ஹட்சன் டெய்லர்
சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான். அவர் அவனுக்கு பல காரியங்களைப் பற்றி விவரித்து வந்தார். இச்சமயத்தில் அவர்களுடைய பேச்சு சீன நாட்டைப்பற்றியதாக இருந்தது.
உலகின் பல பாகங்களில் புதிய மிஷனெரி இயக்கங்கள் உருவாகி செயல்பட்டு வந்தன. ஆனால் சீன தேசத்திற்கான மிஷனெரி திட்டங்கள் ஒன்றும் உருவாகி செயல்படவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மரித்துப்போன கடைசி சீன மிஷனெரிக்குப் பிறகு ஒரு மிஷனெரியையும் அனுப்ப முயற்சிகள் எடுக்கப்படவில்லை. நான்கு அல்லது ஐந்து வயது நிரம்பிய ஹட்சன் இதைக் கேள்விப்பட்டபோது “நான் வாலிபனாகும்போது மிஷனெரியாக சீனாவுக்குச் செல்லுவேன்” என்றான்.
ஆரம்ப பருவம்
இங்கிலாந்து தேசத்தில் 1832 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் ஹட்சன் டெய்லர் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிறந்த கிறிஸ்தவர்கள். அதிக மெலிவான தோற்றமும் பெலவீன சரீரமும் உடைய இவன், கல்வி கற்க அனுப்பப்பட்டான். இரண்டாண்டுகள் கல்வி பெற்றபின் 14 வயதில் அவனுக்கு எபிரெய மொழியின் எழுத்துக்களை அவன் தகப்பன் போதித்தார். சிறு வயதிலேயே உலகின் அருட்பணி தேவையை உணர்ந்தான்.
மனந்திரும்புதலும் அழைப்பும்
சிறு பிராயம் முதல் ஹட்சன் ஆவிக்குரிய வாழ்க்கையின் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டான். அவன் 14 வயதாய் இருக்கும்போது, ஒரு ஞாயிறு மாலையில் கைப்பிரதி ஒன்றை வாசித்தான். அதன் தலைப்பு “எல்லாம் முடிந்தது” என்பதாகும். அதை வாசித்தபோது அவனுக்குள் பாவ உணர்வு வந்தது. இரட்சிப்பின் தேவையையும் உணர்ந்தான். அந்த நேரமே கிறிஸ்து இயேசுவைத் தன் சொந்த ஆத்தும மீட்பராக ஏற்றுக் கொண்டான். அவனுடைய தாயார் வெளியூர் சென்று திரும்பியதும் தன் மீட்பின் அனுபவத்தைக் கூறினான். அவள் தன் மகனிடம் இந்த நிகழ்ச்சி அவளுக்கு முன்பே தெரியும் என்றாள். ஹட்சன் மிக ஆச்சரியத்துடன் தன் தாயைப் பார்த்து, “எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது” என்றான். அவள் 70, 80 மைல்களுக்கப்பால் இருந்தபோது அவளுடைய உள்ளத்தில் மகனைப் பற்றிய மனபாரம் ஏற்பட்டது.
ஹட்சன் மனம் திரும்பிய அதே நாளில் அவனுடைய தாயும் ஹட்சன் இரட்சிக்கப்பட வேண்டுமென்று ஊக்கமாய் ஜெபித்தார். தன் மகனை கர்த்தர் முழுவதுமாக மீட்டுக்கொண்டார் என்ற நிச்சயம் தனக்குள் ஏற்படும்வரை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தார். பின் தன் மகனைக் கர்த்தர் இரட்சித்ததற்காக நன்றி செலுத்தி ஸ்தோத்திரம் செய்தார்.
