தேவன் அவரை கடந்து செல்லவும் பண்ணினார். அந்த அக்கினியின் ஊடாக தேவ குமாரனை அவர் கண்டு கொள்ளும் வரை கர்த்தர் அவரை அழைத்துச் சென்றார். இறுதியில் அவரது கண்களிலிருந்து செதில்கள் விழுந்தன. ஜாண் பன்னியன் தனது ஆண்டவர் இயேசுவைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

    இயேசுவை அறிந்து அவருடன் ஐக்கியம் கொண்டிருந்த பெட்போர்ட்டிலுள்ள கிறிஸ்தவ தேவ மக்கள் ஜாண்பன்னியன் மனந்திரும்பிய சாதாரண ஒரு விசுவாசி அல்ல என்றும் வெறுமனே தண்ணீரில் முழ்கி மட்டும் அவர் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டவரல்ல என்றும் பெந்தெகோஸ்தே நாளின் அக்கினி அவரில் அமர்ந்திருப்பதையும் அவர்கள் திட்டமாகக் கண்டு கொண்டார்கள்.

    தனது பாதங்களண்டை பக்தி வினயத்தோடு அமர்ந்து தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க மிகவும் வாஞ்சை கொண்ட மக்களுக்கே மிகவும் மனத்தாழ்மையுடன் ஜாண் பன்னியன் கர்த்தருடைய வார்த்தைகளை விளக்கிக்கூறுவார். அதைச் செய்ய விரும்பும் மக்கள் ஜாண் பன்னியனை முதலாவது மிகவும் வேண்டி விரும்பி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். பெருங்கூட்டங்களில் தேவனுடைய செய்தியைக் கொடுப்பதை விட சொற்பமாகக் கூடி வரும் சிறு சிறு கூட்டங்களில் பேசவே அவர் அதிமாக விரும்புவார். எனினும், இரண்டு பெரிய தேவாராதனைக் கூட்டங்களில் அவர் ஒழுங்காகப் பேசி வந்தார். அவருடைய பிரசங்கங்களைக் கேட்ட மக்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு நன்றி கூறி அவரைத் துதித்து மகிமைப்படுத்தினார்கள்.

   எந்த ஒரு தீர்க்கத்தரிசிக்கும் அவனது சொந்த ஊரில் கனம் இல்லை என்பதை அறிந்திருந்த காரணத்தினாலோ என்னவோ ஜாண் பன்னியன் தனது சொந்த இடங்களான எல்ஸ்டவ் மற்றும் பெட்போர்ட் இடங்களில் பிரசங்கித்ததாகத் தெரியவில்லை. உண்மையில், அவர் அந்த இடங்களில் பிரசங்கித்ததற்கான எந்த ஒரு சரித்திர சான்றுகளே இல்லாதிருக்கின்றது. ஆனால், சுற்றியுள்ள பல இடங்களிலும் அவர் பிரசங்கித்து திரளான மக்களை கர்த்தரண்டை வழிநடத்தினார். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க மக்கள் அந்த நாட்களில் சமீபத்திலும், தூரத்திலுமாக இருந்து வந்து நூற்றுக்கணக்கில் திரண்டனர். "மனுமக்களின் பாவங்களுக்கு எதிராகவும், அந்தப் பாவங்களின் காரணமாக அவர்கள் சந்திக்கப் போகும் பயங்கரமான நித்திய நியாயத் தீர்ப்பினை நினைத்தவனாகவும் நான் இரண்டு வருடங்கள் அழுது கொண்டே சுற்றித் திரிந்து சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தேன்" என்று பன்னியன் ஒரு தடவை கூறினார்.

    "நான் பிரசங்கிக்கும்போது என் இருதயம் அடிக்கடி தேவனே, உம்முடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் உம்முடைய ஜனங்கள் ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுவார்களாக என்று தனக்குள்ளாக கதறிக் கூக்குரலிடும்" என்று அவர் சொல்லியிருக்கின்றார்.

