மார்ட்டின் பியூசர்
சீர்திருத்தம் என்ற வார்த்தையைக் கேட்ட உடன் நினைவுக்கு வருபவர்கள் மார்ட்டின் லூத்தர் மற்றும் ஜான் விக்ளிப், ஆனால் பலருக்கு மார்ட்டின் பியூசர் நினைவுக்கு வருவதில்லை.
மார்ட்டின் பியூசர் ஓர் சிறந்த சீர்திருத்தவாதி, அநேக ஆவிக்குரிய புத்தகங்களையும் விளக்க உரைகளையும் எழுதியவர். டொமினிக்கன் குழுவிலிருந்து தன்னுடைய ஆவிக்குரிய பயணத்தை ஆரம்பித்தவர். 1521ஆம் ஆண்டு புராட்டஸ்டண்டு திருச்சபையைத் தழுவினார். எனவே 1522ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்கச் சபையிலிருந்து நீக்கப்பட்டார்.
அக்காலத்தில் ஒரு பெரிய குழப்பமானது புரட்டஸ்டண்டு திருச்சபையில் காணப்பட்டது. எது புராட்டஸ்டண்டு திருச்சபை? மார்ட்டின் லூத்தரைப் பின்பற்றிய சபையா? அல்லது ஸ்விங்கிளியைப் பின்பற்றிய சபையா? ஏனெனில் பல கருத்து வேறுபாடுகள் மலிந்து கிடந்தன. ஆங்காங்கே சிறுசிறு சபைகள் தோன்றலாயின. புரட்டஸ்டண்ட் திருச்சபைக்குள்ளே பிளவுகள் பிறந்தன.
மார்ட்டின் பியூசர் இந்நிலைகளைக் கண்டு மிகவும் வேதனையடைந்தார். சிதறிக் கிடந்த புரட்டஸ்டண்ட் மக்களை இணைக்க விரும்பினார். ஆண்டவரின் உதவியுடன் செயல்பட ஆரம்பித்தார். முயற்சிகள் பல நடந்தும் ஒற்றுமை ஏற்படவில்லை. மனம் நொந்து போனார். ஆனால் இவருடைய கருத்துக்களால் கால்வின் மிகவும் கவரப்பட்டார்.
மார்ட்டின் தான் எழுதிய “இயேசு கிறிஸ்துவின் அரசு” என்ற நூலால் புகழ் பெறத் தொடங்கினார். இங்கிலாந்து அரசு இவரை அழைத்தது. அங்கு தாமஸ் கிராண்மர் என்ற பேராயர் இவரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசியராக அமர்த்தினார். கிறிஸ்துவின் ராஜ்யத்தை அங்கே கட்ட ஆரம்பித்தார்.
1551ஆம் ஆண்டு மரணமடைந்த இவரின் எலும்புகள் மேரி டியூடர் என்ற கத்தோலிக்க அரசியால் தோண்டி எடுக்கப்பட்டு சுட்டெரிக்கப்பட்டது. கல்லறையும் நாசமாக்கப்பட்டது. திருச்சபைகளுக்குள் ஒற்றுமை என்பது தகர்ந்து போனது.
பிறப்பு: கி.பி:1491, நவம்பர் 11, (பிரான்ஸ்)
இறப்பு: கி.பி:1551, பிப்ரவரி 28, (இங்கிலாந்து)
Comments (0)