ஒரு நாள் பிற்பகலில் ஹட்சன் தன் வேதாகமத்தை வாசித்து படுக்கையருகே முழங்காலில் நின்றுகொண்டிருந்தார். வரும்காலத்தில் தேவன் தம்மை பயன்படுத்த கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து, “ஆண்டவரே நான் என்னவிதமான பணியை, எங்கு செய்யவேண்டுமென்று எனக்குத் திட்டமாய் தெரிவியும். நீர் எனக்குச் சொல்லும்வரை இந்த அறையிலிருந்து வெளியேற மாட்டேன்” என்று முழங்காலில் இருந்த வண்ணமாக மன்றாடினார். “எனக்காக சீன தேசத்திற்குப்போ” என்று தேவன் தன்னோடு பேசுவதைத் திட்டவட்டமாய்க் கேட்டார். அன்றிலிருந்து அவர் மனம் சீன நாட்டின் பணியின்மேல் நிலைத்து நின்றது. தேவ அழைப்பைப் பெற்ற ஹட்சன் டெய்லர் பிற்காலத்தில் அந்த அழைப்பைப்பற்றி ஒரு போதும் சந்தேகித்ததில்லை. இந்நிகழ்ச்சி அவர் மறுபிறப்படைந்த சில மாதங்களில் நடைபெற்றது.
மிஷனெரி பணிக்கென்று ஆயத்தப்படுதல்
சீன தேசத்தில் திருப்பணி செய்வதற்கென்று தன்னை எல்லா விதங்களிலும் ஆயத்தம் செய்துகொள்ள முயன்றார். ஹட்சன் சீன தேசத்தைப்பற்றி அவருக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து வாசித்து வந்தார். ஆழமான ஆவிக்குரிய வாழ்க்கையை வாஞ்சித்து பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்காக ஜெபித்து தன்னை ஒப்படைத்தார். தேவனோடு இவ்வாறு ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டார். “தேவனே என்னை முழுவதுமாய் ஆட்கொண்டு ஆசீர்வதிப்பீரானால் உமக்காக எதையும் சாதிக்க முடியும். உமது சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, நீர் காட்டும் எதையும் நான் செய்வேன்” என்றார். தேவனும் அவருடைய இந்த ஜெபத்திற்குப் பதிலளித்து அவருடைய உடன்படிக்கையை உறுதி செய்தார்.
மிகுந்த பிரயாசத்துடன் லூக்கா எழுதின நற்செய்தி நூலை சீன மொழியில் கற்று புலமை பெற்றார். ஆசிரியர் உதவியில்லாமலேயே சீன மொழியைக் கற்றுக் கொண்டார். அவர் தன்னை மிகக் கட்டுப்பாடான ஒழுக்க வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார். கடின உழைப்பும் தேக அப்பியாசமும் செய்து வந்தார். வாழ்க்கை வசதிகளை உதறித்தள்ளி கிடைத்த தருணங்கள் எல்லாவற்றிலும் தனிமையாகவே வேலை செய்து பழகினார். அவருடைய தகப்பனாரின் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது, இலத்தீன், கிரேக்க மொழிகளையும் இறைநூல், மருத்துவம், ஆகியவற்றையும் கற்று தேர்ச்சி பெற்றார். பிற்காலத்தில் அவர் செய்யப்போகும் எல்லா பணிகளுக்காகவும் ஆயத்தம் செய்து கொண்டார். உலகின் மற்ற பாகங்களில் பணியாற்றும் மிஷனெரி இயக்கங்களோடு தொடர்பு கொண்டு அவை செயல்படும் முறைகளை அறிந்து தம் மனதில் பதித்துக்கொண்டார்.
“சீனர்களின் ஐக்கிய அமைப்பு” பிற்காலத்தில் சீன நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கும் கழகமாக மாறியது. அதைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டார்.
பத்தொன்பதாம் வயதில் மருத்துவத்தில் மேற்கொண்டு படிக்க இலண்டன் நகரம் போய்ச் சேர்ந்தார். இவ்விடத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் கட்டுப் பாடான கடின வாழ்க்கை முறையை மேற்கொண்டார். வறுமையும் வாழ்க்கைப் பிரச்சனைகளும், இவரைக் கிறிஸ்துவோடு நெருங்கி வாழும்படி செய்தது. தன்னலமற்ற வாழ்க்கையை மேற்கொண்டு தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பாகத்தைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுத்து விட்டார். அச்சமயத்தில் இலண்டனில் நீங்கள் அவரைச் சந்தித்திருப்பீர்களானால், கடவுள் எப்படி இவரை மிஷனெரி பணித்தளத்தில் பயன்படுத்த முடியும் என்று ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.