    தேவன் அவருடைய ஊழியத்தை ஆசீர்வதித்து தம்முடைய தாசனை தேவனுடைய வசனங்களைக் குறித்த ஆழமான அனுபவங்களுக்குள் வழிநடத்திச் சென்றார். பரிசுத்த ஆவியானவர் தனக்கு எதைப் போதித்தாரோ அதையே அவர் தேவனுடைய ஜனங்களுக்குப் பிரசங்கித்தார். மக்களுக்கு தேவனுடைய செய்தியைப் பிரசங்கிக்கும்போது மெய்யாகவே ஒரு தேவ தூதன் தன்னருகில் நின்றுகொண்டு தன்னைப் பெலப்படுத்தி, தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதை தான் நன்றாக உணர்ந்து கொள்ள முடிவதாக அவர் ஆச்சரியத்துடன் சொல்லுவார். தனது பிரசங்கங்களில் தான் பேசிய சத்தியங்களைக் குறித்து தான் நம்புவதாகவோ அல்லது விசுவாசிப்பதாகவோ அல்லது இப்படித்தான் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டுச் சொல்லாமல் தான் கொடுத்த சத்தியம் மெய்யான தேவ சத்தியமே என்று உறுதியிட்டுப் பேசுவார்.

    மக்களுக்கு தான் பிரசங்கிக்கப்போகும் பிரசங்கங்களை முன் கூட்டியே எழுதி ஆயத்தம் செய்து அதை மிகவும் கவனமாக வாசித்துக் கொள்ளுவார். எந்த ஒரு நிலையிலும் ஆயத்தமில்லாமல் அவர் பிரசங்க பீடம் ஏறமாட்டார். பிரசங்கத்திற்கான குறிப்புகள் அவர் கை வசம் இருக்கும். தனது பிரசங்கங்களில் அரசியல் சம்பந்தமான எந்த ஒரு விஷயத்தையும் அவர் குறிப்பிடுவதில்லை. "தனது பிரசங்கங்களின் குறிப்புகளை எல்லாம் யாராவது விரும்பிக் கேட்கும் பட்சத்தில் அவைகளைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவைகள் எல்லாம் ஆத்துமாக்களின் இரட்சிப்பையே மையமாகக் கொண்டிருப்பதை அவர்கள் காண முடியும்" என்று அவர் ஒரு தடவை சவால்விட்டுப் பேசினார்.

    பன்னியன், தான் மக்களுக்கு பிரசங்கிக்கும் தேவச் செய்திகளை பிரசங்கம் செய்து முடிந்ததும் பத்திரமாக எழுதி வைத்துக் கொள்ளும் சிறந்த பழக்கத்தை தன் வசம் வைத்திருந்தார். அதின் காரணமாக, அவருடைய எழுத்துக்கள் புத்தகங்களாக அச்சிடப்பட்டு நமக்குக் கிடைத்திருக்கின்றன. "நஷ்டப்பட்ட பாவியின் துயரப் புலம்பல்கள்" என்ற நரகத்திலிருந்து ஐசுவரியவான் எழுப்பிய வியாகுலங்களை ஐசுவரியவான்-லாசரு சரித்திரத்திலிருந்து (லூக்கா 16 ஆம் அதிகாரம்) அதை வாசிக்கும் எவரும் நடுநடுங்கும் விதத்தில் பிரமிக்கத்தக்கவிதத்தில் எழுதியிருக்கின்றார். அப்படி அவர் எழுதிய புத்தகங்கள் அநேகமாகும். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

   ஜாண் பன்னியன் விரும்பியிருப்பாரானால் இங்கிலாந்து தேசத்திலேயே ஒரு புகழ்பெற்ற பிரசங்கியாராக ஆகியிருக்கலாம். அவரை வந்து பேசும்படியாக இங்கிலாந்தின் பெரிய பெரிய பட்டணங்களிலிருந்தெல்லாம் அவருக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் தேவ மனிதர் அவைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டத்திற்கு வந்து பேசுவதற்கு முன்னால் அதற்கான பணத்தை திட்டமாகப் பேசிச் செல்லும் பிரசங்கியார்களைப்போல இல்லாமல் அப்படிப்பட்ட கூட்டங்களில் சென்று பேசுவதனால் தனக்கு அதிகமான பணம் கிடைக்கும் என்றும் அதினால் தனது தற்போதைய எளிய நிலை போய் ஐசுவரியவானாக உயர்ந்துவிடும் என்றும் அதின் மூலம் தான் பெற்ற தேவனுடைய அளவற்ற கிருபையை இழக்க நேரிடும் என்று அஞ்சி அப்படிப்பட்ட பெருங்கூட்ட அழைப்புகளை எல்லாம் அவர் திட்டமாக மறுத்து உதறித் தள்ளினார்.

    உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் அந்த நாட்களில் துணை வேந்தராக (Vice-Chancellor) இருந்த மா மேதையும், ஒப்பற்ற ஞானவானும் சிறந்த தேவ பக்தனுமான ஜாண் ஓவன் என்பவரிடம் அந்நாட்களில் இங்கிலாந்து தேசத்தை அரசாண்டு கொண்டிருந்த 2 ஆம் சார்லஸ் மன்னர் ஒருசமயம் "ஜாண் பன்னியனுடைய பிரசங்கங்களைக் கேட்க நீங்கள் அடிக்கடி ஏன் செல்லுகின்றீர்கள்?" என்று கேட்டபோது "பெட்போர்ட் தகரக்காரர் ஜாண் பன்னியனைப்போன்று கிறிஸ்து இரட்சகரைப் பிரசங்கிக்கும் திறமையை அவர் என்னிடம் பண்டமாற்று செய்து கொள்ள முடியுமானால், எனக்குள்ள அனைத்து கல்வி ஞானங்களையும், தாலந்துகளையும் நான் அவருக்கு மிகவும் சந்தோசத்துடன் கையளிக்க ஆவலாக இருக்கின்றேன்" என்று மன்னர் வியப்பில் ஆழ்ந்து போகும் வண்ணம் சொன்னார்.

சிறை வாழ்க்கை

    ஜாண் பன்னியனின் 60 ஆண்டு கால பூலோக வாழ்க்கையில் முழுமையான 12 ஆண்டு காலத்தை அவர் தனது கர்த்தருக்காக சிறைக்கூடத்திலேயே செலவிட வேண்டியதாகவிருந்தது. அப்படி 12 ஆண்டு கால சிறைவாசத்தை அனுபவிக்க அவர் எத்தனையானதொரு கொலை பாதகச் செயலைச் செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இல்லவே இல்லை, தேவனுடைய இரட்சிப்பின் மாட்சிமையான சுவிசேஷ சத்தியத்தை அவர் அந்த நாட்களில் இங்கிலாந்து தேச புராட்டஸ்டண்ட் சபையின் தேவாலயங்களில் பிரசங்கிக்க தடை செய்யப்பட்டபடியால் தெருக்களிலும், சந்தை வெளிகளிலும், புல் மைதானங்களிலும், பண்ணை வீடுகளின் தானிய சேமிப்பு கிடங்குகளிலும், மக்கள் கூட்டம் எங்கெங்கெல்லாம் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று மக்களுக்கு பிரசங்கித்தபடியாலும், இங்கிலாந்து தேச திருச்சபையினர் தங்கள் தேவாலயங்களில் பயன்படுத்தும் "பொதுவான ஜெப புத்தகத்தை"(Common Prayer Book) அவர் ஏற்றுக் கொள்ளாததாலும், அதை பயன்படுத்த மறுத்ததாலும் அந்த நீண்ட சிறை வாழ்க்கை அவருக்குக் கிடைத்தது.

    17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தின் சிறைக்கூடங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவர் அடையுண்டு கிடந்த பெட்போர்ட் சிறைக்கூடத்தில் குளிர் காய எந்த ஒரு கணப்பு அடுப்புகளும் இல்லாதிருந்தது. சிறைக் கைதிகள் தரையில் போடப்பட்டிருந்த வைக்கோற் புல்லில் படுத்திருந்தனர். கழிப்பிட வசதிகளைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அவர் அந்த இருளான சிறைக்கூடத்தில் பட்ட பாடுகளையும், துயரங்களையும் அதிகமாகப் பொருட்படுத்தாமல் தனது வீட்டில் இருந்த தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பற்றித்தான் குறிப்பாக தனது கண் குருடான சின்ன மகள் மேரியை எண்ணிக் கலங்கினார். அவர் அடையுண்டிருந்த சிறைக்கூட காவலனுக்கு பணம் கொடுப்பதன் மூலமாக சில சிறிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்த விசயத்தில் பெட்போர்ட்டிலுள்ள ஜாண் பன்னியனை அறிந்த அவரது அன்பான விசுவாச நண்பர்களும், தேவ மக்களும் அடிக்கடி அவருக்கு உதவி செய்தனர். அதின் காரணமாக அவர் தனது சிறைக்கூட அறையை விட்டுவிட்டு அவ்வப்போது தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்க பெட்போர்ட்டை சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று வந்தார். ஒரு தடவை தேவ தயவால் அவர் லண்டன் பட்டணம் வரை கூட போய் வந்தார். ஆனால் இவை எல்லாவற்றிலும் தேவனுடைய பாதுகாவலின் கரம் அவருடன் கூட இருந்தது என்பதை நாம் மறப்பதற்கில்லை.

