வாட்ச்மன் நீ
அறிமுகம்
சீனாவில் 1903 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி நேர்மையான அரசு அதிகாரியான நிவெங் ஸ்யுவு-க்கும் ஹ்யோபிங்-ற்கும் மூன்றாவது குழந்தையாக நிடேஹெங் பிறந்தார். நிடேஹெங் என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பே வாட்ச்மன் நீ என்பதாகும். இரு பெண்குழந்தைகளை பெற்ற ஹ்யோபிங் “தனக்கொரு ஆண் பிள்ளை வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு ஊழியக்காரனாக இருப்பான்” என கண்ணீரோடு சாமுவேலுக்காக ஜெபித்த அன்னாளைப்போல கர்த்தரிடத்தில் ஜெபித்தாள். அதன் பயனாக வாட்ச்மன் நீ பிறந்தார். அவருக்கு பின் நான்கு தம்பிமாரும் இரண்டு தங்கைமாரும் பிறந்தார்கள்.
வாட்ச்மன் மனந்திரும்புதல்
சீன மொழி பாரம்பரியங்கள் இலக்கியங்களை கற்று வந்த வாட்ச்மன், வாழ்க்கையில் வெற்றி பெற கிறிஸ்தவசமயம் உதவாது என எண்ணினார். ஏனெனில் அவரது பெற்றோர் அவர் தவறுசெய்யும் போதெல்லாம் கண்டித்தும் தண்டனை கொடுத்தும் வளர்த்து வந்தனர். வெகுநாட்களுக்குபின் அவரது தாயார், ஒருமுறை அவரை அநீதியாக தண்டித்ததைக் குறித்து வாட்ச்மனிடம் மன்னிப்பு கேட்டார். இது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவரது உள்ளத்தை வெகுவாக அசைத்தது. விரைவில் அவர் தனது பதினெட்டாவது வயதில் கிறிஸ்துவை தமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
கல்லூரி படிப்பு முடிந்தபின் அனைத்தையும் தேவனுக்குரியதாக கருதத் துவங்கினார். டோரா யு என்பவர் நடத்திவந்த வேதாகம பள்ளியில் சேர்ந்து ஓராண்டு காலம் வேதாகமத்தை பயின்றார். தனது நேரத்தை, சரீர பலத்தை அறிவுத்திறனை வீணாக்க துணியவில்லை. அவற்றை தேவனுக்குக் கொடுக்க முன்வந்தார். தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்காக ஜெபித்து வந்தார். அத்தோடு அவர் எப்பொழுதும் தன் கையில் வேதாகமத்தை வைத்திருப்பதைக் கண்ட மற்ற மாணவர்கள் அவரை ‘பைபிள் டெப்போ’ எனக் கேலி செய்தார்கள். ஆனாலும் வாட்ச்மன் நீ கவலைப்படவில்லை.
நற்செய்தி பணியில் வாஞ்சை கொண்ட அவர் முதலில் “இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள இரட்சகர்” என்று கைகளில் எழுதப்பட்ட பெரிய சுவரொட்டிகளை தயாரித்து முக்கிய தெருச் சுவர்களின் நடுவே ஒட்டி வைப்பார். பண்டிகை விடுமுறை நாட்களில் வாட்ச்மேன் நீ மற்றும் அவரது நண்பர்களும் கிராமபுறங்களில் நற்செய்தி அறிவித்து வந்தார்கள். அது மட்டுமல்லாது, எழுப்புதல் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். வேதாகம ஆய்வுக்கும் ஆராய்ச்சிக்கும் நற்செய்தி பணிக்கும் தன்னை ஒப்புக்கொடுத்த அவர், வல்லமையான பிரசங்கியாகவும், ஜீவனுள்ள தியானநூல்களை எழுதுபவராகவும், விளங்கும்படி தேவன் கிருபைச்செய்தார்.
