ஜான் ரோஜர்ஸ்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக நிலைத்து நின்று இரத்த சாட்சியாக மரிப்பது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய சிலாக்கியம் அல்ல. இச்சிலாக்கியம் பெற்றோர், பேறுபெற்றவர்கள் ஆவர். 1555ஆம் ஆண்டு இதே நாள் பிப்ரவரி 4ஆம் தேதி. மாபெரும் கூட்டத்தின் நடுவே கம்பத்தில் கைகால்கள் கட்டப்பட்டவராக சுற்றிலும் விறகு கட்டைகள் அடுக்கப்பட்டுத் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் ஜான் ரோஜர்ஸ்.
“இரத்த மேரி” என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அரசியின் ஆட்சிக்காலம் அது, கத்தோலிக்க மதம் சாராத புரோட்டஸ்டண்டுகள் தேடிப் பிடிக்கப்பட்டு இரத்த சாட்சிகளாக்கப்பட்டார்கள். அரசாட்சியில் கொடுங்கோன்மை கோரதாண்டவமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆயினும், புரட்சியாளர்கள் தங்கள் புதுமைகளை கிறிஸ்துவுக்குள் மிகுந்த தைரியத்துடன் செய்து வந்தனர்.
ஜான் ரோஜர்ஸ் 1500ஆம் ஆண்டு பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். கத்தோலிக்கப் போதகராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், ஜான் விக்ளிப்பின் நட்பைப் பெற்று கிறிஸ்துவின் தொண்டரானார். அனைவர் கைகளிலும் வேதாகமம் கிடைக்க வேண்டும் என்ற ஆவல், அவர் உள்ளத்தில் எழுந்தது. இந்நிலையில் ஜான் விக்ளிப் கலகக்காரர் என்று கைது செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். எனவே விக்ளிப் மொழிபெயர்த்த வேதாகமத்தின் பிரதிகளை ஆங்கிலத்தில் வெளியிட முயற்சிகளை மேற்கொண்டார். மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் மொழிகளில் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தனர்.
இறுதியாக ஜான் ரோஜர்ஸ் எதிரிகளின் கைகளில் சிக்கினார். வேதாகமத்தை வெளியிட்ட காரணத்திற்காக அவரைத் தீயிலிட்டு உயிரோடு கொளுத்தினர். மரண வேளையிலும், கிறிஸ்துவின் மீது மிகுந்த பற்று கொண்டவராக தன் விசுவாசத்தை நிலை பெறச் செய்தார்.
பிறப்பு: கி.பி:1500, (டெரிடென்ட், இங்கிலாந்து)
இறப்பு: கி.பி:1555, பிப்ரவரி 4, (இங்கிலாந்து)
Comments (0)