    ஒரு நாள் இரவில் அவர் தனது மனைவி பிள்ளைகளை பார்ப்பதற்காக சிறைக்கூட காவலரால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீடு சென்ற ஜாண் பன்னியன் குடும்பத்தினருடன் ஓரிரு மணி நேரங்கள் இருந்த பின்னர் கர்த்தருடைய ஆவியானவர் அவரை உடனடியாக சிறைக்கூடத்திற்கு திரும்பிச் செல்ல ஏவினார். ஆவியானவரின் தூண்டுதலை உணர்ந்த அவர் மிக விரைவாக தனது சிறைக்கூட அறைக்கே திரும்பி வந்து விட்டார். அவர் வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள்ளாக அவரது எதிரிகளான இங்கிலாந்து தேச மன்னரின் ஆட்கள் பட்டணத்தின் உயர்ந்த காவல் துறை அதிகாரிகளுடன் சிறைக்கூடத்திற்கு வந்துவிட்டனர். ஜாண்பன்னியன் சிறையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்த அவர்கள் தாங்களாகவே நேரில் சென்று அங்கு அவர் இருப்பதைக் கண்டு திருப்தியுடன் சென்றனர்.

    அந்த இரவு முழுவதுமே ஜாண் பன்னியனை அவருடைய வீட்டில் இருந்துவிட்டு அடுத்த நாள் காலையில்தான் வருவதற்கு சிறைக்காவலர் கேட்டிருந்தார். ஆனால், தேவ நடத்துதல் அவரை உடனே திரும்பி வரச் செய்ததால் பெரிய தண்டனையிலிருந்து அவர் தப்பிக் கொள்ள முடிந்தது. தனக்கு விரோதமாக இங்கிலாந்து தேச மன்னரே இருப்பதை உணர்ந்த பன்னியன் எப்படியாவது ஒரு நாள் தனக்கு நிச்சயமாகத் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்பதை எதிர்நோக்கியிருந்தார். ஆனால், தேவன் அவரை தூக்குத் தண்டனையிலிலிருந்து காத்துக் கொண்டார். சிறைக்கூடத்தில் இருக்கும்போது அவர் தனது கரிய நிழல் உருவத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன்னை துரிதமாகச் சந்திக்கப் போகும் மரணமே அது என்று எண்ணிக் கொண்டிருந்ததாக எழுதியிருக்கின்றார்.

    பெட்போர்ட் சிறைக்கூடத்திலிருந்த பன்னியனுக்கு கர்த்தருடைய பரிசுத்த வேதாகமமும், ஜாண் ஃபாக்ஸ் என்ற பரிசுத்த பக்தன் எழுதிய "இரத்த சாட்சிகளின் வரலாறு" என்ற புத்தகமும், மார்ட்டின் லூத்தர் எழுதிய வேத வியாக்கியான புத்தகமும் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தன. தனது சிறைவாச காலத்தின் பெரும் பகுதியை அவைகளை வாசிப்பதிலேயே அவர் செலவிட்டார். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை அவர் எத்தனை தடவைகள் முழுமையாக வாசித்திருப்பார் என்பதைப் பற்றிய தகவல்கள் நமக்கு இல்லாத போதினும் அந்த தேவ மனிதர் அதை பல நூறு தடவைகள் வாசித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவ உலகம் போற்றும் "மோட்ச பிரயாணம்" என்ற பரிசுத்த பிரபந்தத்தை இந்த பெட்போர்ட் சிறைக்கூடத்தில் வைத்துத்தான் ஜாண் பன்னியன் எழுதினார்.

