தாமஸ் அக்வினாஸ்
1225ஆம் ஆண்டு, ஒரு அரச பரம்பரையின் அற்புத மகனாகப் பிறந்தார். தாமஸ் அக்வினாஸ். ஆடம்பரமான வாழ்க்கை அவருக்கு வெறுப்பைத் தரவே சொத்து சுகங்களைத் துறந்து எளிய வாழ்வு நடத்தும்படி துறவறத்தை மேற்கொண்டார்.
ரோம் நகர் நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும்போது குடும்ப சேவகர்களால் பிடிக்கப்பட்டு வீட்டினுள் அடைக்கப்பட்டார். வெளியே செல்ல முடியாமல் தவித்த போது தனது சகோதரியின் மூலம் அநேக புத்தகங்களை வாங்கி படித்தார். ஒருநாள் அனைவருடைய கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
துறவற சபையில் சேர்ந்த இவர், தியானங்களில் தன் மனதை நிலை நாட்டினார். 1250ஆம் ஆண்டு குருவாகப் பொறுப்பேற்றார். எழுத்துப் பணியே தனது பிரதானப் பணி என்று கருதிய இவரால் எழுதப்பட்ட ‘இறையியல் சுருக்கம்’ என்ற புத்தகமே இறையியல் படிப்பிற்கு ஓர் ஆணிவேர். இதனை அறிந்திராத இறையியல் அறிஞர்கள் இருக்கமாட்டார்கள்.
தனது இல்லத்தில் ஒரு நாள் தீவிர சிந்தனை செய்து கொண்டிருந்தார் இவர். சில சகோதரர்கள் அவரின் சிந்தனையைக் கலைத்து, “குதிரை பறக்கிறது, வந்து பாரும்” என்று அவரை அழைத்தார்கள். அவர் வெளியே வந்து எட்டிப் பார்க்கவே, “பொய் சொல்லி உம்மை முட்டாளாக்கி விட்டோம்” என்று கொக்கரித்தனர். அக்வினாஸ் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்து, “பொய் சொல்வதைக் காட்டிலும் முட்டாளாவது ஒன்றும் பெரிதல்ல” என்று உத்தம குணங்களையும் கடைபிடித்தவர் அக்வினாஸ்.
தமது வாழ்நாளில் 49 வருடங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் கைப்பட எழுதியுள்ளார். இறைஞானம் மிகுந்த இவர், இறையியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதோடு, இறைஞானம் தேடும் அனைவருக்கும் குருவாக என்றுமே காணப்படுவார்.
பிறப்பு: கி.பி:1225, (அக்வினோ, இத்தாலி)
இறப்பு: கி.பி:1274, மார்ச் 07, (ரோம்)
Comments (0)