ஜான் நாக்ஸ்
ஸ்காட்லாந்து எழுப்புதலின் கனல்
இவர் சீர்திருத்தவ சபையை சேர்ந்தவர். பிரஸ்பெட்ரியன் என்ற பிரிவு சபைகளின் ஸ்தாபகர். ஜெப வீரர். எதற்கும் அஞ்சாத மாவீரன். ஸ்காட்லாந்து எழுப்புதலின் கனல்!! தேவ பயமுள்ளவராயிருந்ததால் நாட்டின் அரக்கியான ராணியே இவர் ஜெபத்தைக்கண்டு பயந்தார். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என வாழ்ந்தவர். ஜான் நாக்ஸ் ஒவ்வொரு நாளும் இரவும்,பகலும், ஜெபித்தார். “கொஞ்ச நேரமாவது தூங்க கூடாதா ” என்று கெஞ்சி கேட்ட மனைவியிடம், “என் நாடு இரட்சிக்கப்படாமல் இருக்கும்பொழுது நான் எப்படி தூங்க முடியும்”என்று பதிலளிப்பார்.
அவரின் ஒவ்வொரு இரவு ஜெபத்திலும் மிகுந்த மனவேதனையுடன் முழங்காலிலே நின்று, "ஆண்டவரே ஸ்காட்லாந்து தேசத்தை எனக்கு தாரும் இல்லாவிட்டால் நான் மடிந்து போகட்டும்" என்று கதறினான். அப்படியே தன் முழங்கால் பலத்தால் ஸ்காட்லாந்தில் பெரிய எழுப்புதலை கொண்டு வந்தான். தேவன் ஜெபத்தை கேட்டு ஸ்காட்லாந்தை அசைத்தாராம். தேவன் ஜான் நாக்ஸ்க்கு ஸ்காட்லாந்தை கொடுத்தாராம். இவர் சீர்த்திருத்த கருத்துகளை பரப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
முழங்காலின் யுத்தம் ஸ்காட்லாந்தின் ராணியை அசைத்தல்
ஜான் நாக்ஸ் என்ற பக்தன் வாழ்ந்த நாட்களில் அந்த தேசத்தை அரசாண்ட ராணி மிகவும் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தாள். அவளை அந்த தேச ஜனங்கள் "இரத்த வெறி பிடித்த மேரி" என்று அழைத்தார்கள். ஆனால் அவளோ ஜெப வீரனாய் இருந்த ஜான் நாக்ஸ்க்கு பயப்பட்டாள். அந்த மனிதன் முழங்காலிலே நின்றால் என் சரீரமெல்லாம் தீ பற்றி எரிவது போல் வேதனை உண்டாகுகிறது என்று சொல்லி நடுங்கினாள். ஸ்காட்லாந்து ராணி இவரைப்பற்றிக்கூறும்போது, இங்கிலாந்து படைகளை பார்த்தாலும்கூட பயமில்லை இவர் முழங்கால் படியிட்டு ஜெபிக்கும் ஜெபம்தான் பயமாயிருக்கு” என்பாராம். ஜெபத்தில் நம்பிக்கையோடு பிதாவிடம் வேண்டுவாராம்.
தேவப் பிள்ளைகளே நீங்களும் நானும் முழங்காலிலே நின்றால் அதிகாரிகள் பயப்பட வேண்டும். மந்திரிகள் நடுங்கவேண்டும். மட்டுமல்ல சாத்தானும் அவனுடைய சேனைகளும் அதிர வேண்டும். பாதாளத்தை ஒரு நடுக்கம் பிடிக்க வேண்டும். ஜான் நாக்ஸ் என்ற பக்தனைப் பார்த்து சிலர்: பெரிய ராணியை எதிர்த்து நிற்க, தேசத்தின் ராணுவத்தை எதிர்த்து நிற்க எப்படி உமக்கு இந்த தைரியம் வந்தது என்று கேட்டனர்.
அதற்கு அவர் சொன்னார், எந்த ஒரு மனிதன் பரலோக ராஜாவுக்கு முன்பாக நிற்கிறானோ அவன் உலக ராணியைக் குறித்து கவலைப்படமாட்டான். பரலோக தேவ தூதர்களின் சேனை என்னோடு இருக்கும் போது பூலோக ராணுவத்திற்கு நான் ஏன் பயப்பட வேண்டும் என்று சொன்னார். இங்கிலாந்து தேசத்திலே அநாதை விடுதி நடத்தின ஜார்ஜ் முல்லர் என்பவர் ஆயிரக்கணக்கான ஜெப விண்ணப்பங்களுக்கு பதில் பெற்றவர். பத்தாயிரம் அனாதை மாணவர்களை பல ஆண்டுகள் வைத்து படிப்பித்தார். உணவளித்தார். பாதுகாத்துக் கொண்டார். அவர் வேதாகமத்தை 1000 முறை முழங்காலிலே நின்று படித்தவர். ஆகவே இவரால் கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களை செய்ய முடிந்தது.
பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஜெபத்தைப் பற்றி ஜான் நாக்ஸ் எழுதியது:
“ஆவி எவ்வாறு நமக்கு எவ்வளவு பரிந்து பேசுகிறது. ஆகவே, தேவனுடைய ஆவியானவர் நம்முடைய பலவீனங்களை ஆதரிக்காமல் தன்வாயால் வெளிப்படுத்த முடியாத இடைவிடாத பெருமூச்சுகளுடன் நமக்குப் பெரிதும் பரிந்து பேசுகிறார், (ரோமர் 8:26), தேவனுடைய சித்தத்தின்படி நாம் எதை ஆசைப்படுவோம் என்ற நம்பிக்கை நமக்குண்டு. பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுவதோ அல்லது ஜெபிப்பதோ அல்ல, ஆனால் அவர் நம் மனதைத் தூண்டிவிடுகிறார், ஜெபிக்க ஒரு ஆசையை அல்லது தைரியத்தைத் தருகிறார், மேலும் நாம் பிரித்தெடுக்கப்படும்போது அல்லது அதிலிருந்து இழுக்கப்படும்போது துக்கப்படுகிறார். “
பரிசுத்த ஆவியானவர் இன்று ஜெபத்திற்காக உங்கள் மனதை அசைக்கட்டும்
ஒரு தனிப்பட்ட மனிதனின் ஜெபம் ஒரு நாட்டையே இரட்சிப்புக்குள் கொண்டு வர முடியும் என்றால்! நீயும், நானும் ஜெபித்தால் இந்தியா ஏன் இரட்சிக்கப்படாது? ஜான்நாக்ஸ் ஜெபத்தைக் கேட்ட ஆண்டவர் நம் ஜெபத்தையும் கேட்பார் இதை ஓா் சவாலாக எடுத்து நம்மை ஜெபிக்க ஒப்புக்கொடுப்போம்! நம் காலத்திலேயே இந்தியாவின் இரட்சிப்பை நம் கண்கள் காணட்டும். சூழ்நிலையை பார்க்காதே இயேசுவை நோக்கிப்பார். இந்தியாவில் எழுப்புதல் நிச்சயம்.
பிறப்பு: கி.பி: 1505, (ஸ்காட்லாந்து)
இறப்பு: கி.பி: 1572, நவம்பர் 24, (எடின்பர்க், ஸ்காட்லாந்து)
Comments (0)