வாட்ச்மன் நீ திருமண வாழ்க்கை
வாட்ச்மன் நீ, சாரிடி சாங் என்ற பெண்மணியை திருமணம் முடித்தார். சாரிடி சாங் கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் முன் ஆடம்பரமான ஆடைகளில் விருப்பமுள் ளவராக உலகப் பிரகாரமானவராக இருந்தார். ஹங்காய் மாநகரத்தில் ஆராதனை ஜெபக்குழுக்களை உருவாக்கியவர் 1926 ஆம் ஆண்டு தி கிறிஸ்டியன் என்ற இதழை துவங்கினார். அதன் பின் அவர் காச நோயினால் பீடிக்கப்பட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த நாட்களில் அவர் தனது வாழ்வின் சாதனைகள், தோல்விகள், பாடுகளைக் கொண்ட தன் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். எனக்கென்று நான் எதையும் விரும்பவில்லை. ஆண்டவருக்கென்றே ஒவ்வொன்றையும் விரும்புகிறேன் என்று பார்பர் அம்மையார் வேதாகமத்தில் எழுதிவைத்திருந்த கூற்று அவரை சற்று அசைத்தது. கிறிஸ்துவுக்காக வாழ துணிந்து விட்டவர் கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, திபெத் போன்ற நாடுகளுக்குச் சென்று நற்செய்தியை பகிர்ந்துகொண்டார்.
சர்வாதிகார ஆட்சியின் பொதுவுடைமைவாதிகளின் சித்திரவதைகளையும் பல சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது. இதற்கிடையில் ஜப்பான் ஷாங்காய் நகரை கைப்பற்றியது. 1949 இல் பொதுவுடமைப் புரட்சியின்போது ஆயிரக்கணக்கான விசுவாசிகள் படுகொலை செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். உலகப்போர் மற்றும் உள்நாட்டு போர் காரணமாக சிலகாலம் வாட்ச்மன் நீ தனது சகோதரன் ஜார்ஜ் உடன் இணைந்து மருந்துக்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தினார். அதன் வருமானத்தை ஊழியத்திற்கென பயன்படுத்தினார். “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவா.15:5) என்ற இயேசுவானவரின் சத்தியத்தை வேதவாக்காகக் கொண்டிருந்தார்.
கிறிஸ்துவினிமித்தம் பாடுகள் அநுபவித்தல்
ஷாங்காய் நகர் கம்யூனிஸ்ட் படைகளின் கையில் 1949ஆம் ஆண்டு விழுந்தது. 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அவரது 50வது வயதில் அவர் பாதுகாப்புத் துறையினரால், சில மூப்பர்களுடன் கைது செய்யப்பட்டார். அவர், பொருளாதாரக் குற்றங்களை செய்தார், உளவு நடவடிக்கையில் ஈடுபட்டார், புரட்சியாளருக்கு எதிராக சதி செய்தார் என அவர் மீது பொய் குற்றஞ்சாட்டப் பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட வாட்ச்மன் நீ தனது இறுதிகாலம் வரை தொடர்ந்து 20 வருடங்கள் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிட்டது. எத்தகைய கொடுமை நெருக்கங்களின் மத்தியிலும் கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை. வாட்ச்மன் நீ-யின் மனைவி சாரிடி கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார். உயர் இரத்த அழுத்தத்தினாலும் கண் நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர் 1971 செப்டம்பரில் கால் தவறி கீழே விழுந்து, விலா எலும்புகள் உடைந்த நிலையில் 1972 ஏப்ரல் மாதம் தேவனண்டை சேர்ந்தார்.
கிறிஸ்துவினிடம் இளைப்பாறுதல்
தேவன் எப்போதும் எந்த மோசமான சூழ்நிலையிலும் நம் அருகிலேயே இருக்கிறார். நிறைவான சந்தோஷத்தை கொடுக்கிறார் என தன் வாழ்க்கையின் மூலம் நிரூபித்த வாட்ச்மன் நீ, தனது 69வது வயதில் 1972 ஜுன் முதலாம் நாளன்று ஆண்டவரின் நித்திய சந்தோஷத்திற்குள் சென்றடைந்தார். விசுவாச வாழ்க்கை வாழவும் கிறிஸ்துவுக்குள் உண்மை விசுவாசியாக வாழ்நாள் முழுவதும் தம்மைக் காத்துக்கொள்வதிலும் இவர் நமக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றார்.
பிறப்பு; கி.பி: 1903, நவம்பர் 4, (சீனா)
இறப்பு: கி.பி: 1972, மே 30, (சீனா)
Comments (0)