அந்நாட்களில் அவர் மெலிவான தோற்றமும், ஒதுங்கி வாழும் சுபாவமும் உடையவராய் இருந்தார். மனித எண்ணத்தின்படி, இவர் ஒரு முன்னோடியான மிஷனெரியாக மாற முடியும் என்பதற்கான தகுதி அவருக்கில்லை. ஆனால் கடவுளின் வாக்குறுதி “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு” என்பதற்கும் (பிலி: 4:13). கடவுள் ஹட்சன் டெய்லரைப் போன்ற மிக பெலவீன மனிதர்களையே தம்முடைய மகிமைக்காகத் தம்முடைய சித்தத்தில் பயன்படுத்துகிறார்.
இலண்டன் நகரில் ஹட்சன் இருந்த சமயம், வாலிப பிராயத்தில் அவருடைய விசுவாசம் பலமாய் சோதிக்கப்பட்டது. தினமும் பிரயாண கட்டணத்தைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. அதனால் மருத்துவமனைக்கும் தன் வீட்டிற்கும் நடந்தே போய் வந்தார். ஒவ்வொரு நாளும் எட்டு மைல் தூரம் நடக்க வேண்டியதிருக்கும். அவருடைய ஆகாரமும் மிகவும் அற்பமானது. ஒரே ரொட்டியை காலை மற்றும் மதிய உணவுக்கு வைத்துக் கொள்வார். ஒரு சமயம் விஷக்காய்ச்சலினால் மரித்துப் போன ஒருவனுடைய உடலைப் பரிசோதனை செய்யும்போது அவர் விரல்கள் மூலமாக விஷம் ஏறி வியாதிப்பட்டார். அநேகமாக மரிக்கும் நிலைமை அடைந்துவிட்டார். சீனதேசத்து சேவையெல்லாம் வெறும் கனவோ என்று எண்ணத்தோன்றியது. ஆனாலும் விசுவாசத்தில் உறுதியாயிருந்து பூரண சுகம் பெற்றார். இவ்வித அனுபவங்களின் மூலமாக அவருடைய விசுவாசம் அதிகமாய் பெலப்பட்டது.
சீன நாட்டில் பிரவேசித்தல்
1853 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஹட்சன் டெய்லர் சீனாவிற்குப் பிரயாணம் செய்ய கப்பல் ஏறினார். அவருடைய மூன்று நண்பர்கள் வழியனுப்ப, அவர் தரிசனமும் அழைப்பும் பெற்ற நாட்டிற்குப் பிரயாணப்பட்டார். “சீன நாட்டிற்கு நற்செய்தி கழகம்” என்ற ஸ்தாபனத்தின் வாயிலாக அனுப்பப்பட்டார்.
ஐந்தரை மாதங்கள் பிரயாணத்திற்குப்பின் இருபத்திரெண்டு வயதான இளம் வாலிபனான ஹட்சன், சீன தேசத்தில் ஷாங்காய் துறைமுகத்தில் வந்து இறங்கினார். அவருக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டின் கரையில் அவர் காலடி எடுத்து வைத்தபோது அவர் உள்ளம் பூரித்துப் போனார். சீனாவின் உள்நாட்டுப் பகுதியை, சுவிசேஷத்திற்கென்று ஊடுருவிச் செல்லப்போகிறவர் தானே என்று அப்போது அவருக்குத் தெரியாது.
சீன நாட்டில் அவர் கரையிறங்கியபோது அவரை வரவேற்க ஒருவரும் இல்லை. நண்பர்களும் யாரும் இல்லை. ஷாங்காய் நகரம் புரட்சியாளர்களின் ஆட்சியில் இருப்பது அவருக்கு அப்போதுதான் தெரிய வந்தது. உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்ததாகக் காணப்பட்டது. தனிமையில் வந்து சேர்ந்த வாலிப மிஷனெரிக்கு இவைகள் உற்சாகமூட்டக் கூடியதாக இல்லை. கடவுளின் பேரில் அவருக்கிருந்த விசுவாசமே, அவரைத் தாங்கிப்பிடித்தது.
சீனரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த இவர் மிகத் துடிப்பாய் இருந்தார். மிகக் குறைந்த மொழி அறிவைக் கொண்டே சீன மக்களைச் சந்திக்கவும், அவர்களுக்கு நற்செய்தி நூல்களையும், கைப்பிரதிகளையும் கொடுக்கும் படியாக திருப்பணியில் இறங்கினார். இவ்விதம் மக்களிடையே பழகியதால், பல புதிய சீன வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளவும் அதை உச்சரித்து இலகுவாகப் பேசவும் அவரால் முடிந்தது. முன்னோடியான மிஷனெரிகள் சென்றிராத அநேக பகுதிகளுக்கு இவர் சென்று ஊழியம் செய்தார். அப்படி உள்நாட்டுப் பிரயாணங்கள் அதிக ஆபத்தைக் கொண்டுவரும் நிலையில் அன்று மக்கள் புரட்சி நடத்தினார்கள்.
ஒருமுறை அவருடைய ஊழியத்தின்போது ஓர் உயரமான பலசாலி மனிதனிடம் சிக்கிக்கொண்டார். அவன் குடிவெறியில் இருந்தான். தலைமுடியைப்பிடித்து அவரை இழுத்து முரட்டுத்தனமாக அவரை நடத்தினான். அவரோ மயக்கமாகி விழும் நிலைமைக்கு வந்துவிட்டார். என்றாலும், ஹட்சன் தன்னை நிதானித்துக் கொண்டு இலக்கியப் புத்தகங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். தனக்கு மற்றொரு தருணம் கிடைக்காமல் போகலாம் என்பது அவர் எண்ணம். அவருடைய எதிரிகள் அவர் புத்தகங்களை விநியோகிப்பதைக் கண்டு அதிக கோபமுற்றனர். ஓர் அரசாங்க மிகுந்த மரியாதையாய் அவரை நடத்தி, ஒரு புதிய ஏற்பாட்டை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
ஹட்சனின் நினைவும் மனமும் உள்நாட்டுச் சீனர்களைப் போய் அடைவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தது. எண்ணிறந்த சீனமக்கள் உள்நாட்டில் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தப்படாத நிலையில் இருந்தனர். பவுல் அடியாரின் முன்மாதிரியின்படி “சிலரையாவது இரட்சிக்கும்படியாக நான் எல்லாருக்கும் எல்லாமுமானேன்” என்றபடி இவரும் சீன உடைகளை உடுத்தி, சீன வாழ்க்கை முறையை மேற்கொண்டார். இவர் சீனருடைய முறைகளைப் பின்பற்றியது ஐரோப்பியர்களுக்கும் மற்ற மிஷனரிகளுக்கும் பிடிக்கவில்லை. உள்நாட்டு சீன மக்களை ஆதாயப்படுத்த வேண்டுமானால், சீனர் முறைகளை அனுசரிப்பது சிறந்தது என்று ஹட்சன் அறிந்திருந்தார். அவ்விதம் அவர் அவர்கள் மத்தியில் உழைத்தது பலன் தந்தது. சில மாதங்களில் மனம் திரும்பிய முதல் ஆத்துமாவை ஆதாயப்படுத்திவிட்டார்.
பிரச்சனைகள் சூழ்ந்தும் அதைரியப்படவில்லை
டெய்லர் தன்னுடைய பணியில் அடிக்கடி சோர்வடைய சோதிக்கப்பட்டார். எதிர்காலம் அவருக்கு இருளாகவே இருந்தது. அதைக் குறித்து “என் பாதை சமமாகக் காணப்பட்டாலும் ஓர் அடி மாத்திரம் நடத்தப்பட்டேன். நான் இன்னும் கடவுளுடைய வெளிப்படுத்துதலுக்குக் காத்திருக்கவும் அவரை நம்பவும் வேண்டும். எல்லாம் நன்மையாகவே நடக்கும்” என்று எழுதியுள்ளார். அவரை அனுப்பிவைத்த மிஷனெரி இயக்கம் அக்கறையில்லாமல் இருந்துவிட்டது. பண உதவிகள் ஒழுங்காய் வந்து பணித்தளம் சேருவதில்லை. இவர் ட்சுங்கிங் நகரில் ஒரு மருத்துவப் பணித்தளத்தை நிறுவினார். அதன்மூலமாய் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களைச் சந்திக்கமுடிந்தது. பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள், அவரை உள்நாட்டிற்குள் செல்லாதபடி தடைவிதித்தனர். அப்படிச் செல்லுவாரானால் ஒரு பெரிய அபராதத் தொகையைக் கட்டவேண்டுமென்று கட்டளையிட்டனர்.
