பிரான்சிஸ் அஸ்பரி
13 வயது இளைஞன் அவன், வேதாகமத்தைப் புரட்டி படிக்க ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி நிறைய ஆரம்பித்தது. ஆம், நீங்கள் நினைப்பது போன்று அவன் உள்ளத்தில் இயேசு வந்துவிட்டார்.
இயேசு வந்த உள்ளம் ஆனந்தத்தால் ஆர்ப்பரிக்கும் அல்லவா? ஆனந்தக் கூத்தாடினார். பிரான்சிஸ் அஸ்பரி. 18 வயதிலேயே போதகருக்குரிய தகுதியைப் பெற்றுவிட்டார். 22 வயதில் அபிஷேகம் செய்யப்பட்டார்.
1771ஆம் வருடம் மெதடிஸ்ட் சபையை ஆரம்பித்த ஜாண் வெஸ்லி மூலம் தன்னார்வ ஊழியராக அமெரிக்கா நோக்கி பயணமானார். உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்த சுவிசேஷ வாஞ்சையை அமெரிக்காவில் பற்றி எரியச் செய்தார். ‘மெதடிஸ்ட் எபிஸ் கோபல் சபையை’ அங்கு ஆரம்பித்தார். சிறிதும் பெரிதுமான இடங்களில் நின்று சத்தமிட்டு பிரசங்கித்தார். ஆண்டவருக்கென ஆத்துமாக்கள் ஆயிரக்கணக்கில் ஆதாயமாக்கப்பட்டன.
ஒரு வருடத்திற்கு 6,000 மைல்களுக்கு மேல் சுற்றித் திரிந்து 300 முதல் 500 பிரசங்கங்கள் செய்தார். ஒவ்வொரு நாளும் ஆத்தும ஆதாயக் கூட்டங்களை நடத்தினார். இவருடைய தலைமையின் கீழ் 2,14,000 மக்களும், 700 போதகர்களும் பணியாற்றினர்.
1784ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள மெதடிஸ்ட் சபை அனைத்திற்கும் தலைவராக ஜாண் வெஸ்லியால் நியமிக்கப்பட்டார். அமெரிக்கா முழுமைக்கும் மிகவும் பிரபலமானவராகக் காணப்பட்ட அஸ்பரி, பேராயராகவும் பொறுப்பை ஏற்றார்.
கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இவரை உயர்வுக்கு அழைத்துச் சென்றன. மக்களின் சிறந்த மாதிரியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். தன் மிஷனெரி பயணமாக 2,70,000 மைல்களுக்கு மேல் பயணம் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்த இவர் அமெரிக்காவின் அப்போஸ்தலனாவார்.
பிறப்பு: கி.பி:1745, ஆகஸ்ட் 20, (ஹன்ட்ஸ்வொர்த், இங்கிலாந்து)
இறப்பு: கி.பி:1816, மார்ச் 31, (அமெரிக்கா)
Comments (0)