ஜான் பெர்க்மான்ஸ்
பெல்ஜியத்திலுள்ள டியெஸ்டில் என்ற ஊர். சகரியா பெர்க்மான்ஸ் மற்றும் எலிசபெத் என்பவருக்கு மகனாக பிறந்தார் ஜான் பெர்க்மான்ஸ். சிறு வயதிலேயே மிகுந்த ஒழுக்கத்துடனும், பக்தியுடனும் வளர்க்கப்பட்டார். வெள்ளிக்கிழமைதோறும் உபவாசத்துடன் ஜெபிக்கும் பழக்கம் கொண்டவர்.
14 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தி, தொழில் செய்யும்படி தந்தையால் வற்புறுத்தப்பட்டார். ஆயினும், இவரது அபார புத்திக்கூர்மையினால் தன் படிப்பை மீண்டும் தொடர்ந்தார். 17ஆம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். துறவற வாழ்வை விருப்பத்துடன் ஏற்று மக்க்ளுக்கு சேவை செய்ய தன்னை அர்ப்பணித்தார்.
இவர் அபூர்வ பக்தியும், புத்தியும் உள்ளவராதலால் மேல் கல்வி கற்க ரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். நண்பர் ஒருவரோடு இணைந்து 900 மைல்கள் நடந்தே ரோம் நகருக்கு சென்றார். கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலும், பக்தியும் இவர் நடை பயணத்தில் உற்சாகத்தை தந்தன. தன் ஒழுக்கமான வாழ்வாலும், உதவி செய்யும் குணத்தாலும் எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றார்.
தியானத்தில் அதிக நேரங்களை செலவிட்டார். உலகத்தின் ஆசா பாசங்களைத் துறந்து, உண்மையில் நாட்டம் கொண்டார். துறவற சகோதரர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்து காட்டினார்.
“செய்வன திருந்த செய்” என்ற பழமொழிக்கேற்ப ஒவ்வொரு செயலிலும் பரிபூரணத்தை வெளிப்படுத்தினார். வார்த்தையை விட செயல் முக்கியம் என்பதில் மிகவும் கருத்துள்ளவராக இருந்தார். பிறரிடம் எப்பொழுதும் நற்குணங்களையே காண ஆரம்பித்தார்.
கழிவறையை சுத்தம் செய்யும் பணியானாலும், நோயுற்றோருக்கு உதவும் பணியானாலும் எளியவருக்கும், குழந்தைகளுக்கும் ஞான உபதேசம் கொடுக்கும் பணியானாலும் எல்லாவற்றையும் மனதார ஏற்று, சிறப்பாக நடத்தினார். உண்மை பக்தராக உலகில் வாழ்ந்து காட்டினார்.
பிறப்பு: கி.பி:1599, மார்ச் 13, (பெல்ஜியம்)
இறப்பு: கி.பி:1621, ஆகஸ்ட் 13, (ரோம்)
Comments (1)