எதிர்பாராத சீன புரட்சி சம்பவங்கள், அவருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதே அதன் நோக்கம். ஹட்சன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதைவிட, உள்நாட்டு மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதே அவருக்குப் பிரதானமாய்க் காணப்பட்டது. அவருடைய மன உறுதியிலும் அவர் தளர்ந்துவிடவில்லை. பாதுகாப்பைக் காட்டிலும் மக்களைக் கிறிஸ்துவுக்குள் கொண்டுவருவது அவர் நோக்கம். அவருடைய ஒரே நண்பர் வில்லியம் பர்ண்ஸ் என்பவர் மரித்ததினால், அவருக்கு அதிர்ச்சியும் தாங்கமுடியாத துயரமும் ஏற்பட்டது. அவரும் இவரைப் போன்ற ஒரே நோக்கம் உடையவர். சீனர்களின் மீட்புக்காக திருப்பணியில் ஈடுபட்டவர். ஹட்சன் இறந்துவிட்ட தன் நண்பனின் கிறிஸ்தவ ஐக்கியத்தினால் உற்சாகத்தையும், மன உறுதியையும் பெற்றிருந்தார். 1856 ஆம் ஆண்டு பர்ண்ஸ் உள்நாட்டுப் புரட்சிக்காரரால் சிறை பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இது அவருக்குப் பேரிழப்பாகும்.
எல்லா நிலைமைகளிலும் கிறிஸ்து, ஹட்சன் டெய்லரை வழி நடத்தினார். நிங்போ என்ற துறைமுக நகரில் தன் பணியை ஆரம்பிக்க முடிவுசெய்தார். அந்நகரில் மருத்துவர் எவரும் இல்லை. நிங்போ நகருக்குச் செல்லும் வழியில் அவருடைய வேலைக்காரன் எல்லா உடைமைகளையும் திருடிக்கொண்டு அவரைத் தனியே விட்டு ஓடிப்போனான். ஆகாரக் குறைவினாலும், தூக்கமின்மையாலும் ஆயாசப்பட்டவராய், அதிகக்களைப்படைந்தார். சரீரம் பெலவீனப்பட்டதால் பாதை ஓரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இந்நிலையிலும் அவருடைய பிரதான நோக்கம், தன்னைச் சுற்றிலுமுள்ள சீனர்களைப் பற்றியதே ஆகும். தன் உடைமைகளை இழந்ததினால் ஏற்பட்ட தவிப்பு அவரிடம் காணப்படவில்லை.
