டாமினிக் சாவியோ
மதிய உணவு நேரம், அனைவரும் தங்கள் உணவுகளை தட்டில் எடுத்துக் கொண்டனர். வேகமாக அதனை உண்ணத் தொடங்கினர். சிறுவன் டாமினிக் சாவியோ அதனைக் கண்டு ஆவேசமானார். மிருகங்களை விடக் கேவலமானவர்கள் போல் உணவு உண்ண அவருக்கு விருப்பமில்லை; கடந்து சென்றார் சாவியோ.
சிறு வயதிலேயே புனிதத்தையும், தவ வாழ்வையும் விரும்பியவர்; கடுஞ்சொற்களையும், கெட்ட சொற்களையும் பேசவோ, கேட்கவோ விரும்பாதவர்.
புனித டான்போஸ்கோவின் முதல் மாணவர்களில் ஒருவராக பக்தி நெறியில் களங்கமற்றவராய் வளர்ந்தார். வேதாகமத்தை தெளிவாகக் கற்றார். அனுதின வேதாகம வாசிப்பும், ஜெபமும் இவரது ஆவிக்குரிய வாழ்வுக்கு வளம் சேர்த்தது. நேர்மையையும், நிதானத்தையும் கடைபிடித்து மற்றவர்களுக்கு சாட்சியான வாழ்வு வாழ்ந்தார்.
காற்றோ, குளிரோ, மழையோ எதையும் பொருட்படுத்தாது அதிகாலமே ஆலயம் செல்லும் வழக்கம் உடையவர். தீய சக்திகள் காட்டுத் தீ போல பரவிக்கொண்டிருந்த காலத்தில் புனிதத்தை இளம் உள்ளத்தில் சுமந்து கொண்டு மற்றவர்களுக்கு அறைகூவலாய் வாழ்ந்தவர். தன்னை நாடி வந்த எவருக்கும் தாராளமாக உதவும் தியாக சிந்தை உடையவராக, அன்பில் செழித்து வளர்ந்தார்.
1857ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 9ஆம் நாள், அற்புதக்காட்சி ஒன்றைக் கண்டார். “ஆஹா என்ன இன்பமயமான அற்புதக்காட்சி” என்று விண்ணகக் காட்சியை கண்டவராய் மண்ணகம் பிரிந்தார். கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதராக போற்றப்படும் சாவியோ உண்மையிலேயே புனிதராக வாழ்ந்தார்.
பிறப்பு: கி.பி:1842, ஏப்ரல் 02, (பியட்மன்ட், இத்தாலி)
இறப்பு: கி.பி:1857, மார்ச் 09, (இத்தாலி)
Comments (0)