    வேதாகமத்தைப் போன்றே மோட்ச பிரயாணமும் உலகத்தின் அநேக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதின் ஒரே காரணம், மோட்ச பிரயாண புத்தகம் முழுமையும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. மோட்ச பிரயாண புத்தகத்தை வாசிப்போர் பரிசுத்த வேதாகமத்தின் நறுமணம் அதின் ஒவ்வொரு பக்கங்களிலும் வாசனை வீசிக்கொண்டிருப்பதை கண்டு கொள்ளலாம். ஜாண் பன்னியன் உயிரோடிருந்த காலத்திலேயே அது பல தடவைகள் அச்சுப் பதுப்பிக்கப்பட்டதுடன் அநேக ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

    ராட்சத தேவ மனிதரும், பிரசங்க வேந்தனுமான சார்லஸ் ஸ்பர்ஜன் என்பவர் மோட்ச பிரயாணத்தை 100 தடவைகள் முழுமையாக வாசித்து கர்த்தருக்குள் ஆனந்தித்திருக்கின்றார் என்றால் நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! அந்த பக்த சிரோன்மணி அதைக் குறித்துக் கூறும்போது நீங்கள் "மோட்சப் பிரயாணம்" புத்தகத்தில் எந்த இடத்தில் ஊசியால் குத்தினாலும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை என்ற Bibiline அதிலிருந்து சுரந்து வருவதை நீங்கள் காணலாம் என்று கூறினார்.

    "பன்றியானது எவ்வளவுக்கு எவ்வளவு கொழுப்பாய் இருக்கிறதோ அவ்வளவுக்கு அது சேற்றை நாடுகிறது. எருது எவ்வளவுக்குக் கொழுத்திருக்கிறதோ அவ்வளவுக்கு அது கும்மாளம் போட்டுக் கொண்டு கொலைக் களம் போகிறது. சிற்றின்பப் பிரியன் எவ்வளவுக்கு சுக ஜீவியாக இருக்கிறானோ அவ்வளவுக்கு அவன் தீமையின் மேல் நாட்டங் கொள்ளுகிறான். பட்டு கட்டிப் பகட்டாய்த் திரிய வேண்டும் என்று பெண்கள் பெரும்பாலும் ஆசைப்படுகிறார்கள். தேவனுடைய பார்வைக்கு மதிப்பைக் கொடுக்கும் இலட்சண அலங்காரமே பெண் அலங்காரம். ஒரு வருஷ முழுவதிலும் ஓய்வில்லாமல் விழித்திருப்பதிலும் ஒரு இரவு கண் விழித்திருப்பது லேசான காரியம். அப்படியே மோட்ச பாக்கியம் பெறும்படி முடிவுபரியந்தம் பக்தியை விடாதிருப்பதிலும் ஆரம்பத்தில் கொஞ்ச காலம் பக்தியாய் இருப்பது இலகுவான காரியமாகும்.

    எந்த மாலுமியும் கடலில் கடும் புயல் அடிக்கையில் அற்ப பிரயோஜனமுள்ள பொருட்களை மனதார கடலில் எறிகிறது உண்டு. ஆனால் முதல் தரமான விலையேறப்பெற்ற பொருட்களை முதலில் எவன்தான் கடலில் எறிவான்? தேவனுக்குப் பயப்படாதவனே அல்லாமல் வேறெவனும் அப்படிச் செய்யான். ஒரு சிறிய பொத்தல் (துவாரம்) பெருங்கப்பலையும் ஆழ்த்திப் போடும். ஒரு சிறிய பாவம் பாவியை நிர்மூலமாக்கிவிடும். சிநேகிதனை மறக்கிறவன் நன்றிகேடன், ஆனால் தன் இரட்சகரை மறக்கிறவனோ தன்னை நாசமாக்குகிறான். பாவத்திலே ஜீவித்துக் கொண்டு பரலோக பாக்கியம் பெற்றுக் கொள்ளுவேன் என்று எதிர் நோக்குகிறவன் முட்பூண்டுகளை விதைத்து நவதானியங்களைக் களத்தில் சேர்ப்பேன் என்று நினைக்கிறவனுக்கு ஒப்பாய் இருக்கிறான். ஒருவன் மோட்ச பாக்கிய வாழ்வைப் பெற வேண்டுமானால் அவன் தன் மரண நாளை தன் நினைவில் கொண்டு அதை ஒரு ஊன்றுகோலைப் போல பயன்படுத்தி வர வேண்டும்" (மோட்ச பிரயாண புத்தகத்தில் ஜாண் பன்னியன் எழுதிய வரிகள்)

பிறப்பு: கி.பி: 1628

இறப்பு: கி.பி: 1688

Posted in Missionary Biography on December 23 at 06:57 AM

Comments (0)

No login
gif