கிறிஸ்துவை உடனடியாகவே பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டார். நிங்போ மொழியில் ஏற்கனவே இருந்த புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை மறுபடியும் திருத்தியமைத்தார். மரியா டையர் என்ற இளம் பெண்ணை நிங்கோ நகரில் சந்தித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் சேர்ந்து நோயுற்றோரை கவனிப்பதிலும், சீனர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும் ஈடுபட்டனர். நீண்ட நேர படிப்பு, போதனை செய்வது, பல வேறுபட்ட பருவநிலைகளில் நீண்ட பிரயாணங்களை மேற்கொள்ளுவது ஆகியவை, டெய்லர் அவர்களின் சுகத்தைப் பெரிதும் பாதித்தது. ஏழு ஆண்டுகள் இடைவிடாத சேவைக்குப்பின், அவருடைய சுகவீனத்தின் காரணமாக இங்கிலாந்து தேசம் செல்ல நேரிட்டது. ஓய்வு எடுக்கவும், நற்சுகம் பெறவும் சுய தேசத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம்
இலண்டன் நகரில் அவர் தங்கியிருக்கும்போது மருத்துவக் கல்வியை தொடர்ந்து படித்தார். சீன தேச விளக்கப் படம் ஒன்று அவருக்கெதிராக சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்தது. அதில் பதினோரு தனித்தனி பிரதேசங்களையும், முப்பத்தெட்டு கோடி மக்களையும் சித்தரித்து இருந்தது. இத்தனைக் கோடி மக்களுக்கும் சுவிசேஷத்தைச் சொல்ல, ஒரே ஒரு மிஷனெரிகூட அன்று இருக்கவில்லை. இது அவருக்கு எப்போதும் நினைவூட்டுதலாகவே இருந்தது. சீன தேசத்தின் தேவைகளை, கைப்பிரதிகளின் வாயிலாகவும், சிறு பிரசுரங்களாகவும் எழுதி வந்தார். இந்தப் பதினோரு பிரதேசங்களில் பணிபுரிய இருபத்துநான்கு மிஷனெரிகளுக்காக ஜெபித்து வந்தார். இரண்டு நாள் கழித்து ஒரு சிறு தொகையை விசுவாசத்தினாலே வங்கியில் முதலீடு செய்தார்.
சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனத்தின் பேரில், அந்தத் தொகை வைப்புத் தொகையாக இருப்பில் போடப்பட்டது. விசுவாசத்தின் விளைவாக சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம் அன்று நாட்டப்பெற்றது. “சிறிய தொகையோடு ஏராளமான கடவுளின் வாக்குத்தத்தங்களும் அன்று மிஷன் ஸ்தாபனத்திற்காக முதலீடு செய்யப்பட்டது” என்று ஹட்சன் சொன்னார்.
தேவன் அவருடைய மன்றாட்டுகளுக்குப் பதில் அருளினார். பதினோரு மாதங்களுக்குப் பின்னர், பதினாறு மிஷனெரிகளோடு சீன நாட்டிற்கு ஹட்சன் பயணமானார். அவரோடு சென்ற பதினாறு மிஷனெரிகளும், அவரைப் போலவே முழுவதுமாய் கர்த்தரைச் சார்ந்து திருப்பணிக்கு ஒப்படைத்தவர்கள். தேவ வாக்குகளை நம்பி ஏற்றுக்கொண்டு தங்களைத் தத்தம் செய்திருந்தனர். ஒருவருக்காகிலும் நிச்சயமான மாதச் சம்பளம் கிடைக்கும் என்ற உறுதியில்லை. எந்த இடத்தில் பணி செய்யப் போகிறோம். அவ்விடத்தின் நிலைமையாது என்று அறியாத நிலையில் பயணமாயினர். சீன நாட்டில் அவர்களை வரவேற்க ஒருவரும் இல்லை. உள்நாட்டுப் பகுதிக்குச் செல்லவே அனைவரும் தீர்மானித்திருந்தனர். உள்நாட்டில், வெளிநாட்டவருக்கு பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது.
கப்பல் பிரயாணத்தின் போது, ஹட்சன் குழுவினர் ஆற்றிய திருமறை உரையாடல்கள் மூலமாய் இருபது கப்பல் சிப்பந்திகள் கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். கப்பலின் மொத்த ஊழியர் முப்பத்து நான்கு பேர். “கடல் கடந்து செல்வதால் ஒரு மிஷனெரி உருவாகுவதில்லை. தன் வீட்டிலும், சுயநாட்டிலும் பயன்படாதிருக்கிற ஓர் ஆள் அயல்நாட்டிலும் கிறிஸ்துவின் சேவையில் பயனுள்ளவராய் இருக்கமாட்டார்” என்று ஹட்சன் அடிக்கடி கூறுவார்.
