லூட்விக் நோம்மென்ஸன்
“என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.” 20 வயதான லூட்விக், கால் உடைந்த நிலையில் படுக்கையில் படுத்திருந்தார். மேற்கண்ட வசனத்தை மீண்டும் மீண்டும் படித்தார். மிகவும் சோகமான குரலில் தன் தாயை அழைத்தார்.
அம்மா நான் மீண்டும் நடக்க முடியுமா? ஆண்டவர் என் தேவையை சந்திப்பாரா? நான் கேட்கும் உதவியை அவர் செய்வாரா? தாய் மிகுந்த நம்பிக்கையுடன் தன் மகனின் கரங்களைப் பற்றிப்பிடித்து கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொள்ளச் செய்தார். மூன்று வருடங்கள் கடந்தன. ஓர் நாள், தன் படுக்கையை விட்டு குதித்து எழுந்தார், நடந்தார், ஓடினார்.
24 வயது இளைஞர் அவர். கையில் வேதாகமத்துடன் சுமத்திரா தீவை நோக்கி பயணமானார். இதுவரை கிறிஸ்து யார் என்பதையே அறியாத மக்களுக்குத் தன் வாழ்வில் நடந்த அற்புதங்களை எடுத்துக் கூற மாபெரும் மிஷனெரியாக சென்றார்.
‘பேபாக்’ என்ற மக்கள் கூட்டம். பல இடையூறுகளின் மத்தியில் பொறுமையுடன் அவர்களுக்கு கிறிஸ்துவைப் பிரசங்கித்தார். அவர்கள் மொழியிலேயே வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். 1862ஆம் வருடம் 2000 ஆத்துமாக்களை ஆதாயம் செய்தார். 1878ஆம் ஆண்டு புதிய ஏற்பாட்டை பேபாக் மொழியில் வெளியிட்டார். பெரும் புதையலைப் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் மக்கள் அனுதினமும் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பித்தனர்.
மக்களுடைய கலாச்சாரத்தை மாற்றாமல் மக்களோடு மக்களாகப் பணி செய்த நோம்மென்ஸன் 1918ஆம் ஆண்டு இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தபோது 1,80,000 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது இந்தோனேஷியாவில் மாபெரும் கிறிஸ்தவ மக்கள் தொகை உள்ள இடம் சுமத்திரா தீவே ஆகும். நோம்மென்ஸன் அவர்களின் கனவு நனவானது. இறை சித்தம் நிறைவேறியது.
பிறப்பு: கி.பி:1834, பிப்ரவரி 6, (டென்மார்க்)
இறப்பு: கி.பி:1918, மே 23, (சுமந்திரா தீவு)
Comments (2)