போப் 2ஆம் ஜான்பால்
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக விளங்கும் போப் வரிசையில் இதுவரை 264 பேர் பதவி வகித்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரிலும் சிறந்தவராகவும், மிகவும் புகழ் பெற்றவராகவும் விளங்கியவர் போப் 2ஆம் ஜான்பால்.
1920ஆம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்தார். இறையியல் பயிற்சி பெறும்போது ஹிட்லரின் நாசிப் படைகள் போலந்து நாட்டை கைப்பற்றியக் காரணத்தால் இவர் படித்த பல்கலைக்கழகம் மூடப்பட்டது. எனவே ஒரு சுரங்கத் தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
ஆண்டவரின் திட்டப்படி கத்தோலிக்கச் சபையில் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். பின்னர், சரித்திரம் பேசும் சாதனைகளை படைக்கும்படியாக போப்பாக தெரிந்தெடுக்கப்பட்டார். தனது ஆன்மீக பலத்தை கொண்டு பல மாற்றங்களை கொண்டு வந்தார். ஜனநாயக உரிமைகளுக்காக போராடி வந்த தொழிற்சங்க அமைப்புகளுக்கு ஆதரவு கரம் நீட்டினார். ஒவ்வொரு மனிதனின் உரிமைகளும், மத உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தார். இஸ்ரவேல் நாட்டுடன் வாட்டிகனுக்கு நெருங்கியத் தொடர்பை ஏற்படுத்தினார்.
சமுதாயத்தில் உள்ள அநீதிகளைக் களைய முற்றிலும் பாடுபட்டார். கருத்தடை செய்வதைச் சட்டமாக்கும் செயலை எதிர்த்துப் போரிட்டார். கருவுற்றிருக்கும் குழந்தைகளுக்கும் வாழ உரிமையுண்டு என்று முழங்கினார். ஓரினச் சேர்க்கைகளைக் கண்டித்தார். நோயாளி சாகும் முன் உயிரைப் பறிக்கும் கருணைக் கொலை முறையை அகற்றப் பாடுபட்டார். தன்னைத் துப்பாக்கியால் சுட்ட இளைஞனையும் சிறையில் சந்தித்து மன்னிப்பு அருளினார். அவர் கத்தோலிக்கத் தலைவர் மட்டுமின்றி நல்லதொரு ஆன்மீகத் தலைவராகவே வாழ்ந்து மறைந்தார்.
பிறப்பு: கி.பி:1920, மே 18, (வேடோவெய்ஸ், போலந்து)
இறப்பு: கி.பி:2005, ஏப்ரல் 02,
Comments (0)