சீன நாட்டை மறுமுறை வந்தடைதல்
ஷாங்காய் துறைமுகத்தில் வந்து சேர்ந்த அனைத்து மிஷனெரிகளும், உயிர் ஆபத்துகளுக்குப் பயப்படாமல் உள்நாட்டிற்குள் போகத் தீர்மானித்தனர். இந்தக் குழுவிற்கு இளமைமிக்க டெய்லர், தளபதியாக தலைமை ஏற்று நடத்திச் சென்றார். அநேகம் முறை அவர்களுக்கு தங்கும் வசதியோ ஏற்ற ஆகாரமோ இருந்ததில்லை. கர்த்தரை நம்பினபடியினால் அவரே அவர்களுடைய தேவை எல்லாவற்றையும் சந்தித்தார். சிறு பிள்ளைக்கொத்த எளிய விசுவாசமே, டெய்லர் அவர்களின் வெற்றியின் இரகசியமாய் இருந்தது. “ஒவ்வொரு பிரச்சனையையும் விசுவாசத்தினால் மேற்கொண்டு வெற்றியடைவதே, கர்த்தருடைய பிள்ளைக்கு பலமும் ஊட்டமும் கொடுக்கக் கூடிய வல்லமையாக மாறுகிறது” என்று ஹட்சன் சொல்லுவார்.
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து சிறப்பான பணியினை செய்துவந்தது. இருநூற்று இருபத்தைந்து மிஷனெரிகளும், ஐம்பத்தொன்பது ஆலயங்களும், ஆயிரத்து எழுநூறு விசுவாசிகளையும் கொண்ட ஸ்தாபனமாய் விளங்கிற்று. பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கைப்பிரதிகளும், சிறு புத்தகங்களும் சீன மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. தெய்வத் திருப்பணியில் இழப்புகளும் உண்டு.
ஹட்சன் டெய்லருடைய மனைவியும் மூன்று மக்களும் இறந்து போயினர். அவருடைய மனைவி பன்னிரண்டரை ஆண்டுகள் அவருக்கு மிக உதவியாக இருந்தவள். காலரா வியாதியினால் மரித்துப்போனாள். அவர் அதிகமாய் நேசித்த அருமை மகள் இறந்தபோது, “எங்கள் இதயங்கள் வெடித்துச் சிதறுகின்றன. இந்த அனுபவம் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து நிற்கின்றன. எங்கள் இயேசு எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்” என்றும், அவர் மனைவி இறந்தபோது, “நானோ தனித்து விடப்பட்டவன் அல்ல. முன்னைக்காட்டிலும் கர்த்தர் எனக்கு அதிக நெருக்கமாக உள்ளார்,” என்றும் எழுதி வைத்தார். ஹட்சன் இப்படிப்பட்ட பெரும் இழப்புகளைக் கிறிஸ்துவின் நிமித்தம் தைரியத்தோடு தாங்கிக்கொண்டார்.
சீன நாட்டின் திருப்பணித் தேவைகளை எல்லாம் அவர் சென்ற இடமெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லுவார். ஆனால் ஒருபோதும் “பணம் தாருங்கள்” என்று கேட்டதே இல்லை. அவருக்குப் பணமோ, ஊழியர்களோ தேவைப்பட்டபோதெல்லாம், கர்த்தருக்கே தம் வேண்டுதல்களைத் தெரியப்படுத்தினார். சீன உள்நாட்டு மிஷன் பணிக்கென்று காணிக்கையெடுக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததே இல்லை. அவருடைய திட்டமான இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான், மிஷன் ஸ்தாபனம் இயங்கி வந்தது. கடவுளுக்கு மகிமையைக் கொண்டு வருவதே அவரது நோக்கம்.
சீன தேசமே எப்போதும் அவர் நினைவு
ஹட்சன் டெய்லர் பலமுறை இங்கிலாந்திற்கு வந்தபோதிலும், அவர் நினைவெல்லாம் சீன நாட்டைப் பற்றியதே. அதனால் அவர் திருப்பணிக்குத் திரும்பி விடுவார். இரண்டாவது முறையும் திருமணம் செய்து கொண்டு, சீன தேசத்தில் ஒவ்வொரு பட்டணத்தையும் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தத் தீர்மானித்தார். அவருடைய முதுகெலும்பில் விபத்தால் ஏற்பட்ட காயத்தினிமித்தம், பல மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டியதாயிற்று. சுகவீன நாட்களே, கடவுள் அவருக்கு தெளிவான வெளிப்பாடுகளைத் தந்தருளிய நாட்களாகும்.
சீன திருப்பணியின் திட்டமான செயல்படும் நோக்கங்களை வரையறுத்தார். அதற்கென்று தம் மனைவியுடன் அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவ்விடங்களிலெல்லாம் சீன தேசத்தின் ஏராளமான தேவைகளை எடுத்துச் சொன்னாரேயன்றி, பண உதவியை ஒருபோதும் கேட்டதில்லை. 1900 ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்தில் இருந்த சமயம் சீன தேசத்தில் பணிசெய்துகொண்டிருந்த எழுபத்தொன்பது மிஷனெரிக் குடும்பங்கள் சீனர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டார். அவர்களில் இருபத்தொரு பேர் மிஷனெரிகளின் பிள்ளைகளாகும். நான்கு வருடங்கள் கழித்து அவர் தமது இரண்டாவது மனைவியையும் இழந்துவிட்டார்.
டெய்லர் இங்கிலாந்து தேசத்தில் தங்கியிருக்க மனமற்றவராய், 1905 ஆம் ஆண்டு தன்னுடைய பதினோராவது பயணத்தை மேற்கொண்டார். இங்கிலாந்திலிருந்து சீனாவுக்குச் சென்ற கடைசிப் பயணமாகவும் அது அமைந்தது. சீன நாட்டில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் சாங்ஷா பட்டணத்திற்குச் செல்ல விரும்பினார். அப்பட்டணம் அவருடைய திருப்பணித் திட்டத்தில் இருந்த கடைசி மாநிலத்தின் தலைநகரமாகும். அந்நகரை சுவிசேஷத்தின் ஆரம்பப் பணிக்கென்று திறந்துவிட வந்து சேர்ந்தார். சாங்ஷா நகரில் அவர் வந்து இறங்கியதுமே, கடவுளோடு ஐக்கியப்படும்படியாகப் பரலோகம் சென்றடைந்தார்.
ஹட்சன் ஸ்டெய்லர் இறக்கும்போது, சீன உள்நாட்டு ஸ்தாபனத்தில் எண்ணூற்று நாற்பத்தொன்பது மிஷனெரிகள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். சீனநாடு கம்யூனிஸ்டுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படும்வரை, சீன உள்நாட்டு மிஷன் கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டிருந்தது. ஹட்சன் டெய்லர் உலக ஐசுவரியம் ஒன்றும் இல்லாதவர். வறுமையில் வாழ்ந்தவர். வாழ்க்கை வசதிகளை உதறித்தள்ளி, அநேகரை ஐசுவரியவான்களாக்கத் தன்னை ஏழ்மையாக்கினார். ஜீவனுள்ள தேவனை முழுவதுமாய் நம்பி சார்ந்ததே இவர் வாழ்க்கையின் இரகசியம்.
வேத வசனங்களில் காணப்படும் வாக்குகளை எல்லாம் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டவர். தேவன் எவைகளையெல்லாம் தமது வசனத்தில் வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரோ, அவைகளை நிச்சயம் செய்வார் என்ற உறுதியோடு பணியாற்றினார். “கைகூடாது, நடக்கவே நடக்காது, ஒருவரும் செய்யமுடியாது என்று மனிதன் நினைப்பவைகளைப் பார்த்து விசுவாசம் என்னும் பற்றுறுதி சிரிக்கும். கீழ்ப்படிதலும், கடவுளுடைய சித்தத்தை செய்தலும், கேள்விகளைக் கேட்டு தாமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டுவராது” என்னும் பொன்மொழிகளை ஹட்சன் அடிக்கடி கூறுவார். விசுவாசமும், கீழ்ப்படிதலும் கர்த்தருடைய திருப்பணியாளர்களின் வல்ல செயல்களின் இரகசியமாகும். நீயும் கர்த்தருடைய பணியில் விசுவாசத்தோடு கீழ்ப்படிவாயா?
பிறப்பு: கி.பி. 1832, மே 21, (இங்கிலாந்து)
இறப்பு: கி.பி. 1905, (சாங்ஷா, சீனா)
Comments (0)